Published : 12 Feb 2016 01:01 PM
Last Updated : 12 Feb 2016 01:01 PM

பொருள்தனைப் போற்று 3: காய்கள் சொல்லும் சேதி!

நாள்தோறும் அல்லது வாரம் ஓரிரு முறையேனும் காய்கறிக் கடைக்குப் போகிறோம். ‘இது என்ன விலை?' என்றுதான் வாங்கவே தொடங்குகிறோம். ஏன் அப்படி? ஏன்னா ‘நேத்தைக்கு இருந்த விலை, இன்னைக்கு இருக்காது' என்பதுதான் காரணம்.

பூ, பழம், கீரை உள்ளிட்ட காய்கறிகளை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்க முடியாது. இவையெல் லாம், விரைவிலேயே வதங்கிப் போகிற பொருட்கள். ‘நல்ல நிலை'யில் இருக்கிற போதே, இவற்றை விற்றாக வேண்டும். தாமதம் ஆக ஆக, இவற்றுக்கான ‘தேவை' (டிமாண்ட்) குறைந்துகொண்டே போகும்.

அப்பொழுதுதான், ‘ஃப்ரெஷ்ஷாக' வந்து இறங்கின கத்திரிக்காய், நம்மை வரவேற்கும். நேற்றைய, அதற்கு முந்தைய நாட்களின் காய், கூடையில் அடியிலேயே மறைந்து கிடக்கும். இதை வெறுமனே வியாபாரத் தந்திரமாக மட்டுமே பார்க்கிறோம். இது சொல்லும் பொருளாதார செய்தியை கவனிப்பதில்லை.

கடைசியாக வந்த பொருளை முதலில் விற்பதா? அல்லது, நேற்று அல்லது அதற்கு முன்பு வந்ததை விற்று விட்டு, பிறகு இப்பொழுது வந்ததை விற்பதா? எது முதலில்?

இந்த உத்தி, உண்மையில் கடைக்குக் கடை மாறுபடும். சில கடைகளில், அன்று காலை வாங்கி வந்த காய்களை, உள்ளயே வெச்சுக்கிட்டு இருப்பாங்க. ‘ரெகுலரா' வர்றவங்களுக்கு மட்டும் எடுத்துக் குடுப்பாங்க. ஏன்? காரணம் வெகு எளிது. புதியது விற்று விடும். பழையது, அப்படியே தங்கி விடும்.

வேறு சில கடைக்காரர்கள், புதிதாக வந்ததை மட்டுமே வெளியில் வைத்திருப்பார்கள். இதற்கும் காரணம் உண்டு. வாங்க வருகிறவர்களை, புதிய காய்கள்தான் கடைப் பக்கம் ஈர்க்கும். ‘பழசு போனா போவட்டும். புதுசா இருந்தாதான் கடைக்குப் புது கஸ்டமருங்க வருவாங்க. இல்லைன்னா வேற கடைக்கு போயிருவாங்க' என்ற பயம்தான் காரணம். அதனால, நமக்கு ‘பிசினஸ்' ஆவணும்னா, பழசு வீணாப் போவுதேன்னு கவலைப் படக்கூடாது. ‘வந்துதா, வித்துதான்'னு போயிக்கிட்டே இருக்கணும்.

எதை முதலில் விற்பது என்பதைப் பற்றி நாம் ஏன் இத்தனை விரிவாகப் பேச வேண்டும்?

பொருளாதாரப் பாடத்தின், மிக மிக முக்கியமான பகுதி இதில் அடங்கி இருக்கிறது. ‘லிஃபோ' (LIFO), ‘ஃபிஃபோ' (FIFO) என்றால் என்ன? இந்தக் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது.

‘லிஃபோ' என்றால், லாஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட் (Last In First Out).

‘ஃபிஃபோ' என்றால் ஃபர்ஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட் (First In First Out).

அதாவது, ‘கடைசியா வந்தது, முதலில் வெளியே'. ‘முதலில் வந்தது முதலில் வெளியே'.

‘கடைசியா இப்போ வந்துது இல் லையா? அதை முதல்ல வித்துருவோம்' - இது முதல் ரகம். (LIFO). ‘முன்னமே வாங்குனதை, மொதல்ல வித்து முடிச்சுரு வோம்' - இது இரண்டாவது ரகம் (FIFO).

இப்போ புரியுதுதானே? ஆனா, எப்படிச் சொன்னா, நமக்கெல்லாம் புரியாதோ, அப்படிச் சொல்லிக்கிட்டு இருக்காங்க! அதனாலதான், ‘பொருளாதாரம்'னா அது படிச்சவங்களுக்கு மட்டும்தான்னு ஆகிடுச்சு.

சரி. அடுத்ததா நாம பார்க்க வேண்டியது ‘விலை'. ‘விலைவாசி என்ன இப்பிடி ஒசந்துக்கிட்டே போகுதே' என்று சொல்கிறோம் அல்லவா? உண்மையில், எந்தப் பொருளின் விலையும், ஒரு அளவுக்கு மேல் உயரவே உயராது. ‘நம்ப முடியலியே' என்கிறீர்களா?

