Last Updated : 02 Aug, 2021 03:44 PM

 

Published : 02 Aug 2021 03:44 PM
Last Updated : 02 Aug 2021 03:44 PM

எந்த முதலீடு பாதுகாப்பானது?

சமீபத்தில் ஒரு செய்தி பெரும் வைரலானது. தெலங்கானாவில் ஒரு ஏழை விவசாயி தன்னுடைய அறுவை சிகிச்சைக்காகச் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் எலி கடித்து குதறி வைத்திருந்தது. கிழிந்த அத்தனை 500 ரூபாய் தாள்களையும் பார்த்து ஒன்றுமே செய்ய முடியாமல் கலங்கினார். அதுவும் இந்த கரோனா காலகட்டத்தில் அவரது நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

உண்மையில் பார்த்தால் அவர் மட்டுமல்ல பெரும்பாலானோர் இந்த நிலையில்தான் இருக்கிறோம். காரணம் தற்போதைய சூழலில் பணம் கையில் இருந்தாலும், வங்கியில் இருந்தாலும், வேறு ஏதேனும் ஒரு முதலீட்டில் இருந்தாலும் அதன் மதிப்பு என்னவாகுமோ என்ற நிலையற்ற தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கரோனா காலத்தில் பெரும்பாலானோர் வருமான இழப்பும், வேலை இழப்பும் சந்தித்தனர். இதனால் தங்களிடம் உள்ள பணத்தை நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் பலரிடமும் அதிகரித்துள்ளது.

ஆனால், எந்த முதலீட்டில் பணத்தைப் போடுவது என்பதுதான் இப்போது பெரும் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. காரணம் உலகளவில் முதலீட்டுச் சந்தை பெரும் அழுத்தத்துக்குள்ளாகியிருக்கிறது. பாதுகாப்பான முதலீடுகள் எனக் கருதப்பட்டவையும் கூட அந்த அந்தஸ்தை இழந்துள்ளன. பாதுகாப்பான முதலீடு என்பது எப்போது நமக்கு தேவையாக இருக்கிறதோ அப்போது நமக்கான பணத்தைத் திரும்பப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பான முதலீடு என்பதற்கான உத்திரவாதம் கிட்டதட்ட எதிலும் இல்லை.

பொதுவாகவே முதலீட்டாளர்களை ஈர்க்க முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துபவர்கள் கூறுவது இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு வளர்ச்சி என்பதுதான். உண்மையில் அது மேலோட்டமான விளம்பர வாசகம். எல்லோருக்கும் பொருந்தாத ஒன்று. முதலீடு செய்பவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே அதன் பலனை அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே பலன் பெறுவார்கள் அல்லது இருப்பதையும் இழக்கிறார்கள். பொருளாதாரமும், நிதி சந்தையும் நன்றாக இருக்கும்போதே இந்த நிலைதான். தற்போது பொருளாதாரமும், நிதி சந்தையும் நெருக்கடியில் இருந்துவரும் சூழலில் முதலீட்டுத் திட்டங்களின் பாதுகாப்பு தன்மை மீதான கேள்வி முதலீட்டாளர்களிடையே அதிகமாகவே எழுந்துள்ளது.

எப்போதெல்லாம் தனியார் சந்தையின் முதலீட்டுத் திட்டங்கள் தோல்வி அடைகின்றனவோ அப்போது முதலீட்டாளர்கள் தங்கம், கடன் பத்திரங்கள், வங்கி டெபாசிட்டுகள் பக்கம் திரும்புவார்கள். இவை தள்ளாட்டத்தில் இருக்கும்போது மக்கள் தனியார் முதலீட்டு திட்டங்கள் பக்கம் திரும்புவார்கள். ஆனால், தற்போது அனைத்துமே ஒருவித அழுத்தத்தில், நிலையற்ற தன்மையில் இருக்கின்றன. இதனால் முதலீடுகள் செய்யப்படுவது வெகுவாகக் குறைந்து பணம் புழக்கத்துக்கு வராமலேயே உள்ளது. கடனாகவோ, முதலீடாகவோ பணம் சந்தைக்குள் வரவில்லை எனில் லட்சக்கணக்கான மக்கள் வறுமையிலும், பொருளாதார ஏற்றத்தாழ்விலும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள். எனவே பணத்தை வெறுமனே வைத்திருப்பதும் ஆபத்தானது. அவரவர் தேவை மற்றும் இலக்குக்கு ஏற்ப, ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கு ஏற்ப முதலீடுகளைச் செய்வது நமக்கும் நாட்டுக்கும் அவசியமானது. அதற்கு முதலீடுகள் பற்றி தெரிந்துகொள்வது பலன் தரும்.

