Published : 24 Jul 2021 03:12 am

Updated : 24 Jul 2021 04:16 am

 

Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 04:16 AM

கரோனா மருந்துகள் அளவுக்கு மிஞ்சலாமா

covid-medicines

என் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு அண்மையில் கடுமையான காய்ச்சல். அவராகவே பாராசிட்டாமால், அக்குமென்-டி போன்ற மாத்திரைகளை உட்கொண்டார். இருந்தும் காய்ச்சல் குறையவில்லை. காலில் வீக்கமும் வலியும் இருந்தன. இரண்டு நாள் கழித்து மருத்துவரிடம் சென்றார். அவருடைய காலில் செல்லுலைடிஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்து, ஆன்ட்டிபயாடிக் சிகிச்சையை மருத்துவர் தொடங்கினார். காய்ச்சல் விட்டபாடில்லை. வீக்கமும் வலியும் குறையவில்லை.

நண்பர் மீண்டும் மருத்துவரிடம் சென்றார். மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது. காரணம், கரோனா முதல் அலை தொடங்கியதிலிருந்து வெளியே சென்று வந்தாலோ, காய்ச்சல் வருவதுபோல் தோன்றினாலோ, லேசாக மூக்கடைப்பு ஏற்பட்டாலோ அக்குமென்–டி போன்ற ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைத் தானாகவே உட்கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அளவுக்கு அதிகமாகவும் முறையற்ற வகையிலும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டதன் விளைவு, அவர் உடல் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை எதிர்க்கும் நிலையை எட்டிவிட்டது.


ஆபத்தான ஆன்ட்டிபயாடிக் பயன்பாடு

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரித்திருக்கும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு மருத்துவ வல்லுநர்களைக் கவலைக்குள்ளாக்கி உள்ளது. இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று ஏற்பட்டுவிடும் என்கிற அச்சத்தின் காரணமாகவும், கரோனாவுக்கு எனத் தெளிவான, உறுதியான சிகிச்சைமுறை இல்லாததாலும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் இந்தியாவில் அளவுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்பட்டன. இந்தியாவில் ஆன்ட்டிபயாடிக் எதிர்ப்பு நிலை (Antibiotic Resistance) அறிவிக்கப்படாத பெருந்தொற்றாக நிலவும் சூழலில், கரோனா காலத்தில் அதிகரித்திருக்கும் ஆன்ட்டிபயாடிக் பயன்பாடு, அந்த எதிர்ப்புநிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என்கிறது ஐ.சி.எம்.ஆர். அறிக்கை ஒன்று.

2020 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மருந்து விற்பனை 51 சதவீதம் அதிகரித்துள்ளது. கரோனா இரண்டாம் அலையின் ஆரம்பக் காலத்தில் 16,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை நம் நாட்டு மக்கள் வாங்கியுள்ளனர். இதில் பெரும்பகுதி ஆன்ட்டிபயாடிக் மருந்துகள். குறிப்பாக அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் எனும் இரண்டு ஆன்ட்டிபயாடிக் மருந்துகள். இரண்டாம் அலையின்போது எழுந்த அச்சம் காரணமாக இந்த இரண்டு மருந்துகளையும் மக்கள் வாங்கிக் குவித்த தன் விளைவாக, நாடு முழுவதும் இந்த மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தவறான பயன்பாடு

ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைப் பொறுத்தவரை அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவது மிகப்பெரிய பிரச்சினை. ஆன்ட்டிபயாடிக் மருந்து பாக்டீரியாவுக்கு எதிராக மட்டுமே செயல்படும். நாவல் கரோனாவோ ஒரு வைரஸ். இருப்பினும், சில வரையறுக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் தொற்றுநோயின் ஆரம்பக் கட்டத்தில் அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் ஆகிய மருந்துகள் நோயெதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்பட்டுப் பரிந்துரைக்கப்பட்டது. அவை கரோனா வைரஸ் தொற்றுத் தீவிரமடைவதைத் தடுக்க உதவும் எனக் கருதப்பட்டது.

கரோனா முதல் அலையின்போது, மருத்துவர்கள் உட்பட அனைவருக்கும் கரோனா ஒரு சவாலாக இருந்தது. ஆரம்பத்தில், கரோனா சிகிச்சைக்கு வேறு வழியில்லாததால், ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. நாட்கள் செல்லச் செல்ல கரோனா சிகிச்சைக்கு ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துவதை மருத்துவர்கள் தவிர்க்கத் தொடங்கினர். சிறுநீரகப்பாதைத் தொற்று அல்லது பாக்டீரியா நிமோனியா போன்ற இரண்டாம் நிலை பாக்டீரியத் தொற்றுக்கு மட்டும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைத் தற்போது பயன்படுத்திவருகின்றனர்.

ஆய்வு உணர்த்தும் சேதி

2020ஆம் ஆண்டின் இறுதியில் கோவிட் சிகிச்சைக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பலனளிக்காது எனப் பல ஆய்வுகள் வெளிவரத் தொடங்கின. ‘தி லான்செட்’ மருத்துவ ஆய்விதழ் செப்டம்பர் 2020இல் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு அசித்ரோமைசினைத் தனியாகவோ ஹைட்ராக்ஸி குளோரோகுயினுடன் சேர்த்தோ அளிப்பது உரியச் சிகிச்சை கிடையாது என்பது கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பு (WHO) வழங்கி யிருக்கும் கரோனா சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களில் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, ஏன் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வழிகாட்டுதல் களிலும்கூட ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் சேர்க்கப்படவில்லை.

