Published : 29 Aug 2021 03:00 AM
Last Updated : 29 Aug 2021 03:00 AM

பெண்கள் 360: பெண்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லும் தாலிபான்

பெண்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லும் தாலிபான்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்காக வீட்டுக்கு வெளியே செல்லக் கூடாது என்றும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதே அவர்களுக்குப் பாதுகாப்பானது என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். இது பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்வரை பின்பற்றப்பட வேண்டிய தற்காலிகக் கட்டுப்பாட்டு நடைமுறைதான் என்றும் அவர் கூறியுள்ளார். தாலிபான் பாதுகாப்புப் படையினருக்குப் பொது இடங்களில் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தாலிபான் செய்தித் தொடர்பாளரின் இந்தப் பேச்சு பெண்கள் விஷயத்தில் தாலிபான்கள் சர்வதேசச் சமூகத்துக்கு அளித்துவரும் வாக்குறுதிகளுக்கு முரணானதாக இருக்கிறது. இது தற்காலிக ஏற்பாடு என்று அவர் கூறினாலும் எவ்வளவு காலம் தொடரும் என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை. இந்தச் சூழலில் தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு ஆப்கானில் பொதுமக்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறித்த நம்பத்தகுந்த அறிக்கைகள் கிடைத்திருப்பதாக ஐ.நா., கூறியுள்ளது. ஐ.நா., மனித உரிமைகள் தூதர் மிஷெல் பாச்லெட் “பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பது அடிப்படையான கடமைகளில் ஒன்று” என்று கூறியுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஐ.நாவின் நிலையான உறுதிப்பாட்டைத் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேநேரம் ஆப்கானுக்கென்று ஐ.நாவின் சிறப்பு விசாரணை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை குறித்து இந்தத் தீர்மானத்தில் எதுவும் குறிப்பிடப்படாதது சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

பாலியல் பலாத்காரம் வேடிக்கைக்குரியதல்ல

மைசூருவில் லலிதாத்ரிபுரா லே அவுட் அருகில் 23 வயது எம்.பி.ஏ மாணவி திருடர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் ஒருநாள் இரவு நேரத்தில் அந்தப் பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த திருடர்கள் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து அவருடன் வந்துகொண்டிருந்த ஆண் நண்பரைக் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுள்ளது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலாத்காரத்துக்குள்ளான பெண் இன்னும் அபாயக் கட்டத்தில் இருப்பதாகவும் அதனால் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற முடியவில்லை என்றும் காவல்துறை கூறியிருக்கிறது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தச் சூழலில் கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா, இரவு நேரத்தில் பாதுகாப்பு குறைவான பகுதிகளுக்கு அந்தப் பெண் தன் நண்பருடன் தனியாகச் சென்றது ஏன், என்று கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது குற்றம் சுமத்தும் அமைச்சரின் பேச்சை எதிர்க்கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்துத் தான் கூறிய கருத்தை வைத்து காங்கிரஸ் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயல்வதாக மீண்டும் பிரச்சினைக்குரிய கருத்தை அமைச்சர் பேசியிருக்கிறார். பாலியல் பலாத்காரம் என்பது ஒரு பெண்ணின் இயற்கையான பாலின அடையாளத்துக்காகவே அவர் மீது இழைக்கப்படும் மிகப்பெரும் கொடுமை. அத்தகைய கொடுமையைக் குறிக்கும் சொல்லை வேடிக்கைக்குரிய பொருளில் பயன்படுத்துவது பெரும் கண்டனத்துக்குரியது. ஆனால், சாமானியர்கள் முதல் நாடறிந்த பிரபலங்கள்வரை பாலியல் பலாத்காரத்தை மையப்படுத்திய நகைச்சுவைகளைப் பொதுவெளியில் பகிர்கிறார்கள். அரசியல் சாசனப்படி பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சரும் இந்தப் போக்குக்கு விதிவிலக்கல்ல என்பதன் மூலம் பாலினம், பாலியல், அவை தொடர்பான அத்துமீறல் போன்ற விஷயங்கள் குறித்த புரிதலில் நம் சமூகம் எவ்வளவு மோசமாகப் பின்தங்கியிருக்கிறது என்பது மீண்டும் உணர்த்தப் பட்டிருக்கிறது. அதேநேரம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சாட்டும் அமைச்சர் ஞானேந்திராவின் கருத்தைத் தான் ஏற்கவில்லை என்றும் அப்படிப் பேசியதற்காக அவரிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறியிருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

உச்ச நீதிமன்றத்துக்குப் பெண் தலைமையேற்க வாய்ப்பு!

உச்ச நீதிமன்றத்துக்கு கொலிஜியம் பரிந்துரைத்த ஒன்பது புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான கடிதங்களில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 26-ம் தேதி கையெழுத்திட்டார். இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரிக்கும். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெறப்போகிறவர்களில் தெலங்கானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பாலா திரிவேதி ஆகிய மூவர் பெண்கள்.

2019க்குப் பிறகு உச்ச நீதிமன்றக் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்ற பிறகு அவர் தலைமையில் ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய கொலிஜியம் குழு கடந்த சில வாரங்களுக்கு முன் ஒன்பது நீதிபதிகளைப் பரிந்துரைத்தது. முதன்முறையாக ஒரே நேரத்தில் மூன்று பெண் நீதிபதிகளைப் பரிந்துரைத்திருப்பதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் பிரதிநித்துவத்தை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை கொலிஜியம் உணர்த்தியிருக்கிறது. மேலும், இந்த ஒன்பது நீதிபதிகளில் மூவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பு இருக்கிறது. இவர்களில் நீதிபதி நாகரத்னா பணி மூப்பு அடிப்படையில் 2027-ல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக்கப்பட வேண்டும். அது நிகழ்ந்தால் இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு முதல் பெண் தலைமை நீதிபதி கிடைப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x