தங்கம்

இந்தியாவில் பெரும்பாலும் தங்கம் முதலீடாக பார்க்கப்படுவதில்லை. தங்க நகைகள் மீதான மோகத்தாலும், அதற்கு குறிப்பிட்ட அடமான மதிப்பு இருப்பதாலும் தங்கத்தை மக்கள் வாங்குகிறார்கள். தற்போது தங்கம் விற்கும் விலைக்கு பலர் தங்கத்தை வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். மற்றபடி முதலீடாகப் பார்ப்பவர்கள் மிகக் குறைவு. இவர்கள் தங்க நகைகளும், தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களும் வாங்குவதற்கு மாற்றாக தற்போது தங்கப் பத்திரங்கள், தங்க இடிஎஃப் திட்டங்களுக்கு மாறியிருக்கிறார்கள். ஆனால் இவையும் பெரிய அளவில் வருமானம் ஈட்டுவதில்லை என்ற நிலையே அவர்கள் மனதில் இருக்கிறது.

அசெட் அலோகேஷன் அடிப்படையில் முதலீடு செய்பவர்கள் தங்கத்தில் குறிப்பிட்ட அளவு முதலீட்டை மேற்கொள்கிறார்கள். 2020ல் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டபோது தங்கம் 25 சதவீத அளவுக்கு ஏற்றம் கண்டது. ஆனால் தங்கத்தை நகைகளாக, நாணயமாக வாங்குவதை விடவும் தங்க பத்திரங்கள் வாங்குவது ஓரளவுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும். காரணம் தங்கத்தை வாங்கும் போதும் விற்கும் போதும் கணிசமான இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. தங்கப்பத்திரங்களில் அந்த இழப்பு இல்லை. மேலும் தங்கப் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

பங்குச் சந்தை

பங்குச் சந்தையைப் பொருத்தவரை அதிக அபாயங்களுக்கு உட்பட்டது என்பது அனைவருக்குமே தெரியும். கவனிக்காமல் விட்டால் மொத்த முதலீடுமே போய்விடும் அபாயம் கொண்டது. எனவேதான் முதலீடுகளைக் கண்காணித்து நஷ்டத்தை குறைக்க மியூச்சுவல் ஃபண்ட் துறை உருவானது. ஆனால் அதிக வால்யூம்களில் தினசரி வர்த்தகம் ஈடுபடுபவர்களுக்குத்தான் பெரும்பாலும் பங்குச் சந்தை வருமானம் தருவதாக இருக்கிறது. சிறு முதலீட்டாளர்களுக்கு அதாவது பெரும்பான்மையினருக்கு பங்குச் சந்தையும், மியூச்சுவல் ஃபண்டும் நீண்டகாலத்தில் மட்டுமே பலன் தரும். அதுவும் நம்முடைய முதலீட்டின் அளவைப் பொருத்தும், முதலிட்டை வைத்திருக்கும் காலத்தைப் பொருத்தும்தான் அந்த வருமானம் இருக்கும். ஆனால் இது 99 சதவீதம் நடப்பதில்லை.

ஒட்டுமொத்தமாக பங்குச் சந்தையின் வளர்ச்சி அதிகரித்திருந்தாலும் பெரும்பான்மை முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடும் அளவுக்கு பலன் அளிப்பதில்லை. பங்கு முதலீடுகளில் நாம் எடுக்கும் என்ட்ரி, எக்சிட் இரண்டும்தான் அதை முடிவு செய்கிறது. எஸ்ஐபி போன்றவற்றில் சிறுக சிறுக சேமிக்கும் பணமானது பல ஆண்டுகளாகியும் பெரிய வருமானத்தைத் தரவில்லை என்ற ஆதங்கம் பெரும்பாலான முதலீட்டாளர்களிடம் உள்ளது. மேலும் பங்குச் சந்தையின் அதீத ஏற்ற இறக்கமானது முதலீட்டாளர்களை எந்த அளவுக்கு ஈர்க்கிறதோ அதே அளவுக்கு நம்பிக்கை இழக்கும் செய்கிறது. பங்குச் சந்தை கரோனாவுக்குப் பிறகு மிகவும் பாசிட்டிவாக தோன்றினாலும் புதிய உச்சங்களை எட்டியிருந்தாலும் பலமுறை திடீர் இறக்கங்களையும் கண்டிருக்கிறது. முக்கியமாகத் தொடர்ந்து ஒருவிதமான நிலையற்ற சூழலையும் தயக்கத்தையும் உண்டாக்கும் வகையில் இருக்கிறது.