ஒன்றிய சுகாதார - குடும்ப நல அமைச்சகம் (MoHFW) 2020 மார்ச் மாதம் வழங்கிய வழிகாட்டுதல்களில் அசித்ரோமைசின் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ஜூலை 2020க்குள் அது கைவிடப்பட்டது. இருப்பினும், பயம், பதற்றம் காரணமாக அந்த மருந்தை மக்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். சில வேளைகளில் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைக் கொடுக்க வேண்டும் என மருத்துவர்களிடம் நோயாளிகள் நிர்ப்பந்திக்கின்றனர். மறுக்கும் மருத்து வர்களுடன் சண்டையும் போடுகின்றனர்.

ஏற்படும் பாதிப்பு

கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்பால் இரைப்பை குடல் நலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்து லான்செட் மருத்துவ இதழ் மார்ச் 2021இல் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. 117 கோவிட் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 44 சதவீத நோயாளிகளுக்கு இரைப்பை குடல் பாதிப்பு 90 நாள்கள் வரை இருப்பது கண்டறியப்பட்டது.

பொதுவாக ஆன்ட்டிபயாடிக் மருந்துகளுக்கு இரைப்பை குடல் செயல்பாட்டின் சமநிலையைச் சீர்குலைக்கும் தன்மை உண்டு. உண்ணும் உணவைச் செரிமானம் அடையவைக்கும் நல்ல பாக்டீரியாக்கள் பெருங்குடலில் உள்ளன. உணவில் உள்ள நார்ச்சத்து அல்லது சிக்கலான மாவுச்சத்து ஆகியவற்றை உடலின் செரிமான அமைப்பால் செரிக்கவைக்க முடியாது. பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்களே அவற்றைச் செரிக்கவைக்கின்றன. நோயாளிகள் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளும்போது நோயை உருவாக்கும் பாக்டீரியாவுடன் சேர்த்து நல்ல பாக்டீரியாவையும் மருந்துகள் அழிக்கின்றன. இதன் காரணமாக நோயாளிகளுக்குச் செரிமானப் பிரச்சினைகளும் வயிற்றுப் போக்கும் ஏற்படும் சூழல் உருவாகிறது.

மேலும் தேவையற்றோ, அதிகப்படியாகவோ, முறையற்றோ ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ள நேரும்போது நம் உடலில் ஆன்ட்டிபயாடிக் எதிர்ப்புநிலை ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டதுபோல ஒரு சாதாரண பாக்டீரியத் தொற்றுக்கும்கூட ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காத நிலை ஏற்படும். அது கோவிட் தொற்றைவிட ஆபத்தானது. அதன் பாதிப்பும் நெடுங்காலம் நீடிக்கும்.

ஊட்டச்சத்து மாத்திரைகள்

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் மட்டுமல்ல; ஜிங்கோவிட், லிம்சி போன்ற விட்டமின் மாத்திரைகளின் பயன்பாடும் அதிகரித்தது. இன்றும் மருந்துக் கடைகளில் ஜிங்கோவிட், லிம்சி போன்ற மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு மாத்திரையைச் சாப்பிடுவதாலோ, குறிப்பிட்ட வகை உணவைச் சாப்பிடுவதாலோ மட்டும் உடலின் நோயெதிர்ப்பாற்றலை அதிகரித்துவிட முடியாது என்பதே உண்மை.

கரோனா பெருந்தொற்றுக்கு ஜிங்கோவிட், லிம்சி போன்றவை பரிந்துரைக்கப்பட்டாலும் உடலுக்கு அவை மட்டுமே போதாது, வேறு பல விட்டமின்களும் தேவை. எந்த விட்டமின் மருந்தாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாகவோ தேவையற்றோ எடுத்துக்கொண்டால் கண்டிப்பாகப் பக்கவிளைவுகளை ஏற்படும்.

புதிய வழிகாட்டுதல்

ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின் அதீதப் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், ஒன்றிய அரசின் சுகாதார - குடும்ப நல அமைச்சகம் ஜூலை 7, 2021 அன்று புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் லேசான கோவிட் பாதிப்புக்கு ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் உட்பட எவ்வித மருந்துகளும் தேவையில்லை என்று திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. மேலும், அறிகுறிகள் இல்லாத கரோனா நோயாளிகளுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளல், ஓய்வு ஆகியவற்றை மட்டுமே அறிவுறுத்தியுள்ளது. ரத்தப் பரிசோதனை அல்லது சி.டி. ஸ்கேன் போன்றவையும்கூட அவர்களுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அறிவியல்பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஆதாரமற்ற, அதிகப்படியான சிகிச்சை முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in


கரோனா மருந்துகள்ஆன்ட்டிபயாடிக் பயன்பாடுஆன்ட்டிபயாடிக் மருந்துஊட்டச்சத்து மாத்திரைகள்Covid medicines

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-updates

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x