Last Updated : 21 Aug, 2021 08:55 AM

 

Published : 21 Aug 2021 08:55 AM
Last Updated : 21 Aug 2021 08:55 AM

அறிவியலாளர்கள், மருத்துவர்களின் இருமுனைப் போராட்டம்

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் மருத்துவம்/அறிவியல் பயில்வதும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் பலருக்கும் மறுக்கப்பட்டது. தொடர் போராட்டத்துக்குப் பின்னரே அவை சாத்தியப்பட்டன. ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போரிலும் பல மருத்து வர்களும் அறிவியலாளர்களும் தீரத்துடன் போராடியுள்ளனர். அறிவியலுக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் தொடர்பற்ற பலர், அந்த அடையாளத்துடன் விடுதலை நாள் பவள விழாவில் முன்னிறுத்தப்பட்டு வருகின்றனர். இந்தப் பின்னணியில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்த அறிவியலாளர்கள், மருத்துவர்கள் குறித்த பார்வை:

மருத்துவர்கள்

விதான் சந்திர ராய்

பாட்னாவுக்கு அருகேயுள்ள பங்கிபூரில் விதான் சந்திர ராய் பிறந்தார். இளம் வயதிலேயே சமூகச் சிந்தனை மிக்கவராக வளர்ந்தார். ஏழைகள் மேல் கொண்ட அன்பால், மருத்துவப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மகாத்மா காந்திக்கு நெருக்கமானவராக இருந்த அவர், நாட்டு விடுதலைக்காகப் போராடினார். சுதந்திரத்துக்குப் பின்னர் மேற்கு வங்க மாநிலத்தின் முதல் முதல்வர் ஆனார். ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட தன் வீட்டையே தானமாகக் கொடுத்த பி.சி.ராய், 80 வயதில் அவர் இறந்த நாளின் காலை வேளையிலும், தன்னை நாடிவந்த நோயாளிகளைப் பரிசோதித்துச் சிகிச்சை அளித்தார். அவருடைய நினைவு நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1961இல் ‘பாரத ரத்னா' விருது அவருக்கு வழங்கப்பட்டது.

டி.எஸ்.எஸ்.ராஜன்

திருவையாறு மாவட்டம் தில்லை ஸ்தானத்தைச் சேர்ந்த டி.எஸ்.எஸ்.ராஜன், அன்றைய ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் பயின்று மாநிலத்தில் முதல் மாணவராகத் தேறினார். காந்தியின் மீதான ஈர்ப்பு காரணமாக, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றினார். 1920இல் தேசிய காங்கிரஸின் மகாசபையின் செயலாளரானார். 1930இல் நடத்தப்பட்ட வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ராஜனின் பங்கு மகத்தானது. இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுப் பல மாதங்கள் சிறையில் இருந்தார். ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களை அன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முன்னின்று நடத்தினார். ரங்கம் கோவில் நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

முக்தார் அகமது அன்சாரி

இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளர், தலைவராகச் செயல்பட்டுள்ள டாக்டர் முக்தார் அகமது அன்சாரி, அடிப்படையில் ஒரு மருத்துவர். காங்கிரஸ், முஸ்லிம் லீக் இடையிலான 1916 லக்னோ ஒப்பந்தத்தில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தீவிர அரசியல் செயல்பாடுகளால் அறியப்படும் அன்சாரி, மதராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார். விலங்குகளின் விரைகளை மனிதர்களுக்குப் பொருத்தும் அறுவைச் சிகிச்சை முறையை, முன்னோடி மருத்துவ ஆளுமைகளிடமிருந்து அன்சாரி கற்றுக்கொண்டார். மேற்கத்திய நாடுகளின் செல்வந்தர்கள் மட்டுமே அணுகக்கூடியதாக இருந்த விரை மீளுருவாக்க அறுவைச் சிகிச்சையை இந்தியர்களுக்கும் அன்சாரி சாத்தியப்படுத்தினார்.

சுசீலா நய்யார்

தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஞ்சா என்கிற கிராமத்தில் பிறந்தவர் சுசீலா. லாகூர் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பை முடித்தார்.அதன்பிறகு காந்தியடிகளைச் சந்தித்து, அவரது இயக்கத்துடன் இணைத்துக்கொண்டவர். 1939இல் வார்தா சேவாகிராம் ஆசிரமத்தில் குடியேறினார். அதே ஆண்டு காலரா நோய் நாடெங்கும் பரவியபோது, சுசீலா ஆற்றிய சேவை மகத்தானது. அதன் பின்னர் மகாத்மாவின் பிரத்தியேக மருத்துவராக உருவெடுத்தார். ‘செய் அல்லது செத்து மடி’ என்று கோஷம் எழுப்பிய கஸ்தூர்பா காந்தியுடன் இணைந்து போராடிய சுசீலா மும்பையில் கைது செய்யப்பட்டார். மருத்துவப் பணியையும், தேசப்பற்றையும் இரு கண்களாகப் பாவித்த சுசீலா 2001இல் காலமானார்.

