Last Updated : 28 Jul, 2021 03:15 AM

 

Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

மாய உலகம்!: நான் ஓவியன் அல்ல

“மைக்கேலாஞ்சலோ, உன்னைக் கையோடு அழைத்துவரச் சொன்னார்கள்” என்று நண்பர் அழைத்ததும், "எங்கே?” என்றேன். "சிஸ்டைன் தேவாலயத்துக்கு" என்று அவர் சொன்னதும் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. கையிலிருந்த உளியைக் கீழே வைத்துவிட்டு, கேட்டேன். "எதற்காக?” என்ன பதில் வரும் என்று தெரியும் என்றாலும் அது அவர் வாயிலிருந்துதான் வரட்டுமே! "தலைமை பாதிரியாரே அழைத்தார். தேவாலயத்தில் நீ ஏதோ செய்ய வேண்டுமாம்" என்றார் நண்பர்.

உற்சாகத்தோடு கிளம்பினேன். நான் வடித்த சிற்பங்களை அவர்கள் பார்த்திருக்க வேண்டும். என்னுடைய வேலை அவர்களுக்குப் பிடித்திருக்க வேண்டும். தேவாலயத்துக்குச் சில சிற்பங்கள் செய்து தரமுடியுமா என்று கேட்கப் போகிறார்கள். மாட்டேன் என்றா சொல்லப் போகிறேன்? என்னென்ன சிலைகள் கேட்பார்கள்? எவ்வளவு அவகாசம் கொடுப்பார்கள்? சிற்பங்களை உள்ளே எங்கெல்லாம் வைப்பார்கள்? சரி, சரி எங்கே வைத்தால்தான் என்ன? எப்படியும் இறைவனுக்கு அருகில்தான் இருக்கப் போகின்றன. வேறு என்ன வேண்டும், சொல்லுங்கள்?

என்னை அமர வைத்த பிறகு பாதிரியார் சொன்னார்: "கவனமாகக் கேட்டுக்கொள், இது தேவாலயத்துக்காக நீ செய்யப் போகும் பணி. உன் திறமைகளைப் பார்த்திருக்கிறோம் என்றாலும் இங்கே நீ உருவாக்கப் போவது இதுவரை இல்லாத அளவுக்குச் சிறப்பாக இருக்க வேண்டும். முழுக் கவனத்தோடும் முழு மனதோடும் நீ இதைச் செய்து முடிக்க வேண்டும். சம்மதம்தானே?”

“ஓ, நிச்சயம் ஃபாதர். எந்த மாதிரியான படைப்புகள் என்று சொன்னால் இப்போதே தயாராக ஆரம்பித்துவிடுவேன்” என்றேன் அடக்கமாக. “ஆதாம், ஏவாள் தொடங்கி கடவுள் படைத்த முழு உலகையும் நீ படைக்க வேண்டும்” என்றார் பாதிரியார். "ஆ, அற்புதம்” என்றேன் உற்சாகத்தோடு. அப்படியானால் வேலையை ஆரம்பித்துவிடு. "ஓ, கையோடு உளிகளைக் கொண்டுவந்துவிட்டேன் பாருங்கள்” என்று பையை உயர்த்திக் காட்டினேன்.

"உளிகள் எதற்கு? வண்ணங்கள்தானே வேண்டும்?” என்றார் பாதிரியார். "என்னது, வண்ணங்களா?” என்று விழித்தேன். "ஆம், வண்ணங்களில்தானே ஓவியங்களைத் தீட்டமுடியும்” என்று பாதிரியார் சொன்னதும், "என்னது, ஓவியமா?” என்று அதிர்ந்தேன்.

"இதென்ன மைக்கேலாஞ்சலோ எதற்கெடுத்தாலும் அதிர்ந்து போகிறாய்? எவ்வளவு பெரிய கலைஞன் நீ? உனக்குத் தெரியாத வேலையையா கொடுத்துவிட்டேன்?” என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் பாதிரியார். "ஐயோ, ஆமாம் ஃபாதர்” என்று அலறினேன். "நான் ஒரு சிற்பி. என்னைப் போய் ஓவியம் வரையச் சொல்கிறீர்களே? சிறு வயதில் ஏதோ ஓவியம் வரைந்து பழகியிருக்கிறேன், அவ்வளவுதான். இதுவரை பெரிதாக எங்கும், எதற்கும் வரைந்ததில்லை. என்னிடம் போய் இவ்வளவு பெரிய வேலையை ஒப்படைத்தால் என்ன செய்வது? சிற்பம் செதுக்கச் சொல்வீர்கள் என்றல்லவா ஆசையாசையோடு ஓடிவந்தேன்!”

