Published : 07 Aug 2021 03:17 AM
Last Updated : 07 Aug 2021 03:17 AM

பசுமை சிந்தனைகள் 17: சூழலியல் வளமே மொழி வளம்

நாராயணி சுப்ரமணியன்

இயற்கையுடன் தனக்கு இருக்கும் பிணைப்பையும் அதன் வெவ்வேறு கூறுகளையும் மனித இனம் மொழியைக்கொண்டே விவரிக்கிறது, புரிந்துகொள்கிறது. மனிதர்களின் அக உலகுக்கும் புற உலகுக்கும் ஒரு பாலமாக விளங்கும் மொழி, சூழலியலில் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகிறது சூழலியல்சார் மொழியியல் (Eco linguistics) என்கிற கருத்தாக்கம்.

1990இல் மைக்கேல் ஹல்லிடே என்கிற ஆங்கில மொழியியலாளரால் இது வரையறுக்கப்பட்டது. சூழலியல் சீர்கேடுகளை அறிவியலாளர்கள் மட்டுமல்லாமல், மொழியியலாளர்களும் கவனிக்க வேண்டும். மனிதன் உட்பட எல்லா உயிரினங் களையும் மொழிக்கூறுகள் பாதிக்கின்றன என்றார். எந்த அளவுக்கு மொழி நிதர்சனத்தைப் பிரதிபலிக்கிறதோ, அதே அளவுக்கு நிதர்சனத்தை மாற்றியமைக்கிற ஒரு கருவியாகவும் மொழி செயல்படுகிறது என்று அவர் நிறுவினார். மனிதனுக்கும் இயற்கைக்குமான பிணைப்பில் மொழி எப்படிப்பட்ட பங்களிப்பைச் செய்கிறது என்று இந்தக் கருத்தாக்கம் ஆராய்கிறது.

சூழலியல்சார் மொழியியலில் இரண்டு முக்கிய அங்கங்கள் உண்டு: மொழியைச் சூழலியல் பார்வையில் ஆராய்வது/திருத்தியமைப்பது; மொழிப் பன்மைக்கும் உயிரினப் பன்மைக்கும் உள்ள பிணைப்பைப் புரிந்துகொள்வது. சூழலின் ஓர் அங்கமாக மனிதன் தன்னைத்தானே உணரும் விதத்தில் மொழியை வடிவமைப்பது, முக்கியச் சூழலியல் பிரச்சினைகளைச் சரியான விதத்தில் அணுகுவதற்கு மொழியியலைப் பயன்படுத்துவது போன்றவையும் கவனப்படுத்தப்படுகின்றன.

உரிய பொருள்

சூழலியல் பார்வையில் அணுகும் போது, முக்கியப் பிரச்சினைகளை விவாதிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மொழியில் போதாமைகள் இருக்கின்றன. மனிதனை மையப்படுத்திய சிந்தனை யோடு சூழலியல் பிரச்சினைகள் விவரிக்கப்படும்போது, அதுவே சூழலியல் சீர்குலைவுக்கு மறைமுகமாக வித்திடுகிறது. வெகுஜன ஊடகங்களில் சூழலியல் சார்ந்த சரியான சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் வைக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் பற்றிய செய்தி களில் முக்கியச் சொற்களை மாற்றப்போவதாக 2019ஆம் ஆண்டு ‘கார்டியன்’ அறிவித்தது. உதாரணமாக, ‘காலநிலையைச் சந்தேகத்துடன் அணுகுபவர்’ (Climate Skeptic) என்று சொல்லும்போது, அவரது ஐயம் நியாயமானது என்கிற தொனி வருகிறது. அதற்கு மாற்றான ‘காலநிலை மறுப்பாளர்’ (Climate denier) என்கிற சொல், அறிவியல் ஆதாரங்கள் இருந்தும்கூடக் காலநிலை மாற்றக் கருத்தாக்கத்தை மறுப்பவர் என்பதைச் சுட்டுகிறது.

ஆஸ்திரேலியாவில் குடியேறிய பிரிட்டிஷ் காலனியவாதிகள், அங்கே கண்ட சிறு பாலூட்டிகளைப் புதர் எலிகள் (Bush rats) என்றே வகைப்படுத்தினர். ஐரோப்பாவில் தொல்லை உயிரினங் களாகக் கருதப்பட்ட எலிகளின் பெயர் சூட்டப்பட்டதால், இவற்றை வேட்டையாடி அழிப்பது தவறில்லை என்கிற மனப்பான்மை பரவியது.