டி.எஸ்.செளந்தரம்

மருத்துவரான சௌந்தரம், தமிழகத்தின் முக்கிய விடுதலைப் போராட்டச் செயற்பாட்டாளர், சமூகச் சீர்திருத்தவாதியும்கூட. பன்னிரண்டாம் வயதிலேயே திருமணம் ஆனாலும் சில ஆண்டுகளிலேயே பிளேக் நோய்க்கு அவருடைய கணவர் பலியானார். இருந்தும் கைம்பெண்ணாக வீட்டுக்குள் முடங்காமல் மருத்துவப் படிப்பை முடித்தார். விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகளின் ‘ஹரிஜன இயக்க’த்தில் இணைந்தார். கிராமங்களில் வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவப் பணியாற்றினார். கூடவே சமூகசேவையையும் மேற்கொண்டார். 1947இல் திண்டுக்கல் அருகே அவர் தொடங்கிய‘காந்தி கிராமம்’ இன்றைக்கு, ‘காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்’என விருட்சமாகத் தழைத்தோங்கி நிற்கிறது. பெண்களின் திருமண வயதை 18 ஆக உயர்த்தும் சட்டமும் கட்டாய இலவச ஆரம்பக் கல்வியை அளிக்கும் சட்டமும் இவரது முயற்சியால் உருவானவையே.

****

அறிவியலாளர்கள்

பிரபுல்ல சந்திர ரே

‘இந்திய வேதியியலின் தந்தை’ என அழைக்கப்படும் பிரபுல்ல சந்திர ரே, அன்றைய கொல்கத்தா மெட்ரோபாலிடன் கல்லூரியில் படித்தார். பிறகு இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில், அறிவியலில் பட்டம் பெற்றார். ஒரு லட்சம் விடுதலைப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் அரசு சிறைபிடித்தபோது, இவரும் சிறை சென்றார். விடுதலையை நோக்கிய அகிம்சை போராட்டம், புரட்சிப் போராட்டம் என இரண்டையும் தீவிரமாக ஆதரித்தவர் அவர். சுயராஜ்ஜியம் காத்திருக்க முடியாது என்கிற அறைகூவல் விடுத்து, விடுதலைப் போராட்டத்தின் பக்கம் மாணவர்களின் கவனத்தைத் திருப்பினார். மேகநாட் சாகா, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் உள்ளிட்ட சிறந்த அறிவியலாளர்களை உருவாக்கியவர் இவர்.

ஜெகதீச சந்திர போஸ்

தாவரங்களுக்கும் உயிருண்டு என்று, தான் கண்டறிந்த ‘கிரஸ்கோகிராப்’கருவியால் நிரூபித்த அறிவியலாளர் அவர். ‘மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்' என்கிற ஆய்வுக்கு 1904இல் காப்புரிமை (யுஎஸ்755840ஏ) பெற்றதன் மூலம், ‘இந்தியாவின் முதல் காப்புரிமை பெற்ற அறிவியலாளர்’என்கிற பெருமையைப் பெற்றார். ரேடியோ அலைகளைக் கண்டறிந்ததற்காக மார்க்கோனி நோபல் பரிசு பெற்றாலும், அவருக்கு முன்னரே ரேடியோ அலைகளை ஆவணப்படுத்தியவர் போஸ். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் போஸ் பணியாற்றியபோது, ஆங்கிலேயர் களைவிட எட்டு மடங்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து மூன்று ஆண்டுகளுக்குச் சம்பளமில்லாமல் போஸ் பணியாற்றினார்.

மகேந்திர லால் சர்க்கார்

மகேந்திரலால், அடிப்படையில் ஒரு மருத்துவர். இந்தியா வில் முதல் எம்.டி., பட்டம் பெற்றவர். உயர்கல்வித் துறையில் இந்தியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்காத ஆங்கிலேயர்களை எதிர்த்து ‘இந்தியன் அசோசியேஷன் ஃபார் தி கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்’ எனும் இந்திய அறிவியல் கழகத்தை 1876இல் மகேந்திரலால் உருவாகினார். நோபல் பரிசு பெற்ற தன்னுடைய ஆய்வை சி.வி. ராமன் இங்குதான் வெளியிட்டார். இந்தக் கழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சி.வி. ராமன்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ராமன், மாநிலக் கல்லூரியில் இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றார். 1930இல் தனது ஒளிச்சிதறல் ஆராய்ச்சிக்காக இயற்பியலுக்கான ‘நோபல் பரிசை’ பெற்றார். ஸ்வீடனில் நோபல் பரிசைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஆற்றிய குறுகிய நேர உரையில் “இந்தப் பரிசை இந்தியச் சிறையில் வாடும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்” என்று அறிவித்தார். இந்திய சுதந்திரப் போரில் நாடு திரண்டு நிற்பதை இதன்மூலம் உலகுக்குத் தெரியப்படுத்தினார். 1947இல் சுதந்திர இந்தியாவின் முதல் தேசியப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பணி ஓய்வுக்குப் பின்னர், பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலைய’த்தை நிறுவிப் பணியாற்றினார்.

மேக்நாட் சாகா

பொதுவுடமைவாதியான சாகா, ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதர வாக வாழ்ந்த அறிவியல் அறிஞர். பன்முகத்தன்மை கொண்ட சாகா, வங்கதேசத் தலைநகரான டாக்காவுக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார். வறுமையிலும் விடாப்பிடியாகப் படித்து, சமூகத்தில் உயர்நிலையை எட்டினார். இயற்பியலில் பல நவீன ஆய்வுகளை மேற்கொண்டு, புதிய கோட்பாடுகளை உருவாக்கினார். மருத்துவத் துறை வளர்ச்சிக்கு மட்டுமே அணுசக்தி பயன்பட வேண்டும், மனிதகுல அழிவுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என நாடாளுமன்றத்தில் நேருவை எதிர்த்து வாதிட்டவர் அவர். விடுதலைக்கு முன் காங்கிரஸ் கட்சியின் தேசியத் திட்டக் குழுவில் தொழில்நுட்பக் கல்விப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார்.

நன்றி: விடுதலைப் போரும் இந்திய விஞ்ஞானிகளும், ஆயிஷா இரா. நடராசன், அறிவியல் பலகை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x