Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM

பசுமை சிந்தனைகள் 19: இயற்கைக்கு ஏன் உரிமைகள் வழங்கப்படவில்லை?

நாராயணி சுப்ரமணியன்

2008ஆம் ஆண்டு ஈக்வடார் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் இயற்கைக்கான உரிமைகள் (Rights of Nature) குறித்த ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது, சூழலியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு.

‘தன்னியல்போடு இருக்கவும், தொடர்ந்து வாழவும், தன்னைப் பேணிக்காத்துக்கொள்ளவும், சுழற்சிகளைப் புதுப்பித்துக்கொள்ளவும் இயற்கைக்கு உரிமை உண்டு’ என்று அங்கீகரிக்கப்பட்டது. இயற்கையின் சார்பில் ஈக்வடாரைச் சேர்ந்த எந்த குடிமகனும் வழக்குத் தொடரவும் அந்தச் சட்டப்பிரிவு அனுமதிக்கிறது. அதைத் தொடர்ந்து 2010இல் பொலிவியாவும் இயற்கைக்கான உரிமைகளை அங்கீகரித்து ஒரு சட்டத்தை இயற்றியது.

இந்த இரு சட்டங்களையும் உருவாக்குவதில் தொல்குடியினரின் பங்கு முக்கியமானது. இயற்கை பற்றிய தங்களது புரிதல்களை அடிப்படையாகக்கொண்டு, அரசாங்கத் தோடு இணைந்து இந்தச் சட்டங்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். காலனியாதிக்கத்தால் சிதைக்கப் பட்ட இயற்கையுடனான உறவை மீட்டெடுக்கும் தொல் குடியினரின் முயற்சி இது. உலகத்தைப் படிநிலைகளாக அணுகி, அதில் இயற்கையைக் கீழ்ப்படியிலும் மனிதனை உச்சியிலும் வைக்கும் மனநிலையிலிருந்து வேறுபட்டு, மனிதர்களையும் இயற்கையின் ஓர் அங்கமாகப் பார்ப்பதற்கு இதுபோன்ற நவீனச் சட்டங்கள் வழிவகுக்கின்றன.

உயிரினங்களுக்கும் உரிமை

“இயற்கைக்கு உரிமை உண்டா?” என்கிற கேள்வி நெடுங்காலமாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. 1972இல் மரங்களின் சட்டரீதியான உரிமை பற்றி கிறிஸ்டோஃபர் ஸ்டோன் எழுதிய கட்டுரை முக்கியமானது. ஒரு மலைக்கோ காட்டுக்கோ சட்டரீதியான உரிமைகளை வரையறுப்பதற்கு முன்னால், எந்த அடிப்படையில் உரிமை வழங்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக, சில இயற்கை அம்சங்களுக்கு மனிதர்களல்லாத நபர்கள் (Non-human persons) என்கிற அங்கீகாரமும் வழங்கப்படுகிறது. இயற்கையை ஒரு நபராக வரித்துக்கொள்ளும் இந்தக் கருத்தாக்கம் ‘Environmental Personhood’ என்று அழைக்கப்படுகிறது.

நியூசிலாந்தைச் சேர்ந்த மொவ்ரி தொல் குடியினரின் முயற்சியால், டே உரேவாரா காட்டுப்பகுதியும் வாங்கானுய் நதியும் சட்டரீதி யாக அங்கீகரிக்கப்பட்டு, அவற்றுக்கு மனிதர் களுக்குச் சமமான உரிமைகள் வழங்கப்பட்டன. இந்த உரிமைகள் மீறப்பட்டால் மொவ்ரி தொல் குடியினத்தைச் சேர்ந்த ஒருவரும், அரசு நியமித்த ஒருவரும் இணைந்து வழக்காடவும் சட்டத்தில் இடம் உண்டு.

2017ஆம் ஆண்டில் கங்கை, யமுனை ஆகிய நதிகளுக்கும் மனிதர்களுக்குச் சமமான உரிமைகள் உண்டு என்று உத்தரா கண்ட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஓங்கில், திமிங்கிலம் முதலிய கடல் பாலூட்டிகளை ‘மனிதர்களல்லாத நபர்கள்’ (Non-human persons) என்று 2013இல் அறிவித்தது. அதைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இருக்கும் எல்லா உரிமைகளும் இந்த விலங்குகளுக்கும் உண்டு என்று அறிவிக்கப்பட்டது. ஒரு மனிதனை யாரும் உடைமைப்படுத்திக்கொள்ளவோ அழிக்கவோ சட்டத்தில் இடமில்லை. அதேபோன்ற அங்கீ காரத்தைப் பெற்ற விலங்குகளும் நதிகளும்கூட அழிவிலிருந்து காக்கப்படச் சாத்தியம் உண்டு.

