Published : 16 Feb 2016 12:06 PM
Last Updated : 16 Feb 2016 12:06 PM

கதை சொல்லும் பாடம்-4: எனக்குள் ஒருவன்

அவர் மிகவும் அன்பானவர். எப்போதும் இனிமையாக, தன்மையாகப் பேசுவார். அவர் திடீரென்று ஒருநாள் கடுமையாகக் கோபப்பட்டுக் கத்தியபோது அவரது நண்பர்களால் அதை நம்ப முடியவில்லை. பிறரிடம் கோபப்படுவது, எரிந்துவிழுவது, சில சமயம் கை நீட்டிவிடுவது ஆகியவை எல்லாம் மனித இயல்புதான். ஆனால், இவர் விஷயத்தில் மட்டும் ஏன் அதை நம்ப முடியவில்லை?

‘அவரா அப்படிச் செய்தார்?’ இந்தக் கேள்வியைப் பல முறை நாம் எதிர்கொண்டிருப்போம். நாமே இந்தக் கேள்வியை எழுப்பியிருப்போம். இந்தக் கேள்விக்குப் பின்னால் இருக்கும் வியப்பும் அதிர்ச்சியும் எதைக் காட்டுகின்றன? மேற்படி நபர் அப்படிச் அப்படிச் செய்திருக்கவே மாட்டார் என்னும் அனுமானம்தானே இந்தக் கேள்வியை எழுப்புகிறது? எவ்வளவு நல்லவர், எவ்வளவு அன்பானவர், எவ்வளவு அடக்கமானவர், அவரா இப்படி?

அன்பு, பொறுமை ஆகிய பண்புகள் மட்டுமல்ல. நேர்மை, சுறுசுறுப்பு, சிக்கனத்துக்கு பேர்போனவர்களும் சில சமயம் அந்தப் பண்புகளுக்கு நேர்மாறான நடத்தையை வெளிப்படுத்திவிடுவதைப் பார்க்கிறோம். வியக்கிறோம். இப்படிப்பட்டவர்களே மோசமாக நடந்துகொள்ள முடியும் என்றால் யாரைத்தான் நம்புவது என்னும் ஆற்றாமையும் ஏற்படும். மனிதனின் நல்லுணர்வுகள், நன்னடத்தை மீதான நம்பிக்கை குறைகிறது.

அப்படிக் குறைய வேண்டிய அவசியம் உண்மையிலேயே இருக்கிறதா? ஒருவரது மாற்றம் உண்மையிலேயே ‘திடீர்’ மாற்றம்தானா? ‘நம்ப முடியாத’ மாற்றம்தானா?

   

டாக்டர் ஜேக்கில் லண்டனில் புகழ்பெற்ற மருத்துவர். மென்மையானவர். சமுதாயத்தில் நற்பெயர் பெற்ற மனிதர். அவரது நண்பர் வட்டத்தில் அவருக்குத் தனி மரியாதை உண்டு.

ஹைட் என்பவன் குரூரமான சில குற்றங்களைச் செய்துவருபவன். அவனைப் பார்த்தாலே அருவருப்பும் அச்சமும் தோன்றும். இரவில் அதிகம் நடமாடும் அவர், சாலையில் ஒரு குழந்தை எதிர்ப்பட்டால் அந்தக் குழந்தையை மிதித்துக்கொண்டு செல்லத் தயங்க மாட்டான். அற்பக் காரணத்துக்காக ஒரு முதியவரைக் கொல்லவும் தயங்க மாட்டான்.

இந்த ஹைடுக்கும் டாக்டர் ஜேக்கிலுக்கும் இடையில் ஏதோ ஒரு உறவு இருப்பது டாக்டரின் நண்பர் ஆட்டர்சனுக்குத் தெரியவருகிறது. சொத்துக்களை ஹைடுக்கு உயில் எழுதிவைக்குமளவுக்கு நெருக்கம் என்றும் தெரிகிறது. ஆனால் ஹைடைப் பற்றிப் பேசினால் டாக்டர் அதை விரும்புவதில்லை.

