சென்னை தினம்: இணையத்தில் சென்னை புராணம்!

சென்னை தினம்: இணையத்தில் சென்னை புராணம்!
Updated on
1 min read

சென்னை அல்லது மெட்ராஸ். ‘இதெல்லாம் ஓர் ஊரா’ என்று தூற்றுபவர்களும் உண்டு. ‘இது நம்ம சென்னை’ என்று ஆராதிப்பவர்களும் உண்டு. சென்னை, தெரியாதவர்களுக்குப் புரியாத புதிர். தெரிந்தவர்களுக்கோ சொர்க்கம். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 22 மட்டுமல்ல, எல்லாக் காலத்திலும் சென்னையைப் பற்றி அசைபோட சுவாரசியங்கள் கொட்டிக்கிடக்கும் ஊர் இது. இந்த இணையவழிக் காலத்தில் சமூக ஊடகங்களில் பழைய சென்னையின் கதைகளை அசைபோடும் பக்கங்கள் வந்துவிட்டன.

சென்னையின் பழமையான பக்கங்களைத் தேடும்போது ஃபேஸ்புக்கில் கண்ணில்பட்டது, ‘மெட்ராஸ் லோக்கல் ஹிஸ்ட்ரி குரூப்’ (Madras local Histroy Group). இந்தக் குழு சென்னை நகரின் வரலாற்றைப் பேசுகிறது. குழுவில் அந்தக் கால சென்னையின் ஒளிப்படங்கள், வீடியோக்கள், ஓவியங்கள் என ஏராளமாகப் பகிரப்பட்டிருக்கின்றன. சென்னை வரலாற்றைச் சொல்லும் காணொலிகள், சென்னையைப் பற்றிய செய்திகள், தகவல்கள் போன்றவை தொடர்ந்து பகிரப்படுகின்றன. இந்தக் குழுவில் இணைந்துள்ள பலரும் சென்னையைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து பகிர்வதால், எல்லா நாட்களிலும் சென்னை புராணம் பேசுகிறது இந்த குழு. பழைய சென்னையின் சங்கதிகளை அறிய ஆர்வமுள்ளவர்கள் இந்தக் குழுவுக்குள் சென்று பார்க்கலாம்.

இதேபோல ‘மெட்ராஸ் டூ சென்னை’, ‘மை மெட்ராஸ்’, ‘ஓல்டு மெட்ராஸ்’ என ஃபேஸ்புக்கில் பல பக்கங்கள் சென்னை புகழ் பாடுகின்றன. பழைய சினிமாவில் சில நொடிகளுக்குப் பழைய மெட்ராஸைப் பார்க்கும்போது பலருக்கும் குதூகலமான உணர்வுகள் எட்டிப் பார்க்கும். இன்று உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. ‘ஓல்ட் மெட்ராஸ்’ என்று கூகுளில் தேடினால், சுரங்கம்போல ஒளிப்படங்கள் கொட்டுகின்றன. ஆனால், சென்னையின் பழைய வீடியோக்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது.

யூடியூபில் தேடினால் பழைய சென்னையைப் பற்றிய நிறைய வீடியோக்கள் கிடைக்கின்றன. ஆனால், அந்த வீடியோக்கள் பெரும்பாலும் ஒளிப்படங்களைக் கொண்ட காணொலிகளாகவே உள்ளன. சற்று ஆழ்ந்து தேடினால், பழைய சென்னையின் வீடியோக்களும் அரிதாகக் கிடைக்கின்றன. அப்படி சென்னையின் பழைய வீடியோ ஒன்று காணக் கிடைத்தது. இந்த வீடியோவைப் பழைய படங்களில் வந்த சென்னை காட்சிகளை மட்டும் கத்தரித்து உருவாக்கியிருக்கிறார்கள். இதேபோல யூடியூபில் 1990-களின் சென்னை வீடியோக்களும் கிடைக்கின்றன.

இந்த வீடியோக்களில் பழைய மெட்ராஸைக் காணும்போது இன்றைய சென்னையின் பிரம்மாண்ட வளர்ச்சி மலைக்க வைக்கிறது.

சினிமா சென்னை வீடியோ: https://bit.ly/3mveUjw

1990-களின் சென்னை வீடியோ: https://bit.ly/3mjAIyJ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in