

எனக்குத் கொஞ்சம் அறிமுகமான அந்த நபர் ஓட்டல் தொடங்கினார். பின்னால் ஓட்டலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டபோது, அதற்கான போஸ்ட்மார்ட்டம் காரணங்களில் ஒன்று இடம். “பிரதான சாலையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!” என்றார் நண்பர்.
இன்னும் விளம்பரம் செய்திருக்கலாம், மாஸ்டர்கள் சரியில்லை என்றெல்லாம் அலசப்பட்டதில்,எனக்குத் தோன்றிய காரணம் இதுதான்: “என் ஓட்டல் எப்படிப்பட்டது?” என்று நண்பர் ஆணித்தரமாகச் சொல்லவில்லை.
ஒவ்வொரு ஊரிலும், குறிப்பாக நகரமுமற்ற, கிராமமுமற்ற ஊர்களில் பிரதான சாலையிலிருந்து சற்று உள்ளே ஒரு ஓட்டு வீட்டில், ஏதோ ஒரு மெஸ் பசியைப் போக்கிக்கொண்டிருக்கும். தாமதமாகப் போனால், அவை அமுதசுரபிகளைக் கவிழ்த்துவிடும். அங்கே விலை குறைவு, நியாயமான ருசி என்ற உண்மைகளைத் தாண்டி, அங்கே குவியும் எச்சில் இலைகளுக்கு ஒரு காரணம் இருக்கிறது.
“இங்கே டிபன் கிடைக்கும்” என்று கோணலாகக் காகித அட்டை தொங்கும் அந்தச் சின்ன ஓட்டலில் சைவம் என்றால் பெரும்பாலும் இட்லி, தோசை, அப்பளத்துடன் சாப்பாடு; அசைவம் என்றால் ஆடு, கோழிகளின் ஃப்ரைகள், குழம்புகள். மீன்கூட அதிகபட்சம்தான்.
அங்கே “கிரில்டு சிக்கன், காஷ்மீரி கொஃப்தா, பன்னீர் புலவ் சாப்பிடுகிறீர்களா?” என்று யாரும் கேட்க மாட்டார்கள். பசித்தவர்களும் “அமெரிக்கன் சாப்ஸி, பஞ்சாபி சிக்கன்...” என்று ஆர்டர் செய்யப் போவதில்லை.
இதைத்தான் “அவர்கள் தங்களிடம் வந்தால் என்ன கிடைக்கும் என்று தெளிவாக்கிவிட்டார்கள்” என்கிறேன். அவர்களை அறியாமலேயே அறிவித்த அவர்களின் உணவுக் கொள்கையை, வாடிக்கையாளர்களும் அவர்களை அறியாமலேயே ஏற்றுக்கொண்டார்கள்!
நண்பர் செய்த தப்பு இதுதான். ஓட்டலை மேம்படுத்தப்பட்ட மெஸ் மாதிரி நடத்த வேண்டும் என்று தொடங்கியவர் திடுமென தந்தூரி, கடாய் சிக்கன் என்று இறங்க, “ட்ராகன் சிக்கன், ஹைதராபாத் சிக்கன் இருக்கிறது” என்பவரிடம் வாடிக்கையாளர், “செட்டிநாடு சிக்கன் இருக்கிறதா?” என்றுதான் கேட்பார்.
இவற்றையும் வழங்கலாம். ஆனால், இதற்கேற்ப சீருடை தரித்த பணியாளர்கள், இது போன்ற உணவுகளை சமைக்கத் தெரிந்தவர் என்று அதற்கான கட்டமைப்பு இருந்தால்தான் வித்தியாசமான உணவுகளுக்கான ருசியாளர்களைத் திருப்தி செய்ய முடியும்.
ஆக, நண்பரின் ஓட்டல் தன்னைச் சரியாக அறிமுகம் செய்துகொள்ளவில்லை. ஒரு நேரம் பார்த்தால் காரக் குழம்பு, கொஞ்ச நேரம் கழித்து சிக்கன் லாலிபாப்! “சிக்கன் வடை நேத்து இருந்தது, இன்னிக்குக் கேட்டால் மாஸ்டர் லீவாம்.” என்ற குழப்பங்களில் ‘என்னிடம் வந்தால் என்ன கிடைக்கும்’ என்ற ஆணித்தரமான குரல் மறைந்தேவிட்டது.
எல்லா விதமான நிறுவனங்களுக்கும் பொருந்தும் இந்த உண்மை மனிதர்களுக்கும் பொருந்தும். ‘இதுதான் நான்; என்னிடம் வந்தால் இதுதான்...’ என்னும் தெளிவு இல்லை என்றால் அது குழப்பத்திற்கும் வீழ்ச்சிக்கும்தான் கூட்டிச் செல்லும்.
