

வேலைக்குப் போவதற்கான ஆயத்தமல்ல கல்வி. அது ஒரு மனிதனை முழுமையாக்கும் வாழ்வின் தேடல். சமூகத்தை நோக்கி அவனை அது அழைத்துச் செல்ல வேண்டும்.
- நெல்சன் மண்டேலா
நமது கல்வி முழுமையான கல்வியாக இருக்க வேண்டும் என்று கடந்த பத்தாண்டுகளாகப் பேசப்படுகிறது. ஒரு மாணவர் தனக்கு எவ்வளவு தெரியும், தனது ரேங்க், தனது புத்தகம், நோட்டு என்று மட்டுமே சிந்திக்கும் போக்கை மாற்றுவது கடினமாகவே உள்ளது. பள்ளியை ஒரு ஒட்டுமொத்த சமூகமாகவும். உள்ளூர்ச் சமூகத்தைப் பள்ளியோடு இணைப்பதும்கூடப் பெரிய சவாலாக உள்ளது.
பங்கேற்பாளராக மாற்றும் கல்வி
தனது பாடத்தில் ஆஸ்திரேலிய கங்காருவையும் பஞ்சாப் பொற்கோயிலையும் வரிந்துகட்டிப் படித்து ஐந்து மார்க், பத்து மார்க் வாங்கும் ஒரு குழந்தைக்கு உள்ளூரின் சிறப்பும் சொந்த ஊரின் சமூகநிலை பற்றிய சிந்தனையையும் வளர்க்க நமது கல்வியால், முடியவில்லை. அதற்கு நேரமில்லை. அது நடக்காதவரை கல்வி வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ தான் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? உலக வரைபடத்தில் கனடா எங்கே இருக்கிறது என்று தெரிந்திருப்பதைவிடத் தன் சொந்த ஊரில் ‘உழவர் சந்தை’ எங்கேயிருக்கிறது என தெரிந்திருப்பது முக்கியமில்லையா?
கணக்கில் 100-க்கு 100 வாங்கினாலும் காய்கறிக் கடையில் மீதிச் சில்லறையைக் கணக்குப் பண்ணி வாங்கத் தெரியாது என்றால் சமூகத்தோடு கலக்கும் அனுபவங்களை ஒரு குழந்தை பெறவில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது? அதற்கு பள்ளிக்கல்வியும் வீடும் கைகுலுக்கும் ஒரு புள்ளி கண்டிப்பாகத் தேவை. வகுப்பறை அறிவை மாணவர்களின் வாழ்க்கை அனுபவங்களோடு இணைத்துத் தரும் கல்விதான் வெறும் பார்வையாளராக இல்லாமல் பங்கேற்பாளராக மாணவரை மாற்றும். அறிந்ததிலிருந்து அறியாததற்கு, எளிதிலிருந்து கடினமானதற்கு என்பது கல்வியில் எவ்வளவு முக்கியமோ அதேபோல உள்ளூர் அறிவிலிருந்து உலக அறிவுக்கு என்பதும் ஒரு கொள்கை ஆக்கப்பட வேண்டும். அதுவே முழுமையான கல்வி. அதன் அவசியத்தை எனக்கு போதித்தவர்தான் மாணவி வரலட்சுமி.
முழுமையாக்கும் கல்வி
வாசித்தல், எழுதுதல், கணக்கிடுதல் மட்டுமே கல்வி எனப் பொதுவாக உலகம் நம்பியபோது 1960-களில் ஆஸ்திரியக் கல்வியாளர் இவான் இலிச் போன்றவர்களால் ‘முழுமையான கல்வி’ வளர்த்தெடுக்கப்பட்டது. பொதுவான கல்விக்கு மாற்றாக மனித உறவுகள், பொறுப்புணர்ச்சி, பரஸ்பர மதிப்புணர்வு ஆகியவையே உண்மையான கல்வியின் அடையாளம் என இவான் இலிச் அறிவித்தார்.
கல்வியைப் பள்ளி எனும் கட்டிடத்திலிருந்து திறந்தவெளி நோக்கி அவர் நகர்த்தினார். ஒரே மாதிரி அன்றாடச் செயல்பாடுகளை தினமும் இயந்திரம் போல அனுசரித்துக் கற்றலை சராசரிக் கல்வி குறுக்கிவிடுகிறது. அந்தக் கல்வியால் சமூகத்துக்கு எந்தப் பலனும் கிடையாது என்பது அவரது கருத்து. குழந்தைகளை அவரவர் வயதுக்கேற்ப சுதந்திரமாய் ஊர் சுற்றவும் தான் விரும்புவதைச் செய்யவும் வாரத்துக்குச் சில மணி நேரங்கள் அனுமதிப்பது இலிச்சின் கல்வியின் ஒரு அம்சம். தாங்களாகவே குழுக்களாகவோ தனியாகவோ சுற்றுப் பயணங்களை மேற்கொள்வது ஊர் விழாக்களில் ஏதாவது ஒரு பங்களிப்பை நிகழ்த்துவது இவை பள்ளியின் செயல்பாடுகளை விட அதிகமான பாடங்களைக் குழந்தைகளுக்கு வழங்கும் என்பது இலிச்சின் நிலைப்பாடு.