என்னதான் நடக்கிறது என்று ஆட்டர்சனுக்கும் டாக்டரின் பிற நண்பர்களுக்கும் புரியவில்லை. ஹைடின் குற்றச் செயல்களும் அதிகரிக்கின்றன. டாக்டரும் புற உலகிலிருந்து விலகித் தன் மருத்துவ ஆய்வுக் கூடத்தில் பெரும்பாலும் தனிமையிலேயே பொழுதைக் கழிக்கிறார். அவரது மர்ம நடவடிக்கைகள் அவரது பணியாளர்களுக்கும் நண்பர்களுக்கும் துயரத்தை ஏற்படுத்துகின்றன.

ஆட்டர்சன் இதை மேலும் ஆராயும்போது அவருக்குச் சில விஷயங்கள் தெரியவருகின்றன. உண்மையில் ஹைட் என்று தனியாக யாரும் இல்லை. டாக்டரேதான் ஹைட். அவர், தான் கண்டுபிடித்த மருந்தை உட்கொண்டு ஹைடாக மாறுகிறார். ஹைட் உருவில் இருக்கும்போது அவர் கற்பனைகூடச் செய்ய முடியாத அளவுக்குக் கொடூரமாக நடந்துகொள்கிறார். டாக்டராக இருக்கும்போது ஹைடைக் காப்பாற்றுவது எப்படி என்று சிந்திக்கிறார்.

டாக்டர் ஏன் அப்படி மாறுகிறார்? தனது ஆராய்ச்சிக்கான சோதனைக் களமாகத் தன் உடலை அவர் மாற்றிக்கொண்டால் அதை விபத்து என்று சொல்லலாம். ஆனால், அவர் விரும்பி அந்த மாற்றத்தை ஏற்கிறார். ஏன் அப்படிச் செய்கிறார்?

சின்ன வயதிலிருந்தே டாக்டருக்குச் சில கேள்விகள் இருக்கின்றன. தன் மனதில் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் கலந்து இருப்பதை அவர் தெளிவாக உணர்கிறார். அவரது வளர்ப்பு, பண்பாட்டுச் சூழல், படிப்பு, சமூக அந்தஸ்து அவரை நல்லவராகவே வாழ அனுமதிக்கின்றன. தன் மனதில் எழும் தீய, கொடூரமான எண்ணங்களுக்கு வடிகால் கிடைக்காமல் அவர் திணறுகிறார். அப்படிப்பட்ட வாழ்க்கையை அவர் ஆழ்மனம் பெரிதும் விரும்புகிறது. எனவே உருமாற்றத்துக்கான ஆய்வுகளை அவர் மேற்கொள்கிறார்.

அவருக்கு வெற்றியும் கிடைக்கிறது. ஆனால் ஹைட் ‘உருவான’ பிறகு அவரால் ஹைடின் செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதே சமயம் அவனைத் துறக்கவும் முடியவில்லை. ஹைட் காவல் துறையிடம் சிக்கிவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அவர் ஏற்கிறார். இந்தச் சோதனையில் தனக்கு ஏதாவது நடந்துவிட்டாலும் ஹைட் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவனுக்குத் தன் சொத்தை எழுதிவைக்கிறார். அவனுக்கென்று தனியான வங்கிக் கணக்கையும் தொடங்குகிறார். அதாவது, தன்னுடைய சுய ஆளுமையின் ஒரு பகுதியைத் தனியே பிரித்து அதைத் தனிப்பிறவியாக வாழவிடுகிறார். இது தவறு என்று அவருக்குத் தெரிகிறது. ஆனால் ஹைடை விட்டு அவரால் விலக முடியவில்லை.

ஹைடாக இருக்கும்போது அவரது சிந்தனைகள் விகாரமாக இருக்கின்றன. முழுக்க முழுக்க அழிவுபூர்வமான, நாகரிகமற்ற நடத்தைகளே ஹைடிடம் வெளிப்படுகின்றன. டாக்டர், ஹைடைப் பற்றி யோசிப்பதுபோலவே ஹைடும் டாக்டரைப் பற்றி யோசிக்கிறான். ஹைடைக் கண்டு பயந்து, அல்லது வெறுத்து, டாக்டர் ஏதாவது செய்துவிடுவாரோ என்று அவன் அஞ்சுகிறான். ஹைடிடமிருந்து தப்ப அவர் தற்கொலைகூடச் செய்துகொண்டுவிடலாம் என்று சந்தேகப்படுகிறான். எனவே டாக்டரை அவன் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்குகிறான். டாக்டராக இருக்கும் நேரத்தைக் குறைப்பதற்கான வேலைகளைச் செய்கிறான். வெளியில் மட்டுமே அதிகம் புழங்கும் அவன் ஆய்வுக்கூடத்துக்குள்ளும் வருகிறான்.