காஞ்சிபுரம் ஏழுமலையிடம் யாராலும் ஒரு விஷயத்தை உணர்த்த முடியாது. “நேத்திக்கு பஸ்ல ஒரே கூட்டம்” என்றால் என்ன சொல்ல வருகிறோம் என்பதை முழுசாகக் கேட்கவே மாட்டான். “போன வருஷம் நான் வந்த பஸ்ல கூட்டத்தைப் பாக்கணுமே.” என்று அரை மணிநேரம் பேசுவான். “எனக்குக் கோபம் வந்தால்...” என்றார் ஒருவர். ஏழுமலை, “இதுக்கே இப்படிச் சொல்றீங்க,எனக்குக் கோபம் வந்தப்ப...” என்று ஆரம்பிப்பான். வேலையில் தான் ரொம்ப கண்டிப்பு என்றார் ஒருவர். ஏழுமலை உடனே பயங்கரக் கண்டிப்பானவனாக மாறினான்.
நிறையப் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். கோபக்காரர்கள் என்றால் அவர்களும் கோபக்காரர்கள். சாதுர்யமானவர்கள் என்றால் அவர்களும் அப்படித்தான். காமெடியன் என்றால் காமெடியர்கள். புத்திசாலி என்றால் அடுத்த பத்து நிமிடங்களுக்கு அவர்களது புத்திசாலித்தனம் வெளிப்பட்ட சம்பவங்கள் அணிவகுக்கும்.
இப்போதும் எழுமலை, “என்னைப் போல் நன்றாகப் பேசுபவனை ஏன் இந்த உலகம் குழப்பவாதி என்கிறது?” என்று குழம்பிக்கொண்டிருக்கிறான். எங்கும் நான்; எதிலும் நான் என்றிருப்பவனை உலகம் எப்படி மதிப்பிடும்? குழப்பவாதி என்றுதான் சொல்லும்.
எனவே, நீங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அது எவ்வளவு தரக்குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் எப்படிப்பட்டவர்? காமெடியனா? சீரியஸான ஆளா? கேலி செய்தால் தாங்குவீர்களா? அட்ஜஸ்ட் செய்வீர்களா? அவமானம் சகிப்பீர்களா? விட்டுக்கொடுப்பீர்களா? உதவி செய்வீர்களா? இரகசியம் காப்பீர்களா? ரிஸ்க் எடுப்பீர்களா? உங்கள் குணாதிசயம் என்ன, நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை மற்றவர்களுக்குப் புரிய வையுங்கள். குறைந்தபட்சம் நீங்களாவது உணர்ந்திருங்கள்.
காய்கறி உணவுக்காரர்களிடம் தலைக்கறி செய்யும் முறையை உலகம் கேட்பதில்லை. கிரிக்கெட்டை வெறுப்பவர்களிடம் யார்தான் ஸ்கோர் கேட்பார்கள்?
எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள், வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள், பொய் சொல்கிறார்கள் என்று தங்களாலும் முடியும் என்று நம்பி, தங்கள் இயல்புக்குக் கொஞ்சமும் பொருந்தாத செயல்களில் ஈடுபட்டுத் திணறி சிக்கலிலும், மன உளைச்சலிலும் திளைப்பவர்கள் நிறையப் பேர்.
இந்த பாவனைக்கு அடிப்படைக் காரணம், மற்றவர்களுக்கு நான் எவ்விதத்திலும் குறைந்தவனில்லை என்ற எண்ணமே. மற்றவரைவிட நான் மேலானவன் என்று காட்டிக்கொள்ள முயலும்போது உங்கள் அடையாளங்களை இழக்கிறீர்கள். அடுத்தவரின் மதிப்பைப் பெறப் பொய்யான ஒப்பனைகளுடன் சென்றால், அவை கலையும்போது அசிங்கமாகக் காட்சியளிப்பீர்கள்.
79-ல் ‘உதிரிப்பூக்கள்’ என்றொரு படம் வந்தது. அதன் சுவரொட்டி விளம்பரங்களைப் பார்த்தால் ஒரு பெண் உலகின் எல்லா சோகங்களையும் தாங்கி நின்றிருப்பாள். படத்திற்குப் போகிறவர்கள் உதாசீனம் செய்யப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட ஒரு பெண்ணைச் சந்திக்கிற மனநிலையுடன் சென்றார்கள். அங்கே யாரும் அதன் நாயகன், நாயகி டூயட் பாடுகிற காட்சியையோ, இன்பமான முடிவையோ எதிர்பார்க்கவே இல்லை.
சுவரொட்டிகள் முன்கூட்டியே ரசிகர்களை சோக மனநிலைக்குத் தயார் செய்து அனுப்பியதும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம்.
2014-ல் வந்த ‘முண்டாசுப்பட்டி’ படத்துக்கான சுவரொட்டிகளில் முகம் பெரிதாய், உடல் சிறிதாய் அமைந்த உருவங்களை நினைத்துப்பாருங்கள்!
நான் யார், எப்படிப்பட்டவன், என்னிடம் வந்தால் என்ன கிடைக்கும்? இதைத் தெளிவாகக் காட்டிவிடுவதே நல்லது.
எல்லாமாக இருப்பவர்கள் கடைசியில் எதுவுமாக இருக்க மாட்டார்கள். எதுவுமாக இல்லாதவரை, எந்த அடையாளமும் அற்றவரை யார்தான் பொருட்படுத்துவார்கள்?