Published : 27 Aug 2021 03:11 AM
Last Updated : 27 Aug 2021 03:11 AM

அடுத்த குத்துச்சண்டைக்கு நான் ரெடி!- ஆர்யா பேட்டி

கா.இசக்கிமுத்து - ஆர்.சி.ஜெயந்தன்

கபிலன் எனும் சாமானியனாக, வாழ்க்கையில் விழுந்து எழும் குத்துச்சண்டை வீரன் கதாபாத்திரத்தை ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் ஆர்யா. அதற்காக, பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருந்தவர் மீது மோசடிப் புகார் என செய்திகள் பரபரத்தன. அமைதி காத்த ஆர்யா காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார். அவரது பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படிக் கடந்துவந்தார்? இந்து டாக்கீஸுக்கு ஆர்யா அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...

கதாநாயகிகள் உட்பட எல்லோருடனும் சகஜமாகப் பழகுவது உங்கள் பாணி. அதன் வழியாக உங்கள் மீது உருவான ‘லவ்வர் பாய்’ இமேஜும்கூட உங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தவர்களுக்கு ஒரு வாய்ப்பாகப் போய்விட்டது என்று சொல்லலாமா?

இருக்கலாம். பர்செனலாக அதை எப்படி ‘ஜட்ஜ்’ பண்ணுவது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ரசிகர்களிடமிருந்து ஒரு நடிகருக்குக் கிடைக்க வேண்டியது அன்பும் பாராட்டும்தான். அதுதான் பெரிய கிஃட். அதுக்கு விலை மதிப்பே கிடையாது. ஆனால், சிலபேர் உங்களுக்கு பரிசு வாங்கித் தரலாமா என்று கேட்கும்போது நான் அடியோடு மறுத்துடுவேன். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பது போதாதா?. எந்தவொரு நடிகருமே தன்னுடைய கஷ்டத்துக்கு ரசிகர்களிடம் காசு கேட்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கீழிறங்கிப் போறவர் ஒரு நடிகராகவே இருக்கமுடியாது. ரசிகர் என்பவர் ஆண் - பெண் யாராக இருந்தாலும் இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்படமால் இருக்கணும். இப்போது என் பெயரை வைத்து நடந்த இந்த மோசடி ஒரு பாடமாக இருக்கணும். இதுமாதிரியான ஏமாற்று இதுவே கடைசியாகவும் இருக்கணும். அது ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.

உங்கள் மீது குற்றச்சாட்டு வந்தபோது காவல் துறையினர் உங்களை எப்படி நடத்தினார்கள்.. நீங்கள் எவ்வாறு ஒத்துழைப்புக் கொடுத்தீர்கள்?

சென்ட்ரல் கிரைம் பிராஞ்சிலிருந்து ஒரு தேதியைக் குறிப்பிட்டு விசாரணைக்கு வரமுடியுமா என்றார்கள். அதுவரை காத்திருப்பதில் எனக்கு விருப்பமில்லை. ‘உடனே வரலாமா?’ எனக் கேட்டேன். ‘வரவேற்கிறோம்’ என்றார்கள். சிசிபி அலுவலத்தில் பொறுப்பில் இருந்த அதிகாரி, நான் தனியாக வந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். ‘நோட்டீஸ் அனுப்பினால், வழக்கறிஞரை அனுப்பி வைப்பார்கள். அவர் ஒரு நோட்டீஸ் அனுப்புவார். அதன்பிறகு வந்தாலும் உங்களைப்போல் தனியாகவும் வரமாட்டார்கள். சட்டத்தை மதிக்கும் குடிமகனாக, அழைத்ததுமே வந்த உங்களுக்கு நன்றி’ என்று சொல்லி என்னைப் பாராட்டினார். பிறகு என்னுடைய போனை வாங்கி சோதனை செய்தார்கள். அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்.இந்த விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது சொன்னேன். ‘என் பெயரைச் சொல்லி யாரோ ஏமாற்றியிருக்கிறார்கள். அதுவும் ஒரு மாணவி 70 லட்சம் ரூபாயைக் கொடுத்து ஏமாந்திருக்கிறார். நானே ஏமாந்ததுபோல் அது எனக்கு வலியாக இருக்கிறது. அது சின்ன தொகை அல்ல. அதை எப்படியாவது அவருக்கு மீட்டுக்கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் உடனே ஓடி வந்தேன்’ என்றேன். நிமிர்ந்து உட்கார்ந்த அதிகாரி, ‘இன்னும் ஒரு வாரத்தில் குற்றவாளியைப் பிடித்துக் காட்டுகிறோம் பாருங்கள்’ என்று சொன்னார். சொன்னபடியே ஒன்றுக்கு இரண்டு பேர் சிக்கியிருக்கிறார்கள். நமது காவல்துறையின் திறமையை நினைத்து உண்மையாகவே பெருமிதமாக இருக்கிறது. எனக்கும், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கும் நீதி கிடைத்திருக்கிறது.

