Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM

பசுமை சி்ந்தனைகள் 20: அனைவரையும் உள்ளடக்கிய சூழலியல் மலர வேண்டும்

அரசியல், சமூகம், அடிப்படைக் கட்டமைப்பு வசதி, திட்ட வரைவு, முன்னேற்றத்துக்கான செயல் பாடுகள் தொடங்கி, பயன்பாட்டு மொழிகூட அனைவருக்குமான உரிமைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிற கோரிக்கை அண்மைக் காலத்தில் அதிகரித்துவருகிறது. ஒடுக்கப்பட்டவர்களையும் பெண்களையும் சிறுமைப்படுத்தும் சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற குரலும் இதன் நீட்சியே.

இந்தக் கோணத்தில் சூழலியல் செயல்பாடுகளையும் அணுகிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சூழலியல் செயல்பாடுகளும், சூழலியல் சீர்கேடுகளுக்கு முன்வைக்கப்படும் தீர்வுகளும் அனைவரின் தேவைகளையும் அன்றாடச் சிக்கல்களையும் கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட வேண்டும். சூழலியல்சார் செயல்பாடு அனைவரையும் உள்ளடக்கியதாக (Inclusive environmental activism) இருக்க வேண்டும்.

யாருக்கான சூழலியல்?

சூழலியல்சார் தீர்வுகளை ஒற்றைத்தன்மையுடன் அணுகுவதால் எந்தெந்த சாரார் விலக்கப்படுகிறார்கள் என்பதைப் பல உதாரணங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. சூழலியலைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் இயற்கைக்கு இணக்கமான கட்டடங்கள் (Green buildings) பலவும் மாற்றுத் திறனாளிகள் அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் வசதியானவையாக இல்லை. ஆஸ்துமா போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் இன்ஹேலர் கருவிகள் சூழலை மாசுபடுத்துகின்றன என்றொரு ஆய்வு வெளிவந்தது. சுவாச நோய்களைத் தீவிரப்படுத்தும் காற்று மாசைப் பற்றி ஒன்றும் பேசாமல் நோயுற்றவர்களைக் குற்றவாளி களாகச் சித்தரிக்கும் இந்தப் போக்கு மாற வேண்டும் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளையர்கள் தங்கள் கண்ணோட்டத்தி லிருந்து மட்டுமே சூழலியல் செயல்பாடுகளை முன்னெடுக்கிறார்கள் என்று கறுப்பின மக்கள் நெடுங்காலமாகவே குற்றம்சாட்டி வருகிறார்கள். “எப்போது இந்த நாட்டிலிருந்து துரத்தப்படுவோம் என்பது தெரியவில்லை, இதில் சூழலியல் செயல்பாடுகளுக்கு நாங்கள் எப்படிப் பங்களிக்க முடியும்? எங்களுக்கான சமூகநீதியை முதலில் உறுதிசெய்யுங்கள்” என்று அமெரிக்காவில் வசிக்கும் லத்தீன் அமெரிக்கர்கள் குரல் எழுப்புகிறார்கள். ஆதிக்க மனப்பான்மையோடு சூழலியல் தீர்வுகள் முன்வைக்கப்பட்டதால், தங்களுக்கான இடம் அங்கே இல்லை என்பதை உணர்ந்த தொல்குடிகள், அவற்றை முற்றிலுமாக நிராகரித்த வரலாற்றுச் சான்றுகளும் உண்டு.

சூழலியல் பெண்ணிய ஒடுக்குமுறை

பாலினம் சார்ந்த வேற்றுமைகள் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தில், “இனி என் குடும்பம் பசுமைக் குடும்பமாகச் செயல்படும், மரபுசார் வாழ்வுக்குத் திரும்பப் போகிறோம்”என்று ஒரு குடும்பத்தலைவர் முடிவெடுத்தால், அதைச் செயல்படுத்தும் மொத்த பொறுப்பும் பெண்கள் தலையில் விழுந்துவிடுகிறது. பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டலைக் கண்டுகொள்ளாமல், பணிச்சுமையைக் குறைக்கும் இயந்திரங்கள் சூழலியலுக்கு எதிரானவை என்று முன்னிறுத்தப் படுவதால், அவற்றைக் கைவிட்டு முதுகு ஒடிய வேலைசெய்யும் கட்டாயத்துக்குப் பெண்கள் ஆளாகிறார்கள்.

இந்தியாவில் வெறும் 38 சதவீதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின் பயன்படுத்துகிறார்கள் எனவும், மீதம் உள்ளவர்கள் பொருட்செலவு குறைந்த துணி - பஞ்சு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள் எனவும் தேசிய குடும்பநல ஆய்வு அறிக்கை (2018) தெரிவிக்கிறது. இது மாதவிடாய் சுகாதாரத்தைப் பாதித்து நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், சானிட்டரி நாப்கின் பயன்பாடு சூழலுக்குச் சீர்கேடு விளைவிக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக, எல்லாப் பெண்களும் விலை உயர்ந்த மாதவிடாய்க் குப்பிகளை (Menstrual Cups) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. மாதவிடாய் குப்பிகளைச் சரியாகப் பயன்படுத்த வேண்டுமானால் கழிவறையும் போதுமான தண்ணீரும் இருக்க வேண்டும். அதுவும் எல்லாப் பெண்களுக்கும் சாத்தியமில்லை.

