Published : 30 Jul 2021 03:14 am

Updated : 27 Aug 2021 14:19 pm

 

Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Aug 2021 02:19 PM

ஓடிடி உலகம்: காதலும் காதல் நிமித்தமும்

ott-cinema

இளமை ததும்பும் காதலின் பலவித சாயல்களை வெளிக்காட்டும் ஆறு குறும்படங்களை உள்ளடக்கியுள்ளது ‘ஃபீல்ஸ் லைக் இஷ்க்' என்கிற இந்தி ‘ஆந்தாலஜி’ படம்.

பேரிடர்கள் தரும் வாதைகளுக்கு மத்தியில், மக்கள் மனம் இற்றுப்போகாதிருப்பதில் காதலுக்கும் சிறிது பங்கு இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியிருக்கும் இந்தக் குறும்படங்கள் அனைத்திலும் காதலைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். தமக்கான தனி உலகங்களில் சஞ்சரிக்கும் சக ஜீவிகள் இருவரை, ஒரே குடைக்குள் சேர்ப்பதற்காக காதல் நிகழ்த்தும் மாயங்களை சிறுகதைகளுக்குரிய ரசனையோடும் பதிவு செய்திருக்கிறார்கள்.


ஓடிப்போன மணமகளைத் தேடும் ஆருயிர் தோழியும் வேண்டா வெறுப்பாக அவளுக்கு உதவத் தலைப்படும் மணவிழா நிர்வாகியான அவனும் ஒன்றாக மேற்கொள்ளும் அரைநாள் பயணம், ‘சேவ் தி டே(ட்)’ எனும் இத்தொகுப்பின் குறும்படம். வாழ்க்கைக்கு திருமணம் அவசியமா, அவசியமில்லையா என்பதில் இவர்கள் தங்களுடைய முரண்களின் வழியே மோதிக்கொள்கிறார்கள். பயணத்தின் முடிவில் இருவரும் தங்களுக்கான தீர்வை எப்படிக் கண்டடைகிறார்கள் என்பதை அழகாக விரித்திருகிறது.

பட்டாம்பூச்சியின் துடிப்புக்கொண்ட பதின்மத்தில் கிட்டார் இசையில் சதா திளைத்திருக்கிறான் நாயகன். அவனை, எதிர்வீட்டின் புதுவரவான இளம்பெண் கலைத்துப் போடுகிறாள். அவனுக்குப் பிடித்த கிட்டாரை அவளும் வாசிக்கிறாள் என்பதைத் தவிர்த்து, இருவருக்கும் இடையிலான வேறுபாடுகள் சகலத்தையும் கூறுபோடுகின்றன. அதனால் என்ன? ஆதி ஈர்ப்பான காதல் அவர்களிடையே எப்படிப் பாலம் அமைக்கிறது என்பதை இயல்பாகச் சொல்கிறது இரண்டாம் குறும்படமான ‘குவாரன்டீன் க்ரஷ்’.

சுற்றுலாத் தலம் ஒன்றில் தங்குமிடத்தைப் பராமரிக்கும் வெள்ளந்தி இளைஞன் அவன். அவளோ, முறிந்த காதலும் உடைந்த மனதுமாக தனிப் பயணம் மேற்கொள்பவள். இவ்விருவருக்கும் இடையிலான சந்திப்பும் நேசத்தின் தித்திப்பும் மூன்றாம் படமான ‘ஸ்டார் ஹோஸ்ட்’. திறந்த புத்தகமான அவனும், ரணங்களைப் பொத்தி வைத்திருக்கும் அவளும் முதல் சந்திப்பு கசந்துபோனாலும் வாழ்வின் மீதான தேடலும் நம்பிக்கையும் அவர்களை எந்தப் புள்ளியில் இணைத்தது என்பதைச் சொல்கிறது இப்படம்.

ஆந்தாலஜியின் ஒரே மாற்றுப் பாலின கதை ‘ஷீ லவ்ஸ் மி, ஷீ லவ்ஸ் மி நாட்’!. தன்பால் ஈர்ப்பாளர்களைப் பால் வேட்கைக் கொண்டவர்களாக, ஏலியன்களாக ஊதிப் பெருக்கும் பொதுப் புத்தியில் இந்தக் குறும்படம் பொத்தல் போடுகிறது. ஆண் - பெண் இடையே முகிழும் நேசிப்பின் அத்தனை தவிப்பு, நெகிழ்ச்சியை, இரு தன்பால் ஈர்ப்பாளர் மத்தியில் முகிழும் இக்காதல் கதை பதிவு செய்கிறது.

புதிதாகக் காதல் வயப்பட்ட பெண்ணைச் சந்திக்கச் செல்பவன், சுற்றுச்சூழல் போராளியான அவளுடன் காவல் துறையால் கைதுசெய்யப்படுகிறான். தனக்கான களம் இதுவல்ல என்று அலுத்துக்கொள்ளும் அவன் மீது நம்பிக்கை இழக்கிறாள் அவள். ஆனால், அன்றைய தினத்தின் நீண்ட பயணம், புதிய புரிதல்களின் வழியே காதலியின் போராட்ட உலகில் அவனையும் உளப்பூர்வமாகப் பிரவேசிக்க வைக்கிறது.

இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கதை ‘இண்டெர்வியூ’. நேர்முகத் தேர்வு ஒன்று நடக்கிறது. வேலைதேடும் படலத்தில் பல நேர்முகத் தேர்வுகளைக் கடந்து வந்திருக்கும் அவள், சகப் போட்டியாளன் என்றபோதும் புதுமுகமான அவனைப் பரிவுடன் எதிர்கொள்கிறாள். நேர்முகத்துக்கு அவசியமான ஒருமுகத்துக்காக அவனைப் பயிற்றுவிக்கிறாள். நிறைவாக, அந்தப் பணியை அவள் விட்டுக்கொடுத்ததில் ஒளிந்திருக்கும் இழப்பின் மதிப்பை அவன் கண்டுகொள்கிறான். அந்தத் தருணத்தில், இருவரும் தங்களுக்கான எதிர்கால இருப்பை அடையாளம் காண்கிறார்கள்.

குறும்படங்கள் அனைத்திலும் இளமையும் காதலும் உணர்வுகளின் ஊர்வலமாக ஊற்றெடுக்கின்றன. கூடவே பயணங்களும் பிரதானமாக இடம்பெறுகின்றன. வெளிநோக்கிய பயணங்களின் வழியே உள்நோக்கிய தேடல்களாகவும் அவை அமைகின்றன. கதைதோறும் இடம்பெரும் ‘அவன் -அவள்’களின் சாயல்களில் சுயத்தை தரிசிக்க பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிப்பது படைப்பாளர்களின் உருவாக்கத் திறமை. ராதிகா மதன், நீரஜ் மாதவ், சிம்ரன் ஜெகானி உள்ளிட்டோர் நடிக்க, ஆனந்த் திவாரி, தஹிரா காஷ்யப், தனிஷ் அஸ்லாம் ஆகியோர் இயக்கி உள்ளனர். காதலைப் பிடிக்கும் அனைவருக்கும் இந்த ஆந்தாலஜி பிடிக்கும்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com


Ott cinemaஓடிடி உலகம்:ஆந்தாலஜிஃபீல்ஸ் லைக் இஷ்க்Feels like ishq

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

ஊட்டி சுடும்! :

இன்றைய செய்தி
x