பாதுகாப்பான சோசியல் மீடியா என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

எதுவாக இருந்தாலும் அதில் ‘வெரிஃபைட் அக்கவுண்ட்’ தானா என்பதை ரசிகர்கள் உறுதியாகத் தெரிந்துகொண்டு, அதில் தனக்குப் பிடித்த நடிகருடன் பிரபலத்துடன் உரையாடுவது தவறில்லை. ஆனால், சிக்கல் எங்கே வருகிறது என்றால் ‘போலி’க் கணக்குகளை நம்பும்போதுதான். பொதுவாக பிரபலமாக இருப்பவர் உடனடியாக இப்படி தனிப்பட்ட முறையில் பதில் அனுப்புவாரா என்பதை யோசிக்க வேண்டும். போலிக் கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு பக்கம் ‘சார்பட்டா பரம்பரை’யின் வெற்றியும் பாராட்டுகளும் - இன்னொரு பக்கம் மோசடிப் புகாரால் ஏற்பட்ட நெருக்கடி. இரண்டையும் எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?

நல்ல படைப்புக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியைக் கொண்டாடாமல் இருக்கமுடியாது. ’சர்பட்டா பரம்பரை’யை உலகமே பேசிக்கொண்டிருந்தபோது நான், மனைவி சாயிஷா, அப்பா, அம்மா என அனைவரும் மகிழ்ந்தோம். ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு நடுவே ஒரு நெருடலாகவே எனக்கு மன உளைச்சலை உருவாக்கிவிட்டது இந்த விவகாரம். சாயிஷா மிகவும் ஆதரவாக இருந்தார்.

‘டெடி’ படத்தில் ‘என் இனிய தனிமையே’ பாடல், ‘சிங்கிள்’ ஆக இருப்பவர்களின் ஆந்தம்போல் இன்னும் ஒலித்துகொண்டிருக்கிறது. அந்தப் பாடலுக்கும் ஆர்யாவுக்கும் எவ்வளவு ஒற்றுமை உண்டு?

திருமணம், குடும்பத்துடன் இருப்பது எத்தனை இனிமையானதோ, அப்படித்தான் தனியாமையாக இருப்பதும். தனிமை வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் பிடிக்கும். அப்படித்தான் எனக்கும். எனக்குத் தனியாக ட்ராவல் பண்ணப் பிடிக்கும். தனியாக உடற்பயிற்சி, சைக்கிளிங் செய்யப் பிடிக்கும். அந்தப் பாடல் எனக்கொரு ஐகான் போல் ஆகிவிட்டது.

உங்கள் நண்பர் விஷால் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அதுபற்றி உங்களுக்குக் கவலை இல்லையா?

நானும் எவ்வளவோ நச்சரித்துவிட்டேன். ‘நடிகர் சங்கக் கட்டிடம் எழும்பி நின்றால்தான் எனக்குத் திருமணம்’ என்று தான் கொண்ட கொள்கையில் இன்னும் உறுதியாக நிற்கிறான். அவனது பிடிவாதத்தை நான் நன்றாகவே அறிவேன். நினைத்ததைச் சாதிக்காமல் விடமாட்டான்.

‘எனிமி’ படத்தில் விஷாலுக்கு வில்லனாகியிருக்கிறீர்கள். பட அனுபவம் எப்படி இருந்தது?

கதைப்படி இருவரும் நண்பர்கள்தான். ‘அவன் இவன்’ படத்தில் எங்களுக்குள் ஒரு போட்டி இருக்கும். ஆனால், ‘எனிமி’யில் ஒரு பிரச்சினை என்று வருகிறபோது யாருடைய புத்திசாலித்தனம் ஜெயிக்கிறது என்கிற சுவாரஸ்மான கதைக்களம் நான் விஷாலுக்கு நண்பனா, வில்லனா என்கிற சந்தேகத்தை உருவாக்கும். எனக்கு அமைந்ததுபோலவே ரசிகர்களுக்கும் இப்படம் புதிய அனுபவமாக இருக்கும்.

மனைவி சாயிஷாவும் நீங்களும் மீண்டும் இணைந்து நடிக்கும் கதைக்காகக் காத்திருக்கிறீர்களா?

ஆமாம். அவரும் தனியாக நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

ரஞ்சித்துடன் மீண்டும் எப்போது?

ரஞ்சித்துடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன். ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்துக்கான திரைக்கதையை அவர் எழுதிக்கொண்டிருக்கிறார். அடுத்தக் குத்துச் சண்டைக்கு நான் ரெடி. திரைக்கதை எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x