Published : 16 Jun 2014 04:45 PM
Last Updated : 16 Jun 2014 04:45 PM

கல்லூரிக்கே முன்னுரிமை அளியுங்கள்

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் அனைத்து மாணவர்களின் மனதிலும் உதிக்கும் முக்கியக் கேள்வி, சேர விரும்பும் கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிப்பதா, பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமா என்பதுதான். 200-க்கு 198-க்கு மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் இதே குழப்பம் இருக்கும். பொதுவாகவே, என்ன படிப்பு படிக்கிறோம் என்பதைக் காட்டிலும் எந்தக் கல்லூரியில் படிக்கிறோம் என்பது வேலைவாய்ப்பு நேரத்தில் அதிகம் பார்க்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திலோ புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளிலோ படிக்கும் மாணவர்களின் தரம் இவ்வாறு இருக்கும் என்று நிறுவனங்கள் ஒரு கணிப்பு வைத்துள்ளன. அதனால்தான், முக்கியத்துவம் குறைவாகக் கருதப்படும் ஒரு படிப்பு என்றாலும் பரவாயில்லை, கல்லூரி புகழ்பெற்ற கல்லூரியா? என்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில், உண்மை இல்லாமலும் இல்லை. எனவே, பாடப்பிரிவா, கல்லூரியா? என்று வரும்போது கல்லூரிக்கு முதலில் முக்கியத்துவம் அளிப்பதுதான் சிறந்தது.

கவுன்சலிங்கின்போது கிடைக்கும் சொற்ப நேரத்தில் குறிப்பிட்ட கல்லூரியை, குறிப்பிட்ட பாடப் பிரிவை முழு திருப்தியுடன் தேர்வுசெய்வது என்பது இயலாத காரியம். எனவே, தாங்கள் சேர விரும்பும் 10 அல்லது 15 கல்லூரிகளைத் தேர்வுசெய்துகொண்டு அக்கல்லூரி பற்றிய விவரங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே அங்கு படிக்கும் மாணவ-மாணவிகளிடம் அக்கல்லூரியில் உள்ள அடிப்படை வசதிகள், கல்வித்தரம், விடுதி வசதி, கேம்பஸ் இண்டர்வியூ போன்ற தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் கல்லூரிகளைப் பற்றிய அடிப்படை விவரம் ஓரளவுக்குத் தெரிந்துவிடும்.

ஒவ்வொரு நாளும் கவுன்சலிங் முடிவடைந்ததும் அன்றைய தினம் மாலை 6 மணியளவில் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளன? என்ற அட்டவணைப் பட்டியல் இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே, கவுன்சலிங் ஆரம்பித்த நாள் முதலே தினமும் அந்தப் பட்டியலைப் பார்த்துவர வேண்டும். அதேபோல், நீங்கள் சேர விரும்பும் குறிப்பிட்ட பாடப் பிரிவு அந்தக் கல்லூரியில் ஒருவேளை காலியாகிவிட்டால் 2-வது 3-வது விருப்பமாக வேறு மாற்று பாடப்பிரிவுகளையும் முடிவு செய்துகொள்ள வேண்டும். எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினீயரிங் சேர விரும்புகிறீர்கள். அதற்கு அடுத்த வாய்ப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் என உங்களுக்குப் பிடித்த மாற்றுப் பாடப் பிரிவுகளையும் முன்னரே தீர்மானித்துவிட வேண்டும்.

உங்களுக்குப் பிடித்த கல்லூரியில், விருப்பமான பாடப்பிரிவில் இடம் காலியாகிவிட்டால், பதற்றம் அடையாமல் 2-வது அல்லது 3-வது மாற்றுப் பாடப்பிரிவில் காலியிடங்கள் இருந்தால் தாராளமாக அதில் ஏதாவது ஒன்றைத் தேர்வுசெய்துகொள்ளலாம். ஐயோ, அந்தக் கல்லூரியில், நான் சேர விரும்பும் பாடப்பிரிவில் இடம் முடிந்துவிட்டதே என கவுன்சலிங்கின்போது பதற்றப்படாமல், கவலை கொள்ளாமல் அடுத்த பாடப் பிரிவைத் தேர்வுசெய்வதுதான் புத்திசாலித்தனம். பிடித்த பாடப் பிரிவில் இடம் இருக்கிறது என்று சொல்லி முன்பின் தெரியாத கல்லூரியைத் தேர்வுசெய்வதைவிட, நல்ல கல்லூரியில், மாற்றுப் பாடப் பிரிவைத் தேர்வு செய்து படிப்பது எவ்வளவோ மேல். ஒவ்வொரு கல்லூரிக்கும் இருக்கும் பெயரை எளிதாக ஒதுக்கிவிட முடியாது. படிக்க விரும்பும் கல்லூரிகளின் உத்தேசப் பட்டியலைத் தயாரித்து அவை பற்றிய விவரங்களை முன்கூட்டியே அலசி ஆராய்ந்து தெரிந்துகொண்டால் கவுன்சலிங்கின்போது பதற்றமோ, குழப்பமோ இன்றிப் பிடித்த கல்லூரியைத் தேர்வுசெய்யலாம்.

பொறியியல் படிப்பில் என்னென்ன பாடப்பிரிவுகளில் சேரலாம் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x