Published : 02 Aug 2021 15:42 pm

Updated : 02 Aug 2021 15:42 pm

 

Published : 02 Aug 2021 03:42 PM
Last Updated : 02 Aug 2021 03:42 PM

சும்மா இருப்பதும் சுகமே!

being-idle-is-a-thrill

'கடந்த இரண்டு வருடங்களாக நான் எந்த வேலையிலும் இல்லை. அங்கும் இங்குமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்… குடில்களில் தூங்குகிறேன்; சூரிய உதயத்தைக் கண்டுகளிக்கிறேன்…சும்மா படுத்திருப்பதுதான் என்னுடைய தத்துவம். சும்மா படுத்திருப்பதன் வழியே மனிதன் எல்லாவற்றையும் மதிப்பிட முடியும்.'

லுவோ ஹூயெஷாங் (Luo Huazhong) என்ற 31 வயதான சீன இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய வலைப்பூவில் பதிவிட்ட ‘சும்மா படுத்திருப்பதே நீதி’ (lying flat is justice) என்ற பதிவிலுள்ள வாசகங்கள்தான் மேலே இருப்பது. லுவோ ஹூயெஷாங் ஐந்து வருடங்களுக்கு முன்பு தன் வேலையை விட்டுவிட்டு பைக்கில் பல்வேறு இடங்களுக்கு பயணிப்பதை வாழ்க்கையாக தேர்ந்தெடுத்துக்கொண்டார். அங்கங்கு கிடைக்கும் வேலைகளைச் செய்து அன்றாட செலவினங்களைக் கவனித்துக்கொள்கிறார்.


நுகர்வு கலாச்சாரத்துக்கு மாற்றாக தன்னுடைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட அவர், தன்னுடைய வாழ்க்கை முறையை ‘சும்மா படுத்திருத்தல்’ (lying flat) என்று குறிப்பிடுகிறார். அந்த வாழ்க்கை முறையானது திருமணம் செய்துகொள்ளாமல் இருத்தல், குழந்தை பெறாமல் இருத்தல், குறைவான அளவில் பொருட்களை வாங்குதல் ஆகியவற்றை முன்வைப்பதாக உள்ளது. அதாவது தேவையைக் குறைத்துக்கொண்டு வாழ்க்கை எளிமையானதாக மாற்றிக்கொள்வதே அதன் சாரம்சம். ‘சும்மா படுத்திருத்தல்’ வாழ்க்கைத் தத்துவம் சீன இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சீனாவின் வேலை முறையை 996 என்று கூறுவார்கள். காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரையில் வேலை, வாரம் ஆறு நாட்களுக்கும். நல்ல ஊதியம் கிடைக்கும் வேலையில் சேர வேண்டும், வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும், திருமணம் செய்ய வேண்டும், குழந்தைகள் பெற வேண்டும் என்பது இந்தியாவைப் போலவே சீனாவிலும் சமூக நிர்பந்தம். இவற்றை அடைவதே ஒரு சீன இளைஞனின் இலட்சியமாக முன்வைக்கப்படும். இப்படியான ஒரு சமூக நிர்பந்த சூழலின் மத்தியில்தான் ‘சும்மா படுத்திருத்தல்’ தத்துவத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தனி மனிதன் வாழ்வில் எவையெல்லாம் முக்கியம் என்பது குறித்தான சமூகப் பார்வையை கேள்வி எழுப்பக்கூடியதாக அந்தத் தத்துவம் அமைந்திருக்கிறது.

