Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

நலம்தானா 15: இரவுப் பணியாளர் உடல்நலம் காப்பது எப்படி?

மருத்துவர் சு.முத்துச் செல்லக் குமார்

மனித வாழ்க்கை 24 மணி நேரச் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. உடலின் சர்காடியன் ரிதம் (circadian rhythm) இதைத் தீர்மானிக்கிறது. உடலில் பல்வேறு உறுப்புகளின் இயக்கங்கள், செயல்பாடுகள், வளர்சிதை மாற்றங்கள் உரிய நேரத்தில் நடைபெற இது உதவுகிறது.

சர்காடியன் ரிதத்தை வழிநடத்துவது மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியிலுள்ள எஸ்.சி.என். எனப்படும் நரம்பு மையம். அனைத்து உடலியக்கங்களையும் இது நேரப்படி முறைப்படுத்துவதால் இதைக் கடிகாரத்துடன் ஒப்பிடுகிறார்கள். இந்த மையத்தின் மரபணுக்கள் உடலியக்கங் களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சமிக்ஞைகளை அனுப்புகின்றன.

இரவும் பகலும்

பகலில் விழித்திருக்கும்போது உடலில் நடைபெறுகிற செயல்பாடுகளுக்கும், இரவில் உறங்கும்போது உடலில் நடைபெறுகிற செயல்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. உடல் கடிகாரம் சூரிய ஒளியால் உந்தப்பட்டுச் செயல்படுகிறது. இரவு எட்டிப் பார்க்கும்போது, மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான சமிக்ஞைகளை உருவாக்குகிறது. உறக்கம் முழுமையாகத் தொடர்வதற்கு உதவுகிறது.

காலையில் சூரிய வெளிச்சம் வந்த வுடன் அட்ரீனலின், நார் அட்ரீனலின், அசிடைல்கொலின் ஹார்மோன்களைத் தூண்டி உடல் சுறுசுறுப்புடன் அன்றாட வேலைகளைக் கவனிக்க உதவுகிறது. இதனால்தான் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், வெப்பநிலை போன்ற அனைத்து உடல் செயல்பாடுகளும் ஒரே நாளில்கூடத் தேவைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன.

இரவுப் பணி என்றால்...

தொடர்ந்து இரவுப் பணி புரிபவர்களின் உடல் கடிகாரம் செயலிழந்துவிடும். உடலியக்கங்கள் எல்லாமே மாறுபட்டு விடுவதால், உடலில் பல்வேறு கோளாறுகளும் ஏற்படும். இது பல ஹார்மோன் சுரப்புகளில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.

ஏற்படும் கோளாறுகள்

உடல் சோர்வு, உடல் பருமன், செயல்திறன் குறைபாடு, செரிமான கோளாறு, இதய நோய்கள், தூக்கப் பிரச்சினைகள் (பகலில் உறங்குவதைத் தடுக்கும் இடையூறுகள் காரணமாக), நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகள், ஏற்கெனவே உள்ள நோய்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போவது, மன நலப் பாதிப்புகள், மனச்சோர்வு, கவனமின்மை, எரிச்சல் ஆகியவை அதிகரித்தல் போன்றவை ஏற்படும். விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்களும் இவர்கள்தாம்.

உடல் நலத்தைக் காப்பது எப்படி?

பகலில் ஓய்வெடுக்கும்போது, உறங்கும் போது, வீட்டிற்கு அருகில் இயந்திரங்கள், வாகனங்கள் ஆகியவற்றின் இரைச்சல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். காதுகளில் பஞ்சு வைத்து சத்தம் தொந்தரவு தராமல் பார்த்துக்கொள்ளலாம்.

உறங்கும் அறையில் விளக்கு களை அணைப்பதுடன், வெளிச்சம் இல்லாமல் இரவு போல அறை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கண்களை மூடத் துணிகளைப் பயன்படுத்தலாம். ஜன்னல் வழியாக வெளிச்சம் வருவதைத் தடுக்கக் கறுப்புத் திரைச் சீலைகளை உபயோகிக்கலாம்.

இன்னும்...

மடிக்கணினி, கைப்பேசி, படுக்கை அறையில் உள்ள தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை அணைத்துவிடுங்கள். பகலில் உறங்கும்முன் குளியுங்கள்.விழித்திருக்கும் வேளையில் உணவைக் குறிப்பிட்ட நேரத்துக்கு உண்ணுங்கள்.படுக்கும் நேரம், எழும் நேரம் தினமும் ஒரே நேரமாக இருக்க வேண்டும். மது அருந்துவது, புகைப்பிடித்தலைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பகலில் தூங்க தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தாதீர்கள். காஃபின் பானங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். பகலில் தூங்கி எழுந்த பிறகு கொஞ்சம் உடற்பயிற்சி செய்யுங்கள்.இரவுப் பணி முடித்து வந்த பிறகு உடற்பயிற்சி செய்யாதீர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இரவுகளைப் பகலாக மாற்றி வேலை செய்வதால், பகல் பொழுதை இவர்கள் இரவாகக் கருத வேண்டும். அப்போதுதான் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர் தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x