அரசு கடன் பத்திரங்கள்

முதலீடுகளில் கடன் பத்திரங்கள் பாதுகாப்பானவையாகக் கருதப்படுவதுண்டு. காரணம் இதற்கு உத்திரவாதமான வட்டி வழங்கப்படுகிறது. அரசு கடன் பத்திரங்களுக்கு தற்போது 7.15 சதவித வட்டி ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்தக் கடன் பத்திரங்கள் கட்டாய முதிர்வு காலத்தைக் கொண்டவை. அதனால் பெரும்பாலும் நன்றாக வருமானம் ஈட்டக்கூடிய நபர்களுக்கே இது பொருத்தமானதாக இருந்துவருகிறது. அதாவது ஓய்வுக்கால நிதி தேவைக்காக சேமிப்பவர்களுக்கு இது சரியான ஒன்றாக இருக்கிறது. தற்போது நேரடியாக யாரும் அரசு கடன் பத்திரங்களை வாங்கலாம் என்ற வசதியை ரிசர்வ் வங்கி உண்டாக்கியுள்ளது. ரீடெய்ல் டைரக்ட் கில்ட் அக்கவுன்ட் என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதேசமயம் சில நேரங்களில் கடன் பத்திரங்களும் நெருக்கடிக்குள்ளாகலாம். காரணம் அரசுகளின் கடன் சுமை அதிகரிப்பு அடிப்படை நிதிநிலையை சீர்குலைக்கும்போது சிக்கல் உண்டாகும். தற்போது உலக நாடுகளின் பொது கடன் தற்போது மொத்த உலக ஜிடிபியில் 97 சதவீதமாக உள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2008-09ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியின்போது கூட இந்த அளவு கடன் இல்லை. குறிப்பாக குறைவான தனிநபர் வருமானம் கொண்ட நாடுகள் அதிக கடன் அழுத்தத்தின் பாதிப்புகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் கடனும் கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து 570 பில்லியன் டாலராக இந்தியாவின் கடன் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதாவது இந்தியாவின் கடன் -ஜிடிபி விகிதமானது 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இது கடன் பத்திரங்கள் மீதான பாதுகாப்பு உத்திரவாதத்தை குறைப்பதாக இருக்கிறது. உலகிலேயே நிலையான அரசுகளாக இருக்கும் அமெரிக்கா, ஜெர்மனி போன்றவை வெளியிடும் கடன் பத்திரங்கள்தான் பாதுகாப்பானவை எனக் கூறப்படுகின்றன. வருமானம் ஈட்டக்கூடிய மேம்பாட்டு வளர்த்தி திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டால் கடன் என்பது நல்லது. ஆனால், கடனுக்கு மேல் கடன், நஷ்டத்தினால் கடன் என அதிகரித்துவரும்பட்சத்தில் கடன் என்பது பெரும் சுமையாக மாறிவிடும். கடன் அளவானது ஒருநாட்டின் நிதிநிலையில் குறிப்பிட்ட அளவு வரை இருந்தால் சமாளிக்க முடியும். அந்த அளவைத் தாண்டினால் பெரும் பிரச்சினைகளை உண்டாக்கும். பல நாடுகள் இந்தக் கட்டத்தை 2019லேயே கடந்துவிட்டதாகக் கூறப்படுகின்றன.

வங்கி சேமிப்பு திட்டங்கள்

பிற முதலீட்டுத் திட்டங்கள் நம்பிக்கை இழக்கும்போது மக்கள் வங்கி சேமிப்பு திட்டங்களைத் தேர்வு செய்வார்கள். ஆனால் இவையும் தற்போது பலன் தரக்கூடியதாக இல்லை. காரணம் சந்தையை ஊக்குவிப்பதற்காக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துவருவதால் ஒட்டுமொத்தமாக வங்கி சேமிப்பு திட்டங்களின் வட்டியும் குறைக்கப்பட்டது. இதனால் எந்த முதலீடும் ரிஸ்க்கும் தேவையில்லை இருக்கும் பணம் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்று நினைத்தவர்களின் தேர்வாகக் கருதப்பட்ட வங்கி சேமிப்பு திட்டங்களிலும் சிக்கல் உண்டானது. அதுமட்டுமல்லாமல் வங்கிகளின் வாராக்கடன் சுமை, அதையொட்டி வங்கிகள் திவால் ஆவது போன்ற சிக்கல்களும் உள்ளன.

