Last Updated : 20 Jul, 2021 03:13 AM

 

Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

அறிவுக்கு ஆயிரம் கண்கள் 14: திமிங்கிலங்களின் காற்று வலை

ஒரு புட்டித் தண்ணீர் வாங்கி வருகிறீர்கள். அந்தத் தண்ணீரை இன்னொரு பாத்திரத்தில் அவசரமாக நிரப்ப வேண்டு மென்றால், என்ன செய்வோம்? புட்டியைத் தலைகீழாகத் திருப்பி வைப்போம். இதனால், தண்ணீர் வேகமாக மேலிருந்து கீழே கொட்டிவிடும் என்று நினைப்போம். ஆனால், அப்படி நடக்காது. மொத்தமாகக் கொட்டாமல், ‘பொளக்... பொளக்...’ என்னும் சத்தத்தோடு கொஞ்சம் கொஞ்ச மாகவே வெளியேறி, நம் பொறுமையைச் சோதிக்கும். இதற்கு என்ன காரணம்?

காற்றுக்கும் தண்ணீருக்கும் போட்டி

புட்டியைக் கவிழ்த்தவுடன் முதலில் சிறிதளவு தண்ணீர் புட்டியின் வாய் வழியே வெளியேறும். தண்ணீர் வெளியேறும்போது புட்டியின் அடிப்பக்கத்தில் காற்றில்லாத வெற்றிடம் உருவாகத் தொடங்கும். அதனால், அங்கே அழுத்தம் குறையும். புட்டியின் உட்புறத்தில் அழுத்தம் குறைந்ததை உணர்ந்த வெளிப்புறக் காற்று, உடனே புட்டிக்கு உள்ளே செல்லும். தண்ணீரின் ஊடே காற்று செல்லும்போதுதான் இந்த ‘பொளக்... பொளக்...’ என்னும் சத்தம் நமக்குக் கேட்கிறது.

உள்ளே சென்ற காற்று அங்கிருக்கும் அழுத்தத்தைச் சமன்படுத்தியவுடன், மீண்டும் சிறிதளவு தண்ணீர் வெளியேறும். மறுபடியும் புட்டியின் அடிப்பக்கத்தில் காற்றின் அழுத்தம் குறையும். அதனால், வெளிப்புறக் காற்று உள்ளே போகும். இப்படியாக காற்று உள்ளே செல்ல, தண்ணீர் வெளியேற என்று மாறிமாறி ஒன்றை ஒன்று தள்ளிக்கொண்டிருக்கும். அதனால்தான், தலைகீழாகக் கவிழ்த்துப்பிடித்தால் தண்ணீர் வெளியேற மிகுந்த நேரமெடுக்கிறது. இதற்குப் பதிலாக, லேசாகச் சாய்த்துப் பிடித்தால், வாய் வழியே தண்ணீர் வெளியேறும்போதே, மேற்புறத்தில் காற்று செல்வதற்கு இடைவெளி கிடைக்கும். அதனால், தண்ணீர் சீராகவும் வேகமாகவும் வெளியேறும்.

காற்றுக்கும் ஒரு துளை

புட்டியிலிருந்து நீரை வெளியேற்றுவதற்கு இவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமா என்றால், ஆமாம். எண்ணெய், பெட்ரோல் போன்ற திரவங்களைத் தேவையான இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால் பீப்பாய்களில் நிரப்பி எடுத்துச் செல்வார்கள். அந்தப் பீப்பாய்களின் மூடியில் ஒரு துளைக்கு பதிலாக இரண்டு துளைகள் இருக்கும். ஒரு துளை வழியே திரவம் வெளியேற, மற்றொரு துளை வழியே காற்று உள்ளே செல்வதற்கான அமைப்பு இருக்கும். இப்படிக் காற்று போய்வருவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் துளைகளை ‘வடிதுளை’ (vent holes) என்பார்கள். இதனால், திரவங்கள் வேகமாக வெளியேற முடியும்.

நான்கு நாட்களுக்குத் தண்ணீர் வராமல், திடீரென்று தண்ணீர் வரும்போது, குழாயைத் திறந்தால் காற்றும் நீரும் சேர்ந்து “சர்ரக்... சர்ரக்...” என்று வெளியேறுவதைப் பார்த்திருப்போம். தண்ணீரின் ஊடே சிக்கிக்கொண்டிருக்கும் காற்று வெளியேறுவதால் ஏற்படும் சத்தம் இது. திரவத்தின் ஊடே சிக்கியிருக்கும் காற்று சரியான நேரத்தில் வெளியேறிவிடுவது நல்லது. இல்லையென்றால், குழாயை உடைத்துக்கொண்டு வெளியேறும். இதனால், திரவங்களை நிரப்பும்போது முடிந்தவரை காற்றுக் குமிழிகள் சேர்ந்துவிடாதவாறு பார்த்துக்கொள்வார்கள். நம் பாதுகாப்பு முயற்சிகளையும் மீறி சேர்ந்துவிட்ட காற்று வெளியேற வேண்டும் என்பதால், தண்ணீர் தொடங்கி எந்தத் திரவமானாலும் அவற்றைச் சேகரிக்கும் தொட்டிகளிலும், குழாய்களிலும் தோதான வடிதுளைகளை அமைத்திருப்பார்கள்.

குமிழி வலை

தண்ணீரின் ஊடே சிக்கிக்கொள்ளும் காற்று நமக்குப் பிரச்சினையாகத் தெரியலாம். ஆனால், இந்த எளிய அறிவியல் செயல்முறையைப் பயன்படுத்தி திமிங்கிலங்கள் தங்களுக்கான உணவைச் சேகரிக்கின்றன. திமிங்கிலங்கள் மூச்சுவிடுவதற்காகக் கடலின் மேற்புறத்துக்கு வந்து, நுரையீரலில் காற்றை நிரப்பிக்கொண்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடுகின்றன. அவற்றின் நுரையீரல் மிகப் பெரியது என்பதால் நிறைய காற்றை உள்ளிழுத்துக்கொள்ள முடியும்.

திமிங்கிலங்கள் தங்களுக்குள் தொடர்புகொண்டு வட்டம் அமைத்து, ஒரே நேரத்தில் மூச்சுக்காற்றை வெளிவிடும். அப்போது, கடல் நீரில் பெரிய காற்றுக்குமிழிகள் உருவாகி தண்ணீரின் பரப்புக்கு வந்து உடையும். கடலில் இருக்கும் குட்டி மீன்கள் தங்களைச் சுற்றி ஏதோ வெடிக்கிறது என்னும் பய உணர்வில் திமிங்கிலங்கள் வெளியேற்றிய குமிழி வட்டத்துக்குள் கூட்டாகத் திரளும். இப்படித் திரண்டிருக்கும் குட்டி மீன்களைத் திமிங்கிலங்கள் உணவாக்கிக்கொள்கின்றன. இது குமிழி வலை (bubble net) முறையில் மீன் பிடித்தல். நீந்தி நீந்தி இரையைத் தேடாமல், இந்த எளிய, அற்புதமான அறிவியல் முறையைத் திமிங்கிலங்கள் கையாளுகின்றன.

கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x