Published : 16 Aug 2021 06:49 am

Updated : 16 Aug 2021 06:49 am

 

Published : 16 Aug 2021 06:49 AM
Last Updated : 16 Aug 2021 06:49 AM

இந்தக் கதையைக் கொஞ்சம் கேளுங்களேன்!

branding-stories

“ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்” என்று அம்மா சாதம் ஊட்டுவதற்காக நம்மை மயக்க ஆரம்பிக்கும் கதை என்னும் மேட்டர் “நேத்து எனக்கு காய்ச்சல் டீச்சர்” என்று ஸ்கூலுக்கு லீவ் போட பொய் சொல்லும் அளவிற்கு வளர்ந்து, “நீ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியல” என்றுகாதலிக்கும் பெண்ணை கரெக்ட் செய்யும் லெவல் சென்று, வயதான பிறகு “அந்தக் காலத்தில” என்று பழங்கதை பேசி கேட்பவர்கள் நொந்துபோகும் வரை கதை சொல்வது நம்வாழ்க்கையோடு ஒன்றிணைந்து பின்னிப்பிணைந்துவிட்ட ஒன்று. தற்போது பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் பற்றி கதையை உருவாக்கி கல்லாகட்டி வருகின்றன.

கதையின் பவரை இரண்டு குட்டிக் கதைகள் கொண்டு விளக்குகிறேன். குட்டிக் கதை கூட இல்லை. தக்கனூண்டு கதை. இந்த இரண்டில் எது மனதை ஈர்த்தது என்று கூறுங்கள்.


முதல் கதை: ராஜா இறந்தார். பின் ராணி இறந்தார்.

இரண்டாவது கதை: ராஜா இறந்தார். அந்த சோகத்தில் ராணி இறந்தார்.

இரண்டாவது கதை எதையோ தொடுகிறதில்லையா. மனதில் நிற்கிறதில்லையா. கதையின் மேட்டர் இதுவே. ‘பெண் தற்கொலை’ என்று சிம்பிளாய் சொல்வதற்குப் பதில் பத்திரிகைகள் ‘காலேஜ் அழகி தற்கொலை’ என்று தலைப்பு எழுதுவதற்குக் கார
ணம் இதுவே. யார், எந்தக் காலேஜ், எப்படி என்று மனம் எங்கெல்லாமோ செல்லும். எதை எதையோ எப்படி எல்லாமோ யோசிக்கும். சின்ன வார்த்தையைக்கூட கதையாய் ஜோடிக்கும் போதுதான் கேட்பவர் சட்டையை தொலைவிலிருந்தே கழட்டி அவர் மனதைத் தொட முடிகிறது. நாம் சொல்வதை கேட்கவைக்கிறது. அவர் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறோமோ அதை நிறைவேற்ற முடிகிறது.

இப்பேற்பட்ட மகோன்னதம் நிறைந்த கதைகளைக்கொண்டு பிசினஸ் முதல் கம்பெனிகள் வரை கலக்க முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? கஸ்டமர்கள் முதல் கம்பெனி ஊழியர் வரை தகவல்களை செய்தியாய் படிப்பதைவிட கதையாய் கவனிக்கத்தான் விரும்புகிறார்கள். அப்படி கதை கூறி கல்லா கட்டும் கலை பற்றி இன்று கதைப்போம்!

“கோகோ கோலா சுவைக்குக் காரணம் ‘7X’ என்ற ஒரு சீக்ரெட் ஃபார்முலா. அது உலகில் ஏழு பேருக்குத்தான் தெரியும். அந்த ஃபார்முலா அட்லாண்டா நகரில் கோகோ கோலா தலைமையகத்தில் ஒரு ரகசிய லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது” என்று ஒரு கதை உலகம் முழுவதும் பிரசித்தம். இது உண்மையா? உட்டாலங்கடியா? யார் கண்டது. கோகோ கோலாவின் ஒரிஜினல் கோலா சுவைக்கு இதுதான் காரணம் போலிருக்கிறது என்று உலகம் முழுவதும் பரபரப்பாக பேசி நம்பவைக்க இந்தக் கதை உதவியது. அந்த மாயை உலகெங்கும் பரவியது. பிராண்டின் விற்பனை எகிறியது!

விற்கும் பொருளுக்கு பின்னணியாக ஒரு கதையை செட்டப் செய்து பிராண்டாக்கி விற்றால் விற்பனை களைகட்டும். சரியான கதையாய் புனைந்தால் பிராண்ட் பற்றி வாடிக்கையாளர் மனதில் நம்பிக்கையையும் வளர்க்கமுடியும்.அதோடு அக்கதை சுவாரசியமாயும் இருந்தால் அடித்தது சுக்கர திசை. அவர்களே கனகாரியமாய் ஊரில் உள்ளவர்களுக்கு பரப்புவார்கள். உங்களுக்கு சில்லறையும் செயல்பாடும் மிச்சம்.

