Published : 14 Aug 2021 03:18 am

Updated : 14 Aug 2021 06:50 am

 

Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 06:50 AM

காடு திரும்பிய ரிவால்டோ: புதிய மாற்றத்துக்கு வித்திடுமா?

rivaldo-elephant

உலக யானை நாள் ஆக. 12 அன்று கொண்டாடப்பட்டு விட்டது. யானை மீது ஆர்வம் கொண்ட பலரும் தங்களுக்கே உரிய வகையில் அந்த நாளைக் கொண்டாடி இருப்பார்கள். ஆனால், இந்தியக் காடுகளின் காவலனாக இருந்த காட்டு யானைகள், உண்மையிலேயே இன்றைக்கு மகிழ்ச்சியாகவும் இயல்பாகவும் இருக்கின்றனவா?

உலகில் வாழும் ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் இருக்கின்றன. 2017 கணக்கெடுப்பின்படி 27 ஆயிரம் யானைகள் இந்தியாவில் வாழ்கின்றன. அதேநேரம், தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. தமிழகம் எங்கும் யானைகளின் வாழிடப் பரப்பு குறைந்துவிட்டதும், யானை வழித்தடங்கள் அழிக்கப்பட்டதும் ஆக்கிரமிக்கப்பட்டதுமே இதற்கு முக்கியக் காரணங்கள். தொடர்ச்சியாக யானை – மனித எதிர்கொள்ளல் தமிழ்நாட்டுக் காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத் தில் இறந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 300-க்கு மேல்.


க்ரால் எனும் சிறைவாசம்

யானை – மனித எதிர்கொள்ளல் நிகழும்போதெல்லாம், யானை களைப் பிடிக்க வேண்டுமென வனத்துறையினரிடம் உள்ளூர் மக்கள் வலியுறுத்துகிறார்கள். இப்படிப் பிடிக்கப்படும் காட்டு யானைகள் பெரும்பாலும் க்ராலில் அடைக்கப் பட்டுப் பழக்கப்படுகின்றன. க்ரால் என்பது வேறொன்றுமில்லை, வலுவான பெருமரத் துண்டுகளால் யானையை அடைத்துவைக்கும் பெரிய கூண்டு. அந்த யானை வெளியே எங்கும் செல்ல முடியாது.

க்ரால் என்பது ஒருவகை சிறை வாசமே. பெரும்பாலும் க்ராலில் அடைக்கப்படும் யானைகள் வலுக்கட்டாயமாக வேலைக்குப் பழக்கப்படும்; மனிதர்கள் கொடுக்கும் கட்டளைகளுக்கு அடிபணிய வைக்கப் படும். இதுபோன்று பழக்கப்பட்ட யானைகளுக்குத் தற்போது காடுகளில் திட்டவட்டமான வேலை எதுவும் இல்லை. சுருக்கமாக யானைகளை க்ராலில் அடைத்துப் பழக்குவது என்பது அறிவியல்பூர்மற்றது, சித்திரவதையை அடிப்படையாகக் கொண்டது, சூழலியலுக்கு எதிரானது என்பதில் சந்தேகமில்லை.

வனத்துறையின் ஆக்கபூர்வ முடிவு

மனிதர்களுக்கு யானைகளின் வாழ்க்கை குறித்து எந்த அக்கறையும் இல்லை. தங்கள் பகுதியிலிருந்து ஒரு யானை அகற்றப்பட்டால் போதும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் க்ராலில் அடைக்கப்பட்ட ரிவால்டோ என்கிற யானையைத் திரும்பக் காட்டுக்குள் விடுவது என்கிற ஆக்கபூர்வ முடிவை வனத்துறை எடுத்து ஆக. 2 அன்று அதைச் செயல்படுத்தியது. தமிழகத்தில் க்ராலில் அடைக்கப்பட்ட யானை ஒன்று காட்டுக்குள் விடப்படுவது இதுவே முதன்முறை. அதன் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது.

வனத்துறை முதன்மைச் செய லாளர் சுப்ரியா சாஹு, தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ் ஆகியோர் அடங்கிய உயர் அலுவலர்கள் குழு, நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்தனர். பிடிபட்ட யானைகளை அவற்றின் இயல்பான வாழிடங்களில் விடுவதே சரியானது என்கிற அறிவியல் பூர்வ முடிவின்படி வனத்துறை செயல்பட்டது.