‘முந்தைய தலைமுறையினரின் காலகட்டத்தில் கடினமாக உழைத்தால், பொருளாதார ரீதியாக சமூகம் வரையறுத்திருக்கும் வெற்றி இலக்கை எட்டிவிட முடியும். ஆனால் தற்போது சூழல் அப்படி இல்லை. நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் உங்களால் தன்னிறைவான பொருளாதாரத்தை அடைய முடியாது. விலைவாசி மிகப் பெருமளவில் உயர்வு வருகிறது. சீன அரசு மக்கள் உழைப்பதை தேசியக் கடமையாகப் பார்க்கிறது. ஆனால், எவ்வளவு உழைத்தும் தனிப்பட்ட மக்களின் பொருளாதாரம் இறுதிவரையில் மேம்படாமல் இருப்பது மன ரீதியாக பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் ஏன் உழைக்க வேண்டும்? வாழ்வதற்காக.

ஒரு நாளில் பெரும் பகுதி தொழிற்சாலைகளில் பிழிந்தெடுக்கப்பட்டப் பிறகு வாழ்வதற்கு என்ன இருக்கிறது? இதனால் எங்களுடைய தேவையைக் குறைத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். திருமணம் தேவையில்லை. சொந்த வீடு தேவையில்லை. குழந்தை தேவையில்லை. அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான அளவில் வேலை செய்து வாழ்வை வாழ விரும்புகிறோம்’ என்பதே ‘சும்மா படுத்திருத்தல்’ தத்துவத்தை முன்னெடுப்பவர்களின் விவாதமாக இருக்கிறது.

இந்தப் போக்கு பரவலாகும்பட்சத்தில் அது சீனாவின் பொருளாதாரத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் சீனா அரசு ‘சும்மா படுத்திருத்தல்’ தத்துவத்தை ஆதரித்துப் போடப்படும் பதிவுகளை நீக்கி வருகிறது. எனினும், சீன இளைஞர்கள் மத்தியில் ‘சும்மா படுத்திருத்தல்’ பெரும் தாக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.

சீனாவில் மட்டுமல்ல இந்தியா, வங்கதேசம் போன்ற மூன்றாம் உலகநாடுகளின் இளைஞர்களின் நிலைமை இவ்வாறாகத்தான் இருக்கிறது. நீங்கள் ஒரு சராசரி இந்திய இளைஞரை அழைத்துப் பேசிப்பாருங்கள். அவர்கள் எவ்வளவு நெருக்கடியில் இருக்கிறார்கள் என்பது புரியும். படிப்பு இருக்கிறது. ஆனால் வேலையில்லை. வேலையின்மை என்பது பல இளைஞர்களை தற்கொலையை நோக்கித் தள்ளும் அளவிற்கு தீவிரமானதாக மாறிவருகிறது. பெற்றோரின் வருவாயில் தங்கள் நாட்களை கழிக்கும் நிர்பந்தத்தில் இளைஞர்கள் உள்ளனர். படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்காததனால் பல பெண்கள் அவர்களது பெற்றோரால் திருமண வாழ்க்கைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி முடித்து புதிதாக வேலைக்குச் சேரும் ஒரு இளைஞன் குறைந்தபட்சமாக மாதம் ரூ.20,000 ஊதியம் கிடைக்கும் வேலையைப் பெற்றுவிட முடியும். ஆனால், இப்போது மாதம் ரூ.8,000 ஊதியம் கிடைக்கும் வேலையைப் பெறுவதே கடினமாக மாறியிருக்கிறது. ஆனால், விலைவாசி மட்டும் மூன்று, நான்கு மடங்கு உயர்ந்துகொண்டே செல்கிறது.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயைத் தொட்டிருக்கிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் ஊதியம் உயர்ந்திருக்கிறதாக என்றால் இல்லை. ஓட்டைப் பாத்திரத்தில் நிரப்பப்படும் நீர்போல் தான் இருக்கிறது தற்போதைய பொருளாதார சூழலில் மக்களின் உழைப்பும் வருவாயும். இப்படியான ஒரு சூழலில் ஹிப்பி இயக்கம் போல ‘சும்மா படுத்திருத்தல்’ ஒரு இயக்கமாக உலகளாவிய அளவில் பரவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!


சும்மா இருப்பதுசுகம்சீனாBeing idleLuo HuazhongLying flatமுந்தைய தலைமுறைபொருளாதாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x