இப்படியும் பார்க்கலாம்: பரணில் முடங்காமலிருக்க என்ன வழி?

இப்படியும் பார்க்கலாம்: பரணில் முடங்காமலிருக்க என்ன வழி?
Updated on
2 min read

அந்தக் கிராமத்தில் 80- களில் பாண்டியன் முக்கியப்புள்ளி. தன்னை அழைத்தவர்களிடம் “வருகிறேன்” என்று பேசமாட்டார். தொழில் கர்வம் மின்ன, சர்வ அலட்சியமாக சைகைதான் செய்வார். அவரது கால்ஷீட் பிரச்னையால் வெறுத்துப் போனாலும் யாரும் அதை வெளிப்படையாய் காட்ட மாட்டார்கள். காரணம், பாண்டி வானில் மிதக்கும் நாடகங்கள், ஞாயிற்றுக்கிழமை திரைப்படங்களை வீட்டிற்குள் அழைத்து வரும் ஆண்டெனா தொழில்நுட்பர்.

ஒருத்தனை இவ்வளவு கெஞ்சி டி.வி.யைப் பார்ப்பதைவிட, அதை உடைத்தால் என்ன போன்ற சூடு, சுரணைகள் பாண்டியின் வருகை நேர்ந்ததும் வானத்தில் பறக்கத் துவங்கிவிடும்.

பாண்டி கூரையில் ஆண்டெனாவைப் பொருத்தி, டி.வியில் ‘ஒலியும் ஒளியும்’ வகையறாக்களைப் பாயச் செய்ததும், அவர் முகத்தில் “ என்னை விட்டால் உங்களுக்கு வேறு வழி?” என்னும் சொற்கள் மின்னும்.

ஆண்டெனாக்களின் சகாப்தத்தை முடித்து வைக்க கேபிள் ஒரு பாம்பைப் போல கிராமத்துள் நுழைந்தது. அப்போது பாண்டி என்ன செய்தார்?

நான் சின்ன வயதில் சினிமா பார்த்த தியேட்டர்களில் பெஞ்சு, தரை வகுப்பு இருக்கும்; வயசான ஆட்கள் பெஞ்சில் படுத்துக்கொண்டே படம் பார்ப்பார்கள்; கார்பன் ரீல் ஓடும் சப்தம் கேட்கும்; உள்ளே பையன்கள் தோளில் கூடை சுமந்து இஞ்சி மிட்டாய்,கடலை மிட்டாய் எல்லாம் விற்பார்கள்; தியேட்டரின் குப்பைக் கிடங்கில் பிலிம் துண்டுகளைச் சேகரித்து லென்ஸ் வைத்துப் பெரிது பண்ணிப் பார்ப்போம் என்றெல்லாம் சொன்னால் என் பையன் என்னை வேற்றுக் கிரக ஆசாமி போல பார்க்கிறான்.

அவனுக்குத் தெரிந்த தியேட்டர்கள் எல்லாம் மல்ட்டிப்ளெக்ஸ்கள்; பிலிமே இல்லாமல் படம் காட்டும் அரங்குகள்...!

நீங்கள் ஒரு குறிப்பிட்ட சோப்பை, தேயிலையை, சலவைத்தூளை உபயோகித்துவருகிறீர்கள். அவற்றை வாங்க வேண்டாம், அதைவிட நல்ல சரக்கு வந்துள்ளது என்று உங்களிடம் சொல்வது யார் என்று கவனித்திருக்கிறீர்களா? அவற்றை முற்றிலும் உபயோகிக்காதவர்களோ அல்லது மேற்படி பொருட்களின் போட்டிக் கம்பெனிக்காரர்களோ அல்லர்.

நீங்கள் உபயோகிக்கும் பொருட்களைத் தயாரிப்பவர்களேதான் “....வந்து விட்டது, புதிய, மேம்படுத்தப்பட்ட, முன் எப்போதும் இல்லாத ...” போன்ற விளம்பரக் குரல்கள் மூலம் அவர்களே உரத்துச் சொல்கிறார்கள்!

இத்தனைக்கும் நீங்களோ, நானோ கடைக்குச் சென்று “எங்களுக்கு பழசு எதுவும் வேண்டாம், ஒரு புதிய, மேம்படுத்தப்பட்ட சோப் ஒன்று கொடுங்கள்” என்று கேட்கிறோமா என்ன?

“முற்றிலும் புதிய துடைப்பம்”; “ புதிய மேம்படுத்தப்பட்ட குப்பைக்கூடை” களுக்கு என்ன அர்த்தம்?

இந்தப் பொருள்களையெல்லாம் அவற்றின் தயாரிப்பாளர்கள் எப்போதும் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள்! மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏன்?