வங்கிகள் ரீடெய்ல் வர்த்தகத்தை ஊக்குவிக்காமல் மொத்த வர்த்தகத்தை ஊக்குவித்ததன் விளைவினால்தான் தற்போது பெரும் வாராக்கடன் சுமையை அனுபவிக்கிறது. 2008ல் அடமானக் கடன்கள் பெரும் நெருக்கடிக்குள்ளானதால் அமெரிக்காவில் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியது நினைவிருக்கலாம். தற்போது பெரும்பாலான வங்கிகள் வாராக்கடன் சுமையில் உள்ளன. வங்கி இணைப்புகள், வங்கி சீரமைப்புகள் போன்ற தொடர் நடவடிக்கைகளை அரசும் எடுத்துவருகிறது. ஆனாலும் தொடர்ந்து சவால்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாகவே தற்போது அரசு டெபாசிட்டுகள் மீது ரூ.5 லட்சம் காப்பீடு உத்திரவாதம் அளித்துள்ளது.

கிரிப்டோகரன்சி

சமீபத்தில் மக்களிடையே அதிகம் பிரபலமாகிவரும் வார்த்தை இது. 100 ரூபாய் கூட முதலீடு செய்யலாம் என்றதும் எல்லோரும் இதன் பக்கம் சாய தயாராக இருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசே கிரிப்டோகரன்சி வர்த்தகம் பற்றிய தரவுகள் இல்லை என்று கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி ஒருபக்கம் பிரத்யேக டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யப் போவதாகக் கூறியுள்ளது. அதற்குள் மக்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடுகளைக் குவித்துவருகிறார்கள். கிரிப்டோகரன்சியின் ஏற்ற இறக்கம் பங்குச் சந்தையை விடவும் நிலையில்லாததாக இருக்கிறது. ஆனாலும் மக்களிடையே கிரிப்டோகரன்சி மோகம் அதிகரித்துள்ளது.

காரணம் அனைத்து முதலீடுகளிலும் மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். உடனடியாக அதிக வருமானம் தரக்கூடிய எந்தத் திட்டம் வந்தாலும் அதன் நிலைத்தன்மை பற்றி கவலைப்படாமல் அபாயங்களைப் பார்க்காமல் முதலீடு செய்ய தயாராக இருக்கிறார்கள். இதன் விளைவுதான் கிரிப்டோவில் முதலீடுகள் தொடர்ந்து அசுர வேகத்தில் வளர்ந்துவருகிறது. கிரிப்டோகரன்சி முறைப்படுத்தப்பட்ட முதலீடாக உருவெடுக்கும்வரை அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. அதையும் தாண்டி இறங்கினால் முழு ரிஸ்க்கும் அவரவருடையது.

எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்ற பலன் கிடைக்கிறதா என்பதையே பெரும்பாலும் பார்க்க வேண்டியிருக்கிறது. முதலீடுகளைப் பொறுத்தவரை வால்யூமை பொருத்தே லாபமானது இருக்கிறது. மற்றபடி சிறு முதலீட்டாளர்களின் முதலீடுகளானது கொடுக்கும் வருமானமானது பணவீக்கத்தைத் தாண்டி கணக்கிடுகையில் பெரிதாக எந்தப் பலனையும் தருவதில்லை. இதனால் முதலீடு செய்வதில் தயக்கம் உண்டாகிறது.

முதலீட்டு சமூகம்தான் பணத்தை முதலீடு செய்ய தயக்கம் காட்டுகிறது என்று பார்த்தால். தொழில் சமூகமும் முதலீடுகளை மேற்கொள்வதில், விரிவாக்கத்தில் கவனம் செலுத்துவதில் தயக்கம் காட்டுகின்றன. கரோனா ஊரடங்கு பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படுத்திய தாக்கத்தினால் தொழில் நிறுவனங்கள் எச்சரிக்கையாக செயல்படும் மனநிலைக்கு வந்துள்ளன. லாபத்தை சேமித்துவருகின்றன. தனியார் முதலீடுகள் குறைந்ததால் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாவது கடினமாகியுள்ளது. ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்குவது பழைய நிலைக்கு மாறவில்லை. இவையனைத்துமே நாட்டின் நிதி சந்தையின் பின்னடைவுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

saravanan.j@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x