டாக்டராகவும் ஹைடாகவும் மாறிமாறி வாழ்ந்த நிலை மாறி, டாக்டரே ஹைடாக மாறிக்கொண்டிருக்கிறார். டாக்டராக இருக்கும் நேரம் குறைகிறது. அந்தச் சமயங்களில் ஹைடால் என்னவெல்லாம் நடக்குமோ என்று அவர் அஞ்சுகிறார். ஆனால், நிலைமை கைமீறிப் போகிறது. ஹைடின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. அவன் கை ஓங்குகிறது. டாக்டர் இறந்தால்தான் ஹைடை ஒழிக்க முடியும் என்ற நிலை உருவாகிறது.

   

ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன் என்னும் ஆங்கில எழுத்தாளர் எழுதிய கதை ‘Dr. Jekyll and Mr. Hyde’. இதைத் தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான கு.ப.ராஜகோபாலன் ‘இரட்டை மனிதன்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார் (ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ்).

ஒரு மனிதனுக்குள் எப்போதும் ஒளிந்திருக்கும் இன்னொரு மனிதனைப் பற்றிய விறுவிறுப்பான கதை இது. எப்படிப்பட்ட மனிதரிடத்திலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும் என்பதையும் எந்த அம்சம் எப்போது வெளிப்படும் என்பதை யாரும் அனுமானிக்க முடியாது என்பதையும் உறையவைக்கும் விதத்தில் உணர்த்தும் கதை. பண்பாடு, நாகரிகம், மனித உறவுகள், சமூகச் சூழல், பயிற்சி எனப் பல அம்சங்கள் மனிதர்களின் இருண்டபக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. ஒரு சில தருணங்கள் மனிதர்களின் இந்தக் கவசங்களைக் கழற்றிவிடுகின்றன. மனிதனின் மோசமான மறு பக்கத்தை அம்பலப்படுத்திவிடுகின்றன. இதனால்தான் நாம் எதிர்பார்க்காத விதங்களில் எதிர்பார்க்காத செயல்களை மனிதர்கள் செய்துவிடுகிறார்கள்.

அப்படியானால் மனிதர்களை நம்பவே முடியாதா? அவர்களுடைய நல்லுணர்வுகளுக்கு, நன்னடத்தை களுக்கு எந்த உத்தரவாதமும் கிடையதா? இருக்கிறது. நன்மை, தீமை என்னும் இருமைகள் மட்டுமல்லாமல், பல விதமான சாயல்களும் கலந்துதான் நம் மனதில் இருக்கின்றன என்னும் உண்மையை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். புறத் தோற்றங்கள், அனுமானங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நம்மையும் மற்றவர்களையும் எடைபோடுவது தவறான முடிவுகளுக்கும் தேவையற்ற அதிர்ச்சிகளுக்கும் காரணமாகிவிடும் என்பதை இந்தக் கதையின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

தனக்குள் இருக்கும் கெட்டவனைத் தரிசிக்க வேண்டும் என்று டாக்டர் ஜேக்கில் விரும்பினார். ஆனால் அந்த தரிசனம் கிடைக்கும்போது அவரால் அதைத் தாங்க முடியவில்லை. உள்ளே இருக்கும் மிருகம் எழுந்த பிறகு அதை அடக்கவும் முடியவில்லை. அந்த மிருகத்தைப் புரிந்துகொண்டு தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயல்வதுதான் அதைச் சமாளிக்கும் வழி என்பதை அறிவுரை சொல்லாமலேயே உணர்த்துகிறார் ஸ்டீவன்ஸன்.



சென்ற வாரம் வெளியான கதையை எழுதியவர் Stefan Zweig (ஸ்டீஃபன் ஜ்ஸ்வேய்க்). கதையின் தலைப்பு The Royal Game (தி ராயல் கேம்). இது ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது.இந்தக் கதையை லதா ராமகிருஷ்ணன் ‘ராஜ விளையாட்டு’ என்னும் பெயரில் (ஆங்கிலம் வழியே) மொழிபெயர்த்திருக்கிறார். ‘புதுப்புனல்’ வெளியீடாக இது வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x