வனத்துறையின் இந்த ஆக்கபூர்வ மான முடிவைத் திட்டமிட்டு எதிர்க்கும் சில குழுக்கள், ரிவால்டோ யானையை மீண்டும் பிடித்து க்ராலில் அடைக்க வேண்டும், பழக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை வெவ்வேறு வகைகளில் கொடுத்துவருகின்றனர். அது மட்டுமல்லாமல், வனத்துறையில் அறிவியல்பூர்வாகச் செயல்பட முனையும் சில அதிகாரிகளை, அப்படிச் செயல்பட விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளும் திரைமறைவில் அரங்கேறிவருகின்றன.

வித்யா பாலன் நடித்து, சில மாதங்களுக்கு முன் வெளியான ‘ஷேர்னி’ திரைப்படத்தில், ஆட்கொல்லி யாக முத்திரை குத்தப்பட்ட பெண் புலி ஒன்றைக் காட்டுக்குள் இயல்பாக வாழ விடுவதற்கான முயற்சிகளைத் துணிச்சலான வனத்துறை அதிகாரி யான வித்யா பாலன் எடுப்பார். ஆனால், ஆட்சியாளர்களும் ‘காட்டுயிர் பாதுகாவலர்கள்’ என்கிற அடையாளத் துடன் உலவும் போலிகளும் அந்தப் புலியைக் கொல்வதிலேயே குறியாக இருப்பார்கள். ரிவால்டோ, பிடிபட்ட மற்றக் காட்டு யானைகள் விஷயத்திலும் ‘ஷேர்னி’ திரைப்படக் காட்சிகளை விஞ்சும் வகையில் சூழலியலுக்கு எதிரான சில குழுக்கள் இயங்கிவருகின்றன.

முன்கதை

ரிவால்டோ என்கிற இந்தக் கொம்பன் யானை, நீலகிரி மாவட்டத்தின் மசினகுடி பகுதியில் மே மாதம் பிடிக்கப்பட்டு முதுமலை புலிகள் சரணாலயத்தின் வாழைத்தோட்டம் பகுதியில் க்ராலில் அடைக்கப்பட்டது. இவ்வளவுக்கும் இந்த யானை ஒரு முறைகூட மனிதர்களைத் தாக்கிய தில்லை, பயிர்களைச் சேதப்படுத்தி யதும் இல்லை. அதற்கு ஒரு கண்ணில் பார்வைக் கோளாறு இருந்தது, காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கி அதன் தும்பிக்கையின் முன்பகுதியில் 2012இல் காயம் ஏற்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட காயத்துக்குச் சிகிச்சை அளிக்க என்கிற பெயரில் அந்த யானை மே மாதம் பிடிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் முனைவர் த. முருகவேள் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், சிகிச்சைக்குப் பிறகு ரிவால்டோ யானையைக் காட்டில் விட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

மதம் பிடிக்காத காலத்தில் நீலகிரி வனத்துறை வடக்குப் பிரிவின் கல்லட்டி, வாழைத்தோட்டம், சேடப்பட்டி, மாவனல்லா ஆகிய பகுதிகளில் அது உலவியுள்ளது. அப்பகுதி மக்கள் அதற்கு உணவு கொடுத்து வந்துள்ளனர். அதன் காரணமாகவே, அது காட்டுக்கு வெளியே வரத் தொடங்கியது. அதேநேரம் ஒரு யானைக்கு ஒரு நாளைக்கு 100 கிலோவுக்கு மேல் தாவரப்பொருட்கள் தேவை. மனிதர்கள் கொடுக்கும் உணவால் மட்டுமே அது வாழ்ந்திருக்க முடியாது.

வலுவற்ற எதிர் வாதங்கள்

க்ராலில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அதன் பார்வைக் கோளாறு, தும்பிக்கை காயம் ஆகியவற்றுக்கு உரியச் சிகிச்சை அளிக்க முடியவில்லை. காரணம் இந்தக் குறைபாடுகள் நீண்ட காலத்துக்கு முன்பு ஏற்பட்டவை. அதற்குத் தற்போது சிகிச்சையளிப்பது சாத்தியமற்றது. மேலும் பல யானைகளைப் போலவே தனக்கு ஏற்பட்ட சிறு ஊனங்களைச் சமாளித்து வாழ ரிவால்டோ பழகியிருந்தது. ஊனங்களைத் தாண்டி ஆரோக்கியமாகவும், புத்திசாலியான செயல்பாடு களையும் வெளிப்படுத்தியது. காட்டில் விடப்பட்ட பிறகு மற்ற கொம்பன் யானைகளுடன் அது இயல்பாகப் பழகியதையும் தேவையான உணவைத் தேடிக்கொண்டதையும் வனத்துறை பதிவுசெய்துள்ளது.