திருமண வைபவங்களில் பங்கேற்பதும் இறந்தவர் வீடுகளின் பணிகளில் இணைவதும் சமூகக் கல்வியின் சாரம் என்றார் அவர். இலிச் முன் வைக்கும் கல்வி மூலம் உருவாகும் ஒரு சந்ததி நீர்நிலைகள் அழிவதையும் தனது பகுதியில் விவசாய நிலங்கள் எல்லாம் குடியிருப்புகள் ஆவதையும் வேடிக்கை பார்க்காது என்பதே உண்மை. நமது சூழலில் அத்தகைய சமூகப் பங்கேற்பின் மூலம் கற்றுக்கொள்ளும் சாத்தியங்களை எனக்குப் புரியவைத்தவர்தான் மாணவி வரலட்சுமி.
சேவை எனும் கல்வி
நாங்கள் அப்போது காலாண்டு விடுமுறையில் ஒரு கிராமத்தில் மூன்று நாட்கள் சாரண- சராணியர் முகாம் நடத்த கூடியிருந்தோம். மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். சாரண வகுப்புகள் நடத்தப்பட்டன. பாடம் படிப்பது, எழுதுவதுக்குப் பதிலாக பாடல்கள், முதலுதவி பயிற்சிகள் என வழக்கம்போல நடந்துகொண்டிருந்தது. அப்போது மாணவி வரலட்சுமி என்னிடம் வந்தார்.
அவர் ஒரு குழுவின் தலைவியாய் இருந்தார். ‘‘இதெல்லாம் எங்களுக்கு ஏற்கெனவே தெரியும் சார்… வருசா வருசம் இதே மாதிரிதான் கேம்ப் நடத்தணுமா’’ என்று கேட்டு அதிரவைத்தார் அந்த எட்டாம் வகுப்பு மாணவி. ‘‘ஊருக்குள்ளே போகணும் சார்..’’ என்றார். அவர் கொடுத்த அழுத்தம் என்னை பாதித்திருக்க வேண்டும். மற்ற முகாம் ஆசிரியர்களோடு பேசி முடிவு செய்தேன். குழுக்களாக ஊர் மக்களிடம் சென்று ஏதாவது ஒரு சேவையில் ஈடுபடலாம். அதற்கு மதிப்பெண்கள் வழங்கி சிறந்த குழு அறிவிக்கப்படும் என மாணவ மாணவியர்களை அனுப்பி வைத்தோம்.
மூன்றாம் நாள் இறுதியில் முகாமிட்ட இடத்தில் ஊரே கூடிவிட்டது. எங்களை யார் யாரோ பாராட்டினார்கள். கொசு ஒழிப்பு பற்றி ஒரு குழுவும் மரம் நடுவது பற்றி இன்னொரு குழுவும் ஊரில் வீடுவீடாகப் பேசியிருந்தார்கள். இது நடப்பதுதான். ஊர்க் கோயிலை ஒரு குழு சுத்தம் செய்துள்ளது. இதுவும் புதிதல்ல. ஆனால் வரலட்சுமியும் அவரது குழுவினரும் செய்த வேலையை அறிந்து நாங்கள் திகைத்தோம்.
அவர்கள் ஒரு நாள் ஊரில் தார்ச் சாலை போட வந்தவர்களோடு இணைந்து வேலைசெய்துள்ளார்கள். அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுபவர்களோடு ஒரு நாள் செங்கல் உடைத்து மண் சுமந்துள்ளார்கள். கடைசி நாளில் விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சவும், களை பறிக்கவும் உடனிருந்து வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். கல்வியின் புதிய பரிமாணம் இப்படித்தான் இருக்கவேண்டும்.
மூடிய ஒரு முகாமுக்குள்ளே செயல்படும் ஒரு வடிவத்தை உடைத்து ஊருக்குள்ளே போய், சமூகப் பங்களிப்பில்தான் கல்வியின் முழுமை இருக்கிறது என்று எனக்குக் காட்டிய வரலட்சுமி இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியையாக இருக்கிறார்.
- தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
எதிரொலி
இத்தனை ஆண்டு களாகியும் நீங்கள் என்னை நினைவில் கொண்டிருப்பதற்கு நன்றி.
சிறுவயதில் எனது அம்மா, அப்பாவும் உங்களைப் போன்ற ஆசிரியர்களும் எனக்கு மிகவும் உற்சாகமூட்டுபவர்களாக இருந்தீர்கள். எனது அப்பாவும் எந்த விதமான தேவையில்லாத விடுமுறையும் எடுக்காதவர். அம்மாவும் அப்பாவும் என்னை ஒரு நாள் தவறாமல் பள்ளி செல்லவைப்பதில் கவனமாக இருப்பார் கள். அதுவே என்னை 14 ஆண்டுகள் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரவைத்தது. ‘முடியாதது எதுவுமில்லை’ என்பார்கள் இருவரும். 100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்தவன் என்பதற்காக எனக்குக் கிடைத்த விருது என்னை அந்தப் பழக்கத்தை கடைசிவரைக்கும் செய்ய வைத்தது. நீங்கள் என்னைப் போன்றவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டியதும் இதற்கு காரணம். அது இன்றுவரை என் வாழ்வில் பயனளிக்கிறது.
- முன்னாள் மாணவன், அரவிந்த்ராஜ், பெங்களூரு