Last Updated : 27 Jul, 2021 03:13 AM

 

Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

இனி செஞ்சுரிதான்!

ஒருநாள் கிரிக்கெட் அல்ல, அரைநாளைவிடவும் சற்றுக் குறைவு. ஒவ்வொரு அணியும் 100 பந்துகளை மட்டுமே வீச முடியும் . ஆக சுமார் இரண்டரை மணி நேரத்தில் போட்டி முடிந்து முடிவு தெரிந்துவிடும்.

இப்படித்தான் ‘தி ஹண்ட்ரட்’ என்கிற பெயர் கொண்ட கிரிக்கெட் தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கல்ல. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தப் போட்டியை ஜூலை 21 தொடங்கி நடத்திவருகிறது. சென்ற வருடமே நடந்திருக்க வேண்டிய இந்தப் போட்டி கரோனா தொற்று காரணமாக தள்ளிப் போடப்பட்டு, இப்போது நடைபெறுகிறது. ஆகஸ்ட் 21 அன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

ஏதோ ஒரு வெளிநாட்டில் நடக்கும் போட்டி என்று இதை ஒதுக்க முடியாததற்குச் சில காரணங்கள் உள்ளன. அதில், பிற நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் பங்கேற்றுள்ளனர். அதைவிடக் கவனம் பெறுவது இதில் புகுத்தப்பட்டிருக்கும் மாற்றங்கள்.

இளைஞர்கள் வேகம் வேகம் என்று பறப்பவர்கள். அவர்களில் கணிசமானவர்களால் ஐந்து நாள் கிரிக்கெட் பந்தயத்தைப் பொறுமையாகக் கண்டு ரசிக்க முடியாது. அதனால்தான் ஒருநாள் போட்டிக்கு டிமான்ட் ஏற்பட்டது. அதையே அரைநாள் போட்டி என்று சுருக்கிவிட்டால் இளைஞர்களை மேலும் வசீகரிக்க முடியும் என்பதுதான் புதிய மாற்றத்துக்குக் காரணம். இதில் வணிக பின்னணியும் இல்லாமல் இல்லை.

இரு பாலர் போட்டி

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளைச் சேர்ந்த எட்டு அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. ஒவ்வோர் அணியிலும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அல்லாத பிற நாடுகளைச் சேர்ந்த மூன்று பேர் இடம் பெறலாம். ஒவ்வோர் அணியிலும் இங்கிலாந்து டெஸ்ட் குழுவில் இடம்பெறும் ஒருவராவது இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஆடவர், மகளிர் என இரு தரப்புக்கும் இந்தப் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படுகின்றன. ஆடவர் பிரிவு போட்டியைக் காண பார்வையாளர் கட்டணம் சற்று அதிகம். ஆடவர் பிரிவின் இறுதிச்சுற்றுக்குக் குறைந்தபட்சம் 30 டாலர் என்று நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் அணிகள் மோதும் இறுதிப் போட்டிக்கு 12 டாலர் மட்டுமே. பார்வையாளர்களின் எண்ணிக்கை, வணிக நிறுவனங்களின் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் இப்படி வேறுபாடு காட்டப்பட்டிருக்கிறதாம்.

காலங்காலமாக நாம் பயன்படுத்தும் சில கிரிக்கெட் தொடர்பான வார்த்தைகளும் இந்தப் போட்டியில் மாற்றி அமைக்கப்படுமாம். விக்கெட் என்பது அவுட் என்கிற வார்த்தையின் மூலம் குறிக்கப்படும். பேட்ஸ்மேன் இனி பேட்டர் என்று அழைக்கப்படுவார். இளைய சமுதாயத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் வசீகரிக்கவும் இந்த வார்த்தை விளையாட்டுகள் தேவைப் படுகின்றனவாம். இதுவரை கிரிக்கெட்டில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதவர்கள்கூட அரைநாள்தான் போட்டி என்பதாலும் மேற்படி மாறுதல்கள் காரணமாகவும் ஈர்க்கப்படுவார்கள் என்பது எதிர்பார்ப்பு.

மாறிய விதிமுறைகள்

ஒரு ஓவரில் (ஆறு அல்ல) பத்து பந்துகள் வீசப்படும். ஒரு பந்துவீச்சாளர் தொடர்ந்து ஐந்து அல்லது பத்து பந்துகளை வீசலாம். எல்பிடபிள்யூ முறை இதில் இல்லை. ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சம் ஒரு போட்டியில் 20 பந்துகளைத்தான் வீச முடியும்.

ஒரு பேட்ஸ்மேன் அவுட்டானால் அதற்கடுத்த பேட்ஸ்மேன் விரைவில் மைதானத்துக்கு வந்து சேர வேண்டும். இந்த இடைவெளி ஒரு குறிப்பிட்ட நேர அளவைத் தாண்டினால் அவர் ‘டைம் அவுட்’ என்கிற முறையில் அவுட் ஆக்கப்படுவார். ‘தி ஹண்ட்ரட்’ போட்டியில் இந்த இடைப்பட்ட நேரம் வெறும் இரண்டரை நிமிடங்கள்தான். ஸ்கோர் போர்டுகள் இனி ‘வளவளவென்று பல தகவல்கள்’ இல்லாமல் மிக எளிமையானதாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த மாறுதல்களை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். “கிரிக்கெட் நிர்வாகிகளின் இது போன்ற அபத்தமான புதுமைகள் லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களைக் கோபமடைய வைத்துள்ளன. காலங்காலமாக கிரிக்கெட்டில் பின்பற்றப்படும் மரபுகளைப் பணத்துக்காக மாற்றுவதற்கு இவர்கள் யார்?” என எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

கிரிக்கெட் திருப்புமுனை?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெர்ரி பாக்கர் முதன் முதலில் 'தனிப்பட்ட' ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பலத்த விமர்சனங்களுக்கிடையேதான் அறிமுகப்படுத்தினார். வெள்ளை உடை மட்டுமே அதுவரை அணிந்திருந்த கிரிக்கெட் வீரர்கள் வண்ணச் சீருடைகளை அணிந்தனர். பகலில் மட்டுமே ஆடப்பட்டுவந்த கிரிக்கெட் பந்தயங்கள் பளீரிட்ட விளக்கொளியில் இரவுகளிலும் ஆடப்பட்டன. சிவப்பு வண்ணத்தில் மட்டுமே இருந்த கிரிக்கெட் பந்து வெள்ளை வண்ணத்திலும் இடம் பெறத் தொடங்கியது.

ஒவ்வொரு பந்து வீச்சாளரும் அதிகபட்சம் பத்து ஓவர்கள் பந்து வீசலாம். வானிலை சரியில்லை என்றால் ஒவ்வொரு அணியும் பந்து வீச வேண்டிய ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம். பலத்த விமர்சனங்களுக்கு நடுவேதான் இந்த மாற்றங்கள் அறிமுகமாயின. இப்போது இவை அனைத்துமே ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன.

ஆக, ‘தி ஹன்ட்ரட்’ போட்டிகள்கூட கிரிக்கெட் சரித்திரத்தில் திருப்பு முனையாக இருக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x