அதேபோல் சூழலியல் பிரச்சினை களைப் பற்றிய நமது உருவகங்கள்கூடக் கவனமாக உருவாக்கப்பட வேண்டும் என்று எச்சரிக்கிறார் மொழியியலாளர் ஆரான் ஸ்டிபே. மனித மூளை மொழியை எப்படி உள்வாங்கிக்கொள்ளும் என்கிற புரிதல் இல்லாமல் உருவாக்கப்படும் சூழலியல் சொல்லாடல்கள் எதிர்மறை விளைவு களையே ஏற்படுத்தும்.

மொழியும் சூழலியலும்

சூழலியல்சார் மொழியியலின் இரண்டாம் அம்சமான உயிரினப் பன்மைக்கும் மொழிப் பன்மைக்கும் உள்ள பிணைப்பு நுணுக்கமானது. தொண்ணூறுகளில் ஆப்பிரிக்காவின் மொழிப் பன்மையை ஆராய்ந்த டேவிட் நெட்டில், ஓராண்டின் சராசரி மழைநாட் களின் எண்ணிக்கைக்கும் ஒரு பகுதியில் நிலவும் மொழிப் பன்மைக்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார். போதுமான அளவில் மழை பெய்யும்போது, விவசாயம் தடையின்றி நடக்கிறது, இயற்கை வளங்களும் போதுமான அளவில் கிடைக்கின்றன. அந்த இனக்குழுக்கள் வேறெங்கும் செல்ல வேண்டிய தேவையில்லை என்பதால், சிறிய பகுதிகளில்கூடத் தனி மொழிகள் நிலைக்கின்றன, மொழிப் பன்மை அதிகரிக்கிறது. வறண்ட பகுதிகளில் உணவுக்காக மற்ற இனக்குழுக்களை அப்பகுதி மக்கள் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.அதனால், அங்கே பொதுவான ஒரு மொழியே நிலவுகிறது.

மொழிகள் ஓரிடத்தின் மரபையும் இயற்கைச் சூழலையும் ஆதாரமாகக் கொண்டு பிறக்கின்றன. உலகில் உயிரினப் பன்மை அதிகமாகக் காணப் படும் இடங்களில் எல்லாம், மொழிப் பன்மையும் மேம்பட்டிருக்கிறது. மொழி யியல் கூறுகள் தன்னளவில் மரபுச் செல்வங்களாக இருப்பதுடன், சூழலியலை ஆவணப்படுத்தும் கருவிகளாகவும் விளங்குகின்றன.

பனிக்கு 50 சொற்கள்

அமெரிக்கத் தொல்குடியினரான நவாஜோக்களின் மொழியில், ஒரே மாதிரியாகத் தெரியும் இரண்டு காட்டுச் செடிகளுக்கு ‘பெரிய தேன்சிட்டின் உணவு’, ‘மெலிந்த தேன்சிட்டின் உணவு’ என்று பெயரிடப் பட்டுள்ளது. இவை காட்டுச் செடிகளைக் குறிப்பது மட்டுமில்லாமல், இரண்டு வகைத் தேன்சிட்டுகளும் அவற்றின் உணவுப்பழக்கங்களும் சேர்த்தே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. எஸ்கிமோக்களின் மொழியில் பனியைக் குறிக்க 50-க்கும் மேற்பட்ட சொற்கள் உண்டு. ‘நிலத்தில் விழுந்த பனி’, ‘புதிதாக விழுந்த பனி’, ‘கல் உப்பைப் போன்ற பனி’ என்று ஒவ்வொரு வகைப் பனிக்கும் தனித்தனி சொற்கள் உண்டு.

தமிழகத்தின் நெய்தல் பகுதிகளில், முக்கியமான மீன்களின் ஒவ்வொரு வாழ்நிலைக்கும் தனித்தனி பெயர் களைச் சுட்டி மீனவத் தொல்குடிகள் வகைப்படுத்துவார்கள். இவை எல்லாமே அந்தச் சூழலின் நுண் ஆவணங்கள். சூழலியல் மாறும்போதோ விலங்குகள் அழியும்போதோ, அவை குறித்த மொழிக்குறிப்புகளும் அழிந்துவிடுகின்றன. இன்னொரு புறம், தொல்குடிகளின் மொழி அழியும்போது, சூழலியல் பற்றிய அவர்களது அறிவும் அழிந்துவிடுகிறது.

தொல்குடியினரின் மொழிக்குள் புதைந்துகிடக்கும் மரபுசார் அறிவைப் பயன்படுத்தி சூழலியலைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. அதேநேரம், மாறி வரும் உலகில் சூழலியல் சீர்கேடுகளைப் பற்றிய விவாதங்களைச் சரியான முறையில் கொண்டுசெல்வதற்கான புதிய சொற்களும் உருவாக்கப்படு கின்றன. மொழி எனும் பழமையான கருவியைக்கொண்டு புதிய உலகை எதிர்கொள்வதற்கான கருவியாக இந்தக் கருத்தாக்கம் விளங்குகிறது.

கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x