"அதனாலென்ன? எல்லாமே கலைதானே” என்று ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கிக் காட்டியபடி வெளியேறினார் பாதிரியார். அதென்ன மேலே காட்டுகிறார், ஒருவேளை எனக்கு வந்த சோதனையை இறைவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாரா என்று அண்ணாந்து பார்த்தேன். வெள்ளை வெளேரேன்று இருந்த மேற்கூரையைப் பார்த்துச் சில நிமிடம் குழம்பினேன். பிறகு இத்தாலியே நடுங்கும்படி அலறினேன்.

தவளை பார்த்திருப்பீர்கள். நான்கு கால்களையும் மேலே நீட்டிக்கொண்டு தலைகீழாக அது தத்தளிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? சிஸ்டைன் தேவாலயத்துக்கு வந்தால் அப்படி ஒரு தவளையைக் காண்பீர்கள். கூரையில் என் மூச்சுக் காற்று பட்டுக்கொண்டிருந்தது. என் முதுகிலும் இடுப்பிலும் முழங்காலிலும் கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. விடிந்ததும் நான்கு பேர் என்னைக் கட்டி, மேலே தொங்கவிட்டுவிட்டுப் போய்விடுவார்கள். மாலை வந்துதான் அவிழ்த்து விடுவார்கள்.

ஆதாமின் கால் விரல்களை வரையும்போது என் வயிற்றை என் முழங்கால் போட்டு அழுத்திக்கொண்டிருக்கும். நான் என்னென்ன வண்ணங்களைக் குழைத்து தீட்டுகிறேன் என்பதைத் தெரிந்துகொள்ள ஓவியத்தை அல்ல, என் உடலைப் பார்த்தாலே போதும். கூரையில் நான் ஒரு பச்சைக் கோடு போட்டு முடிப்பதற்குள் என் முகத்தில் சொட்டுச் சொட்டாகப் பத்துப் பச்சை புள்ளிகள் விழுந்திருக்கும். இமையில் சிவப்பு. உதட்டில் மஞ்சள். இடது கண்ணில் பழுப்பு, வலது கண்ணில் ஊதா. ஒரு மஞ்சள் பூ வரைந்தால் என் தாடையிலிருந்து மஞ்சள் வழியும்.

இல்லை, தவளை அல்ல. நான் ஒரு சிலந்தி. அதுதான் நூலின் கீழே தொங்கிக்கொண்டிருக்கும். இல்லை, நான் ஒரு வௌவால். அதுதான் இரவெல்லாம் கொட்டக் கொட்ட விழித்தபடி தலைகீழாக நின்றுகொண்டிருக்கும்.

தலை விண்விண்ணென்று வலிக்கும். வயிறு அப்படியும் இப்படியும் போட்டுப் பிசையும். கை வலி குறைவதற்குள் கால் வலிக்கும். கால் ஓய்ந்தால் தோள்பட்டை குத்தும். அந்தப் பக்கம் திரும்பினால் இடுப்பில் தொங்கிக்கொண்டிருக்கும் தூரிகைகள் ஒன்று மாற்றி ஒன்று குத்தும். இந்தப் பக்கம் நகர்ந்தால் நான் வரைந்த ஓவியத்தின் மீது நானே முட்டிக்கொள்வேன். என்னை ஏன் இப்படிப் போட்டுப் படுத்துகிறாய் என்று என் உடலே என்னைப் பார்த்துக் கத்தும்.

ஆனாலும் நான் நிறுத்தமாட்டேன். ஒவ்வொருமுறை நான் சலிப்படையும்போதும், வரைந்துகொண்ட இரு மைக்கேலாஞ்சலோ என்று மேற்கூரை என் காதில் கிசுகிசுக்கும். ‘நான் பேசுவதை மட்டும் கேள். இப்போது நீ காற்றில் மிதந்துகொண்டிருக்கிறாய். கூரையில் அல்ல, வானத்தில் வரைந்துகொண்டிருக்கிறாய். நிலவு போல், கதிரவன் போல், நட்சத்திரங்கள் போல், வானவில் போல், மேகம் போல் உன் ஓவியங்கள் உயிர் பெற்று எழுந்து வரட்டும். அச்சத்தையும் தயக்கத்தையும் உடைத்துக்கொண்டு நீ உயர, உயர உன் படைப்புகளும் உயர்ந்துகொண்டே செல்லும். உலகம் கீழிருந்து உன்னை அண்ணாந்து பார்க்கும். அப்போது உன் வலிகளும் துயரங்களும் மறைந்து போயிருக்கும். நீ இருப்பாய். நீ படைத்தவை எல்லாம் இருக்கும்.’

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x