மாறி வரும் உலகை எதிர் கொள்ளவும், போட்டியாளர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபடி இருப்பதைத்தான் “புதிய”, “மேம்படுத்தப்பட்ட”, “முன் எப்போதும் இல்லாத” போன்ற சொற்கள் வெளிப்படுத்துகின்றன. நிறுவனங்கள் இதற்கென்று “ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு (ஆர்.அண்ட் .டி) ஒன்றை வைத்திருப்பதை அறிவோம்.

ஆரம்ப கால கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு இன்னிங்ஸ்கள் ஆடி முடிக்க எவ்வளவு நாள் தேவையோ, அவ்வளவு நாட்கள் விளையாடின. அப்புறம் ஆட்டம் ஆறு நாட்களுக்கு வந்தது. நடுவில் ஒருநாள் ஓய்வு நாள். பிறகு 5 நாட்கள் என முடிவு செய்தார்கள்.

இதிலும் ரசிகர்கள் தப்பித்து ஓடியதால் கிரிக்கெட்டின் ஆர்.அண்ட்.டி. விழித்துக்கொண்டு 60 ஓவர்கள் ஆட்டத்தை அறிமுகம் செய்தது. அப்புறம் 50 ஓவர்கள். இப்போது 20 ஓவர் ஆட்டங்கள், உற்சாகப்படுத்தும் ஆடல் அழகிகள், அதிரடிக்கான பவர் ப்ளே என்று காலத்துக்கேற்ப மாறி கிரிக்கெட் தன்னைக் காத்துக்கொண்டது.

இன்று ஒரு நாள், 20 ஓவர் போட்டிகள் பெரும்பாலும் மட்டையாளருக்கே சாதகமாக இருக்கின்றன. இதுவும் சலித்துப்போகலாம். அப்போது, பந்து வீச்சாளருக்குச் சாதகமாக ஒரு ஓவரில் மட்டும் ஆறு ஸ்டம்புகள் நடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஒரு விளையாட்டு பிழைத்திருப்பதற்கே இவ்வளவு செய்ய வேண்டியிருக்கிறது!

இப்போது இருப்பது முற்றிலும் புதிய, மேம்படுத்தப்பட்ட,முன் எப்போதும் இல்லாத கிரிக்கெட்!

இப்போது இருப்பது முற்றிலும் புதிய, மேம்படுத்தப்பட்ட, முன் எப்போதும் இல்லாத தியேட்டர்கள்!

சொல்லிக்கொண்டே போகலாம். டீக்கடைகள், அரசியல், பத்திரிகைகள், கருத்துகள், வாழ்க்கை முறைகள்... எதுவுமே முன்பு இருந்தது போலில்லை!

பாண்டி என்ன செய்திருக்க வேண்டும்? தெருக்களில் தொங்கும் கேபிள்களைப் பார்த்தாவது சுதாரித்திருக்க வேண்டும். “இனி அனைவரும் சினிமாப் பாடல்களை டெடிகேட் செய்வார்கள்; நடுவர்கள் முன் ஆடித்தீர்ப்பார்கள்; கருத்து சொல்வார்கள்” என்றெல்லாம் தீர்க்க தரிசனம் கொள்ளாவிடினும் “வந்து விட்டது புதிய தொழில்நுட்ப பொழுதுபோக்குக் கலாச்சாரம்!” என்பதை உணர்ந்திருந்தால் தப்பித்திருப்பார்!

ஆனால், “நம்ம ஆள்கள் துட்டு கொடுத்து பாக்கவே மாட்டாங்க. தவிர, தனியாரால எப்படி கவர்மெண்ட்டுக்குப் போட்டியா டி.வி நடத்த முடியும்? இது எல்லாம் ஒத்து வராது” என்று பேசிப்பேசி அந்த ஊரின் கேபிள் டி.வி ஆபரேட்டராகும் வாய்ப்பை இழந்தார் பாண்டி.

பல வீடுகளில் ஆண்டெனா தொழில்நுட்பக் காலத்தை நினைவுபடுத்தும் கம்பியோ, ஒயரோ, ஆண்டெனா தெரிகிற பழைய புகைப்பட ஆல்பமோ பரண்களில் கிடக்கும். பாண்டியும் இப்போது ஏறக்குறைய அப்படித்தான் இருக்கிறார். காலத்திற்கேற்ப மாறாதவர்கள் துருப்பிடித்துதான் கிடப்பார்கள்.

உங்களைக் காலத்தின் மாறுதலிருந்து காப்பாற்ற உதவும் ஆய்வகம் உங்கள் மனதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

மனதில் இயங்கும் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் பிரிவைப் பராமரிக்கக் கண்களைத் திறந்து, சுற்றி என்ன நடக்கிறது என்பதை முழு விழிப்புடன் பார்த்தாலே போதுமானது! அவை நிச்சயம் “புதிய, முற்றிலும் புதிய, மேம்படுத்தப்பட்ட, அட்வான்ஸ்டு வாழ்க்கை முறைகளுக்கும் சிந்தனைகளுக்கும்” வழி காட்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in