Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

டிங்குவிடம் கேளுங்கள்: ஆர்.ஓ. குடிநீர் நல்லதா?

ஆர்.ஓ. குடிநீர் நல்லதா, டிங்கு?

- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஓ. குடிநீரில் தாது உப்புகளோ நுண்கிருமிகளோ இருக்காது. இது குடிப்பதற்கு ஏற்ற நீராக இருக்கும். ஆனால், உடலுக்குத் தேவையான தாதுச் சத்துகள் கிடைக்காமல் போய்விடும். அதனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதேநேரம் நம் நாட்டில் பெரும்பாலான நீர்நிலைகளில் உள்ள நீர் குடிப்பதற்கு ஏற்றவாறு இல்லை என்கிறார்கள். நீர் மூலமே பெரும்பாலான நோய்கள் பரவுகின்றன. அப்படியென்றால் அந்த நீரைச் சுத்திகரித்துத்தான் குடிக்க முடியும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் குடிப்பவர்கள், நீரிலிருந்து கிடைக்காமல் போகும் சத்துகளை உணவின் மூலம் எடுத்துக்கொள்ளலாம், மஞ்சரி.

குடுகுடுப்பைக்காரர் இரவில் சொல்வதெல்லாம் பலிக்குமா, டிங்கு?

- வி. ஹேம வர்ஷினி, 11-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி,திருச்சி.

இந்தக் காலத்தில் குடுகுடுப்பைக் காரர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. குடுகுடுப்பைக்காரர்கள் சொல்வதெல்லாம் பலிக்கும் என்றால், மக்கள் அவர்களை நாடிச் சென்றிருப்பார்கள். குடுகுடுப்பைக்காரர்கள் எண்ணிக்கையில் பெருகியிருப்பார்கள். அந்தக் காலத்தில் இருந்த எத்தனையோ நம்பிக்கைகளில் குடுகுடுப்பைக்காரர்கள் குறி சொல்வது பலிக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை. ஒரு வீட்டில் இருப்பவர்களின் நல்லது, கெட்டதை முன்கூட்டியே கணித்துச் சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு எந்தவிதச் சிறப்புச் சக்தியும் இல்லை. அதனால், குடுகுடுப்பைக்காரர் சொல்வதைக் கேட்டு மகிழவோ பயப்படவோ வேண்டிய அவசியமில்லை, ஹேம வர்ஷினி.

வானவில் ஏன் அரைக்கோள வடிவிலேயே இருக்கிறது, டிங்கு?

- சா. எழில் யாழினி, 10-ம் வகுப்பு, புனித இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

வளிமண்டலத்தில் உள்ள நீர்த்துளிகளில் சூரிய ஒளி ஊடுருவும்போது, அது சிதறலடைகிறது. சிதறலடைந்த ஒளி, நீர்த்துளிகளின் பின்பக்கத்தில் எதிரொளிக்கும்போது வானவில் உருவாகிறது. வானவில் முழுக்கோள வடிவில்தான் உருவாகிறது. வளிமண்டலத்தின் மேற்பகுதியில் இருக்கும் அரைக்கோளமே நம் கண்களுக்குத் தெரிவதால், வானவில் அரைக்கோள வடிவில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறோம், எழில் யாழினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x