அரசியல் நீக்கப்பட்ட சூழலியல்

இந்தியாவைப் பொறுத்தவரை, சூழலியல் அடிப்படைவாதத்தை முன்னிறுத்தும் செயல்பாடுகளில் முக்கியமானது வீகன் உணவுப் பிரச்சாரம். தேன், பால், தோல்பொருள்கள் உள்ளிட்ட எந்தவிதமான விலங்குசார் பொருள்களையும் பயன்படுத்து வதை வீகன் உணவுமுறை மறுக்கிறது. 2020இல் வெளியான ஒரு சர்வதேச அறிக்கை, இந்தியாவின் பசித்திருப்போர் அலகு (Hunger index) மோசமாக இருப்பதாகத் தெரிவித்தது. உணவின்றிப் பலர் தவிக்கும் சூழலில், விலங்குப் புரதங்கள் முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. உணவு என்பது உடலுக்கான ஊட்டச்சத்தாக மட்டுமல்லாமல், மரபோடும் பின்னிப் பிணைந்திருக்கிறது. விலங்குப் புரதங்களை விடுத்து மாற்று உணவை எடுத்துக்கொள்வது அனைவரின் பொருளாதார வசதிக்கும் ஒத்துவருவதில்லை. உதாரணமாக, மாட்டுப்பாலுக்கு மாற்றாக சோயா மொச்சையிலிருந்து எடுக்கப்படும் பால் முன்வைக்கப்படுகிறது. இதன் விலை லிட்டருக்கு 200 ரூபாய். இதற்கெல்லாம் மேலாக, உணவுசார் அரசியல் ஆபத்தான போக்கில் சென்றுகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மட்டுமே முன்வைத்து விலங்குப் புரதங்களை மறுதலிப்பது அபாயகரமானது.

இதுபோன்ற தீர்வுகளை முன்வைப்பவர்கள் இரண்டு கருத்தாக்கங்களால் உந்தப்படுகி றார்கள். முதலாவது, சூழலியல்சார் மேட்டிமை வாதம் (Environmental elitism). வானுயர்ந்த கோபுரங்களிலிருந்து சமூகத்தை அணுகினால் வறியவர்கள் அனைவரும் சூழலியலுக்கு எதிராகச் செயல்படுவதாகவே ஒரு தோற்றம் உருவாகும். களநிலவரம் முற்றிலும் வேறானது. அன்றாட வாழ்வில் உணவு, உடை, உறை விடத்துக்கே போராடிக்கொண்டிருப்பவர்கள், சூழலியல் செயல்பாடுகளுக்காக மெனக்கெட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

இரண்டாவதாக, தனிநபர் செயல்பாடுகளால் மட்டுமே சூழலியலைக் காப்பாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கை. அரசுகளை, சூழலியலைச் சுரண்டும் திட்டங்களை, உலகளாவிய ஒப்பந்தங்களில் உள்ள செயல்திறன் ஓட்டைகளைக் கேள்விக்கு உட்படுத்தாமல் தனிநபர் வாழ்க்கை முறையை மட்டுமே மாற்றுவதால் சூழலியலைப் பாதுகாத்துவிட முடியாது. தனிநபர் பாதுகாப்புச் செயல்பாடுகள் தேவைதான்;ஆனால், அவை அவரவர் சூழலுக்கேற்ப மட்டுமே முன்வைக்கப்பட வேண்டும். தீர்வுகள் அனைவரையும் உள்ளடக்கி உருவாகும்போது, சூழலியல் பாதுகாப்புச் செயல்பாடுகளிலும் அனைவருக்கும் ஆர்வம் ஏற்படும், பங்களிப்பும் அதிகரிக்கும்.

அரசியல் புரிதலற்ற சூழலியலாளர்கள் - சூழலியல் செயற்பாட்டாளர்களின் முன்னெடுப்புகளால் சறுக்கல்கள் நிகழ்ந்து விடுகின்றன. சமகாலத்தில் குறுக்குவெட்டு அரசியல் பார்வையோடு சூழலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் பல இயக்கங்கள் உலகெங்கும் உருவாகிவருகின்றன. அவை வருங்காலத்துக்கான நம்பிக்கையை விதைக்கின்றன. சமூகத்தின் படிநிலைகளைப் புறக்கணித்துவிட்டு சூழலியலைப் பேணுவது எந்தப் பயனையும் தராது. இயற்கை பாரபட்சம் காட்டுவதில்லை எனும்போது சூழலியல்சார் செயல்பாடுகளும் அனைவருக்குமானதாக இருக்க வேண்டியது அவசியம்.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x