‘ராம்ராஜ்’ வேஷ்டியை அதன் உரிமையாளர் உருவாக்கிய கதை என்று ஒன்றை கேட்டிருப்பீர்கள். பல காலம் முன் நண்பர்களோடு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருக்கிறார் மனிதர். அவர் நண்பர்கள் பேன்ட் ஷர்டோடு வர இவர் வேட்டியில் வந்திருக்கிறார். வேட்டி கட்டியவர்களை உள்ளே விடுவதில்லை என்று ஹோட்டல் அவரை அனுமதிக்கவில்லை. எந்த வேட்டி கட்டியவர்கள் உள்ளே வரக் கூடாது என்று கேவலப்படுத்தினீர்களோ அதே வேட்டிக்கு மரியாதை தந்து ஸ்டார் ஹோட்டல்களில் வரவேற்கச் செய்கிறேன் பார் என்று தன் வேட்டியை வரிந்து கட்டி சபதம் செய்தாராம். அப்படிப் பிறந்தது ‘ராம்ராஜ்’ என்றும், ‘மதிப்புக்குரியவர்களுக்கு’ என்று பொசிஷினிங் பெற்றது என்றும், அதன் விளம்பரத்தில் ஸ்டார் ஹோட்டலில் அனைவரும் ‘சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்’ என்று கூறும்படி பிராண்ட் வளர்க்க உத்வேகம் வந்தது என்றும் ராம்ராஜ் ஸ்தல புராணம் விரியும். இது உண்மையாக இருக்கலாம் அல்லது அரைக்கால் சதவீதம் கற்பனை தாளித்தும் இருக்கலாம். ஆனால் ஒன்று நிச்சயம். வெள்ளை வேட்டியில் கலர்ஃபுல்லாய் கலக்கும் ராம்ராஜ் வெற்றிக்கு இந்தக் கதை ஓரளவேனும் உதவியிருக்கிறது என்பது நிதர்சனம்.

கஸ்டமர் மனம் கவர்ந்து அவர்களோடு நீங்காத உறவை ஏற்படுத்த பிராண்டோடு ஒட்டிய கதை உதவும். கொஞ்சம் அப்படி இப்படி இட்டுக்கட்டி கூறினாலும் தப்பில்லை. ஆனால்,அது பிராண்ட் தன்மையோடு பொசிஷனிங்கோடு ஒன்றி இருக்கவேண்டும்.

“சரி, இது போன்ற பிராண்ட் கதைகளை உருவாக்குகிறேன். ஆனால் அதை எப்படி பரப்புவது” என்றுதானே சிந்தனை. ஏகப்பட்ட வழிகள் உண்டு. பிஆர்ஓ மூலம் பத்திரிகைகளை எழுத வைக்கலாம். சோஷியல் மீடியாவில் சின்னதாய் பற்ற வைக்கலாம். பிசினஸ் அசோசியேஷன் மீட்டிங்கில் பேச வாய்ப்புக் கிடைத்தால் அங்கு இந்தக் கதைகளை அவுத்துவிடலாம். இல்லை இருக்கவே இருக்கிறது உங்கள் கம்பெனி வெப்சைட். அதில் எழுதலாம். பல கம்பெனிகள் வெப்சைட்டில் தங்கள் மிஷன், விஷன், குஷன், பென்ஸ்டாண்ட் என்று பத்து பைசாவிற்கு பிரயோஜனமில்லாத விஷயங்களை எழுதுகின்றன. அதை அக்கம்பெனி முதலாளியே படிக்கமாட்டார். மற்றவர்கள் எங்கே படிக்கப் போகிறார்கள். அதற்குப் பதில் உங்கள் பிராண்ட் பற்றிய சுவாரசியமான கதை எழுதலாம். சில பேராவது படிப்பார்கள். பல பேருக்குப் பரப்புவார்கள்.

வாடிக்கையாளர்களை விடுங்கள். உங்கள் கம்பெனி ஊழியர்களை உத்வேகத்துடன் உழைக்க வைக்கவும் கம்பெனி கலாச்சாரம் வளர்க்கவும் கதைகள் கைகொடுக்கும்.

பொழுது போக்கத்தான் கதை என்று இனியும் நினைக்காதீர்கள். கம்பெனி கலாச்சாரம் காப்பது முதல் கல்லா கட்டுவது வரை கதைகளைக் கொண்டு சப்ஜாடாய் சாதிக்கம். சாதித்திருக்கிறார்கள். முயன்று பாருங்கள். நீங்களும் ஒரு வெற்றிக் கதையாவீர்கள்!

-சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com
Branding storiesவிளம்பரக் கதைகள்கோகோ கோலாராம்ராஜ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x