எந்த அடிப்படையில் உரிமை?

வாலில்லாக் குரங்குகள் பலவும் மனிதனைப் போலவே தோற்றமளிப்பதாலும் பல வகைகளில் மனிதனை ஒத்திருப்பதாலும் அவற்றுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. ஆனால், பல சூழலிய லாளர்கள் இதை மறுக்கிறார்கள். இதுபோன்ற கோரிக்கைகள் அந்த விலங்குகளின் புலனறிவு (Sentience) அடிப் படையில் வைக்கப்படுகின்றன. அப்படியானால், புலனறிவு அற்ற விலங்குகளுக்கு உரிமை இல்லையா என்று அவர்கள் கேட்கிறார்கள். புலனறிவு பற்றிய ஆராய்ச்சிகள் தொடக்க நிலையிலேயே இருக்கும் நிலையில், அதை அடிப்படையாக வைத்து உரிமைகளை வழங்குவது குழப்பத்துக்கே வழிவகுக்கும். எல்லா விலங்குகளுக்கும் உரிமை உண்டு என்பதை நோக்கி நகர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

2020ஆம் ஆண்டு காஸ்டரீகாவின் தலைநகரைச் சேர்ந்த குரிடபாட் என்கிற மாநகராட்சியின் மேயர் அந்த மாநகராட்சியில் வாழும் தேனீக்கள், வௌவால்கள், தேன்சிட்டுகள், வண்ணத்துப்பூச்சிகள் போன்றவையும் குரிடபாடின் குடிமக்கள் என்று அங்கீகரித்துள்ளார்! மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் இந்த உயிரினங்கள் நகரத்தின் தாவரங்களைத் தழைக்கச் செய்வதாகவும், அதற்காக இந்த அங்கீகாரமும் உரிமையும் தரப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆங்காங்கே ஓரிரு மலைகளும் நதிகளும் உரிமைகளைப் பெறுகின்றன என்றாலும், ஒட்டுமொத்த இயற்கையின் உரிமையும் உலக அளவில் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை என்பது ஒரு முக்கியமான அரசியல் கேள்வி. அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளிலும்கூடப் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதைச் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரண மாக, ‘மனிதக் குலத்தின் பொது நன்மைக்காக’ ஒரு அணை கட்டப்படுகிறது எனக்கொள்வோம். அது நதியின் உரிமைகளோடு குறுக்கிடுகிறது. ஆனால், எதிர்த்தரப்பில் இருப்பவர்கள் இது மனிதர்களுக்குப் பயன்படும் என்று வாதிடலாம். இதுபோன்ற பின்னணியில் யார் தரப்பின் நியாயம் கவனிக்கப்படும் என்பது சரியாக விளக்கப்படவில்லை. மனிதர்களுக்கு மட்டுமே மனித உரிமைகள் தரப்பட வேண்டும், விலங்குகளுக்கு அது பொருந்தாது என்றும் சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். இயற்கைக்கு உரிமை தரப்படுவதில் சிக்கல் இல்லை.ஆனால், மனிதர் களைப் போலவே சம உரிமையை இயற்கைக்கு வழங்க முடியாது என அவர்கள் மறுக்கிறார்கள்.

புதிய தொடக்கம்

சூழலியல் அநீதியால் தொல்குடியினரின் குரல்கள் நசுக்கப்பட்டுவரும் சூழலில் இயற்கைக் கான உரிமைகள் பெரிதும் வரவேற்கப்பட வேண்டியவைதாம். சட்டங்களின் நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட்டால், அவை உண்மையாகவே இயற்கையைப் பாதுகாக்கும் அரண்களாக மாறும்.

இயற்கையின் உரிமைகளை அங்கீகரிப்பதும் நதிகளையும் மலைகளையும் மனிதர்களாகவே பாவிப்பதும் தொல்குடியினருக்குப் புதிதல்ல. மனிதனையும் இயற்கையையும் எதிரெதிர் தளங்களில் வைக்கும் காலனியாதிக்க மனநிலையிலிருந்து விடுபட்டு, இயற்கைக்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கான முதற்படி இது. சட்டம் மட்டுமே எல்லாவற்றையும் சாதித்து விடாது என்றாலும், இன்றைய சமூகத்தில் தொல் குடிகளின் சூழலியல்சார் மனப்பான்மையைப் புகுத்த இது சிறந்த வழியாக இருக்கும்.

கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x