Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

அயராத வாக்குரிமைப் போராளி

ஜூலை 14: எமலின் பிறந்த நாள்

வாக்குரிமை என்பது உலகளாவியதாக இருந்தாலும் அது அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியானதாக இல்லை. விடுதலையின்போதே எவ்வித எதிர்ப்பும் ஒதுக்கீடும் இல்லாமல் இந்தியா தன் நாட்டுப் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. இந்த வாக்குரிமை நமக்கு எப்படி இவ்வளவு இயல்பாகக் கிடைத்தது என்று உலகின் பல நாடுகளும் நம்புவதற்குச் சிரமப்பட்டன. காரணம், உலக நாடுகள் மத்தியில் மரபார்ந்த பெருமை படைத்த, இந்திய நிறுவனங்கள் பலவற்றில் முக்கியத் தாக்கத்தைச் செலுத்திய இங்கிலாந்து, நீண்ட நெடிய கசப்பான போராட்டங்களுக்குப் பிறகுதான் தன் நாட்டுப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. 163 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு பெண், தன் உறுதிமிக்க, அயராத போராட்டத்தால் இதை நிகழ்த்திக்காட்டினார்.

1858-ம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் உள்ள பகுத்தறிவாளர் குடும்பத்தில் ஜூலை 14 அன்று எமலின் பேங்கஸ்ட் பிறந்தார். பெண் வாக்குரிமைப் போராளியான இவரது 40 ஆண்டுக் கால இடைவிடாத போராட்டம் இறுதியில் வெற்றிபெற்றது. ஆனால், அவர் இறந்த ஆண்டுதான் அந்த வெற்றி கைகூடியது. 1928-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி 69 வயதில் எமலின் இறந்தார். அவர் இறந்த சில மாதங்களில் இங்கிலாந்தில் பெண்களுக்கு முழு வாக்குரிமை வழங்கப்பட்டது.

சிறை செல்வதும் பெருமை

எமலினின் சிந்தனையைத் தூண்டிய திலும் அவரது போராட்டத்தைச் செழுமைப் படுத்தியதிலும் வழக்கறிஞரான அவருடைய கணவர் மார்ட்ஸன் பேங்கஸ்ட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. 1898-ல் தன் கணவர் இறந்த போது தனக்கு உறுதுணையாக இருந்த தூணை இழந்து பெரும் துயரத்துக்கு ஆளானார்.

1889-ல் தான் உருவாக்கிய ‘பெண்கள் உரிமைக் கழகம்’ மூலம் பெண் வாக்குரிமைக் கான முதல் போராட்டத்தை எமலின் நடத்தினார். இவரது போராட்டத்தின் விளைவாகத் திருமணமான பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 1894-ல் வாக்குரிமை வழங்கப்பட்டது, அவரது மிகப்பெரிய முதல் வெற்றி இது. 1903-ல் ‘பெண்கள் சமூக மற்றும் பொருளாதாரச் சங்க’த்தை மான்செஸ்டரில் அமைத்தார். 1905 அக்டோபர் 13 அன்று அந்தச் சங்கத்தின் இரு உறுப்பினர்கள் (ஒருவர் எமலினின் மகள், மற்றொருவர் பெண்களின் வாக்குரிமை குறித்துக் கேட்டதற்காகக் லிபரல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்) கைது செய்யப்பட்டபோது, சங்கம் பொதுமக்களின் கவனத்துக்கு வந்தது. அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் வாக்குரிமைப் போராளிகள் என்று அழைக்கப்பட்டனர். 1913 அன்று அந்தச் சங்க உறுப்பினர்களில் ஒருவரான எமிலி டேவிசன், அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்காததைக் கண்டித்து மன்னரின் குதிரையின் கீழே விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டார். வாக்குரிமைப் போராளிகளின் விளக்கக் கூட்டங்கள், உண்ணாநிலைப் போராட்டங்கள் போன்றவற்றால் அரசும் ஊடகங்களும் பொதுமக்களும் திகைத்தனர். பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த ஜன்னல் உடைப்புப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் குறித்து, “எங்கள் பாலினம் மிக மோசமானதாகக் கருதப்படும் நிலையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கச் சட்டத்தை மீற வேண்டியுள்ளது” என்று எமலின் குறிப்பிட்டுள்ளார். சிறை செல்வது குறித்து எமலின் அஞ்சியதில்லை. சொல்லப்போனால் அதைப் பெருமையாகக் கருதினார்.

சொல்லைவிடச் செயலே நன்று

முதல் உலகப் போரின் காரணமாக 1914-ல்இவர்களது வாக்குரிமைப் போராட்டம் நிறுத்தப்பட்டது. போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதே ஆண்டு தனது சுயசரிதையை எமலின் வெளியிட்டார். போரின்போது அமெரிக்கா, கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குச் சென்ற எமலின் அங்கே தொழிற்சாலைகளில் பெண்கள் பணியாற்றுவதை ஊக்குவித்தார். அவரது உறுதிமிக்கப் போராட்டங்களின் விளைவாக, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 1918-ம் ஆண்டு வாக்குரிமை அளிக்கப்பட்டது. பிறகு, 21 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலருக்கும் 1928இல் வாக்குரிமை அளிக்கப்பட்டது. எமலின் இறந்து சில வாரங்கள் கழித்து நிகழ்ந்தது இது. பெண்களுக்கான உரிமைகள் குறித்துப் பேசும்போது, ஏழை பணக்காரர் ஆகிய இரு பிரிவினரையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அவர் எதிர்கொண்ட மற்றொரு சவால், பெண்ணே பெண்ணை ஒடுக்குவதும் சுரண்டுவதும். எமலின், வார்த்தைகளைவிடச் செயலில் நம்பிக்கை வைத்தார். அதுதான் தனியொரு மனுஷியாக அவரை மாபெரும் சாதனையைச் செய்ய வைத்தது. எமலினைப் பொறுத்தவரை, கடவுள் ஒரு பெண். அதனால்தான் அடிக்கடி, “கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள். அவள் அதை நிறைவேற்றுவாள்” என்பார்.

கட்டுரையாளர், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சுருக்கமாகத் தமிழில்: பூரணி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x