‘யப்பா! தக்காளி என்ன தங்கம் விலை விக்குது!' என்று யாராவது சொன்னால், ‘அப்படியா? கிராம் என்ன விலை சொல்றாங்க?' என்று கேட்டுப் பாருங்களேன். ஒரு நிமிஷம் உங்களை ஏற இறங்கப் பார்த்து விட்டு, ‘உன் சங்காத்தமே வேணாம்'னு நினைச்சுப்பாரா, இல்லையா?

தங்கம் அளவுக்கு, தக்காளி விலை என்றைக்குமே இருக்க முடியாது. அவ்வளவுகூட வேண்டாம். கால் கிலோ நூறு ரூபா? அம்பது ரூபா? சாத்தியமே இல்லை. எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிகிறது?

‘தேவை விதி' என்று ஒன்று இருக்கிறது. ஆங்கிலத்தில், ‘லா ஆஃப் டிமாண்ட்'. இதேபோல, ‘வரத்து விதி' ('லா ஆஃப் சப்ளை') என்றும் இருக்கிறது. இந்த இரண்டு விதிகளும் சேர்ந்துதான், ஒரு பொருளின் விலையை நிர்ணயிக்கின்றன.

‘தேவை விதி' பார்ப்போமா? கால் கிலோ தக்காளி, ஐம்பது ரூபாய்னு வச்சுக்குவோம். என்ன நடக்கும்? கடைக்கு வர்றவங்க எல்லாரும், ‘விலை என்ன'ன்னு கேட்டுட்டு, போய்க்கிட்டே இருப்பாங்க. யாராவது வாங்குவார்களா? ஊஹூம். ‘போணி'யே ஆவாது. இல்லையா? வாங்கி வந்த சரக்கு, அப்படியே கடையில தூங்கும். அது, எத்தனை நாளைக்குத் தாங்கும்? ரெண்டு மூணு நாள்ல, வதங்கிப் போயிடும். அதனால, கடைக்காரரு என்ன பண்ணுவாரு?

‘வர்ற விலைக்கு வித்துட்டுப் போவோம்'னு நினைத்து விலையைக் குறைப்பார்தானே? நாமும் தக்காளி வாங்கி வந்து, ரசம் வைத்துச் சாப்பிடுவோம். ஆக, ‘விலை கூடினால், தேவை குறையும். விலை குறைந்தால், தேவை கூடும்'. இதுதான் ‘தேவை விதி'.

‘லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! சந்தைக்கு, தக்காளி வரத்து குறைந்தது. விலை உயரும் அபாயம்!' என்று ஒரு செய்தி படிக்கிறோம். புரியற மாதிரி சொல்லணும்னா, ‘சப்ளை' குறைஞ்சு போச்சு. என்ன நடக்கும்? தக்காளி விலை உயரும். இதற்கு நேர்மாறான செய்தியையும் படித்திருக்கிறோம். ‘மலைமலையாய்க் குவிந்தது தக்காளி! மளமளவென்று சரிந்தது விலை!' ஆம். ‘வரத்து குறைந்தால், விலை கூடும். வரத்து கூடினால், விலை குறையும்'. இதுதான் ‘சப்ளை' விதி.

இவ்வாறு, ‘தேவை'யும் ‘சப்ளை'யும் ஒன்றுக்கொன்று இணைந்தும், முரண்பட்டும் செயல்பட்டு, விலைவாசியைத் தீர்மானிக்கிற நிலையைப் பொருளாதார வல்லுநர்கள், ‘முறையான போட்டி' (perfect competition) என்கின்றனர். இளைஞர்கள் இதனைக் குறித்து வைத்துக் கொள்ளவும்.

‘தேவை விதி', ‘சப்ளை விதி' இரண்டும், அடிப்படை விதிகள். ஆகவே, ஒருமுறைக்கு இருமுறை, இந்த விதிகளைப் படித்துப் பார்த்து, நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்த விஷயத்துக்கு வருவோம். ‘அதும் பாட்டுக்கு விலைவாசி ஏறிக்கிட்டே போவுது. எங்களுக்கு ஆனா, அதே கூலி (சம்பளம்)தானே கிடைக்குது? அது மட்டும் கூடவே மாட்டேங்குதே?'

உண்மைதான். வருமானம் நிலையாக இருக்கிறது. செலவு மட்டும் கூடிக்கொண்டே போகிறது. இந்த நிலையைத்தான், ‘முரண்' (conflict) என்கிறோம். இவ்வகை முரண்களில் இருந்து, ஓரளவு விடுதலை கிடைக்கவே, ‘பொது விநியோகம்' (ரேஷன்), இலவசம், மானியம் போன்றவை வழங்கப்படுகின்றன. உண்மையில், அடித்தட்டு மக்களுக்கான இவ்வகைத் திட்டங்கள்தான், ‘மக்கள் நலத் திட்டங்கள்' ஆகும்.

இலவசங்கள், மானியங்கள் எல்லாம் அடிப்படையில், நலிவடைந்த மக்களுக்குத் தரப்படும் நிவாரண உதவிகள்தான், என்பதை மனதில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், ‘அரசுப் பணம் வீணாகிறது' என்கிற குற்றச்சாட்டு, எந்த அளவுக்கு வலுவற்ற வாதம் என்பது புரியும்.

சரி. ‘கத்தரிக்காய்' உதாரணம் சொல்லும் நிறைவுச் செய்தி, ‘யதார்த்தம்'. அதுதான், நமது ‘புத்திசாலித்தனம்'. அது என்ன?

(வளரும்)

- தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x