ரிவால்டோவைப் போன்று ஆரோக்கியமான, முதிர்ந்த ஓர் யானையை க்ராலில் அடைத்து வைப்பதும் வலுக்கட்டாயமாக அதற்குப் பயிற்சியளிக்க முயல்வதும் அறிவியலுக்கும் யானைகளின் வாழ்க்கைமுறைக்கும் முற்றிலும் எதிரானது என்கிற வாதத்தை வனத்துறை புரிந்துகொண்டுள்ளது. ரிவால்டோவின் வயது 35-40 இருக்கலாம். இந்த வயது யானைகளைப் பழக்குவது எளிதானதல்ல. மீறிச் செய்வது யானையை அமைதியின்மைக்கு இட்டுச்செல்லக்கூடும்.

அது கொம்பன் யானை என்பதால் வேட்டையாடப்படுவதற்குச் சாத்தியமுள்ளது என்கிற ஆதாரமற்ற வாதமும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அது வாழ்ந்த பகுதியில் மேலும் சில ஆண் யானைகளும் வாழ்ந்துவருகின்றன. எனவே, வேட்டையாடப்படும் என்கிற வாதமும் அடிபட்டுப் போகிறது. இருந்தும்கூடச் சில குழுக்கள் ரிவால்டோ யானையைத் திரும்பப் பிடிக்க வேண்டும் என்று போகாத ஊருக்கு வழி சொல்லி வருகின்றன.

அறிவியல் அணுகுமுறை அவசியம்

ரிவால்டோ நீலகிரி காட்டுப் பகுதியில் விடப்பட்டாலும், 25 கி.மீ. பயணம் செய்து, க்ராலில் அடைக்கப் பட்ட மசினகுடி பகுதிக்கே திரும்ப வந்துவிட்டது. அது இயல்புநிலைக்குத் திரும்புவதற்குப் பொறுத்திருக்க வேண்டும் என்கிறது வனத்துறை. “பொதுவாகவே ஒரு காட்டு யானையைப் பிடித்து, பயிற்சியளித்து, பராமரிப்பதற்கு ஆகும் செலவைவிட, அதைக் காட்டில் இயல்பாக விடுவது காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்தும் சூழலியலுக்கும் நல்லது.

ரிவால்டோவைப் போன்ற ஆரோக்கியமான முதிர்ந்த ஆண் யானைகள் காட்டில் வாழ்வதன் மூலம், அப்பகுதி யானைகளின் மரபணுப் பன்மை மேம்பட்ட நிலையில் இருக்கும். ஏனென்றால், காட்டில் ஆண்-பெண் யானை விகிதமும் உரிய வகையில் இல்லை. 35-40 வயதுக்கு இடைப்பட்ட வயதில் இருக்கும் ரிவால்டோ இனப்பெருக்க யானைக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதே நல்லது. ஏனென்றால், தமிழகக் காட்டு யானைகளின் தொகை அண்மை ஆண்டுகளாகச் சரிவில் உள்ளது.

மனித-யானை எதிர்கொள்ளல் நிகழும்போது, யானைகளைப் பிடித்து அடைத்துவைப்பதற்கு மாறாக, அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும். ரிவால்டோ ஏற்கெனவே வாழ்ந்த பகுதிகளுக்குத் திரும்ப வரக்கூடும். இதையும் அறிவியல் பூர்வமாக அணுகி அது காட்டுக்குள் வாழ்வதை உத்தரவாதப்படுத்த வேண்டுமே ஒழிய, அதைப் பிடிப்பது நிரந்தரத் தீர்வாகாது.

காட்டுக்கு வெளியே வரும் யானைகளைப் பிடிப்பது, மீண்டும் அவற்றைக் காட்டில் விடுவது தொடர்பாக அறிவியல் அடிப்படையில் அடிப்படை இயக்க நடைமுறைகள் வகுக்கப்படும்” என்கிறார் தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ்.

தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
ரிவால்டோRivaldo elephantஉலக யானை நாள்கொம்பன் யானை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x