Published : 10 Jul 2021 03:13 AM
Last Updated : 10 Jul 2021 03:13 AM

பசுமை சிந்தனைகள்: பொதுச்சொத்தை மக்களுக்கு நிர்வகிக்கத் தெரியாதா?

நாராயணி சுப்ரமணியன்

“ஒரு மேய்ச்சல் நிலத்தில் ஊரில் உள்ள அனைவரும் ஆளுக்குப் பத்து மாடுகளை மேயவிட்டால் மட்டுமே அந்த நிலத்தின் பயனைத் தொடர்ந்து அறுவடை செய்ய முடியும். ஒவ்வொருவரும் சுயநலத்துடன் அதிக மாடுகளை மேயவிட்டால், காலப் போக்கில் அந்த நிலம் சீர்குலையும். அதற்குப் பிறகு யாருமே மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாத அளவு அந்தப் பொது நிலம் பாழாகும். அனைவருக்கும் நஷ்டம் ஏற்படும்”

- பொருளாதார நிபுணர் வில்லியம் ஃபாஸ்டர் லாய்டு 1833இல் உருவாக்கிய ஒரு கருதுகோள் இது. இதன் அடிப்படையில் 1968இல் ‘பொதுச் சொத்தின் துயரக் கதை’ (Tragedy of Commons) என்கிற கருத்தாக்கத்தைச் சூழலியலாளர் கேரெட் ஹார்டின் உருவாக்கினார். தனி ஒருவரால் உரிமை கோரப்படாத, அரசால் நிர்வகிக்கப்படாத பொது வளங்களின் மேலாண்மை இறுதியில் சீர்குலைவுக்கே வழிவகுக்கிறது என்கிறார் அவர். சுற்றுச்சூழல் மாசுபாடு, ஒரு குளத்தில் தேவைக்கு அதிகமாக மீன் பிடிப்பதால் மீன் தொகை குறைவது, மேய்ச்சல் நிலங்களின் சீர்குலைவு போன்றவற்றை உதாரணமாகக் காட்டி, பொதுச்சொத்து எப்போதும் சரியாகக் கையாளப்படுவதே இல்லை என்று ஹார்டின் வாதிட்டார்.

பக்கச்சார்பு கருத்தாக்கம்

காடு, கடல், குளங்கள், மேய்ச்சல் நிலங்கள், காற்று, நீர்வளம், புதை படிவ எரிபொருள்கள் போன்ற பொதுச்சொத்துகளின் பலன் தனி மனிதர்களைச் சென்றடைகிறது. அந்தப் பொதுச்சொத்துகள் சீரழியும்போது சம்பந்தப்பட்ட அனைவரும் பாதிக்கப்படு கிறார்கள். ஒரு பொதுச்சொத்து சரியாக மேலாண்மை செய்யப்பட வேண்டு மென்றால், அதைப் பயன்படுத்தும் அனைவரும் தன்னலமின்றி, பொது நலனைக் கருத்தில்கொண்டு அந்த வளத்தைப் பயன்படுத்த வேண்டும். மனிதர்கள் அப்படி நினைப்பதில்லை என்பதால் இறுதியில் அந்த அமைப்பு சிதைந்து, அனைவரும் வளங்களை இழக்க நேரிடுகிறது என்று ஹார்டின் தெரிவித்தார்.

இந்தச் சீர்குலைவுக்கு இரண்டு தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன: பொதுச்சொத்து தனி மனிதர்களின் உடைமைகளாக/சொத்துக்களாக மாற வேண்டும், அரசாங்கம் இதுபோன்ற பொதுச்சொத்தின் பயன்பாட்டை நேரடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

யாருக்கு ஆதரவு?

ஹார்டினின் கருத்தாக்கம் எல்லா மனிதர்களும் சுயநலமாக மட்டுமே சிந்திப்பார்கள் என்று பொதுமைப்படுத்து கிறது. மறைமுகமாக, வளங்களை உடைமையாக்கிக்கொள்ளவும் (Private ownership of resources) இது வழிவகுக்கிறது. இனக்குழுக்கள் சரியாக மேலாண்மை செய்துகொண்டிருந்த நிலப்பரப்புகளில் பேராசையுடன் வந்தி றங்கிய காலனியவாதிகள் ஏற்படுத்திய சூழலியல் சீர்கேடுகளுக்குப் பல வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

பொதுச்சொத்தைப் பொறுத்தவரை வளம், அதைச் சார்ந்து வாழும் மக்கள், மேலாண்மைத் திட்டம் என்று மூன்று அடுக்குகள் உண்டு. மேலாண்மை என்கிற அடுக்கையே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஹார்டினின் கருத்தாக்கம் ஒரு கணிப்பை முன்வைக்கிறது. ஹார்டினின் கருத்தாக்கம் வரலாற்றுரீதியாகத் தவறு என்று பல ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை, பொதுச்சொத்து வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்குவதால், அவற்றைச் சரியான முறையில் நிர்வகிப்பது இனக்குழு மரபின் ஓர் அங்கமாகவே இருந்துவருகிறது. குறைந்த நீர்வளத்தை அனைவருக்குமான பாசனமாக மாற்றித்தரும் கொலராடோ வின் அசீக்வியா திட்டம் நூறாண்டுகள் பழைமை யானது. அது இன்றும் வெற்றிகரமாக இயங்குகிறது. பல மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளின் எண்ணிக்கை குறித்த ஊர்க் கட்டுப்பாடுகள் உண்டு. கோயில் காடுகள், மேய்ச்சல் நிலங்கள், சமூகக் காடுகள், ஊர்க் குளங்கள் போன்ற பல இந்தியப் பொதுச்சொத்துகள் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன.

மீனவர்களின் புரிதல்

கடல் என்கிற பொதுச்சொத்தில் கிடைக்கும் மீன்வளத்தை நம்பியே சிறு-குறு மீனவர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. இந்தியாவில் பிரம்மாண்ட விசைப்படகுகளும் இழுவலைகளும் புழக்கத்துக்கு வந்தபோது, மீன்குஞ்சு களையும் இனப்பெருக்க வயதில் இருக்கும் மீன்களையும் அவை அழித்துவிடுகின்றன என்பதை மீனவர்கள் உணர்ந்து கொண்டார்கள். 1980களில் கேரளத்தில் சிறு/குறு மீனவர்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்போது நடைமுறையில் உள்ள மீன்பிடித் தடைக்காலம் அந்தப் போராட்டத்தால் விளைந்ததுதான். பல கடலோர கிராமங்களில் சூழலியலுக்கு ஆபத்தான வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை முதிய மீனவர்கள் ஏற்படுத்தியிருக்கி றார்கள். அவை தொடர்ந்து பின்பற்றப் படுகின்றன. பொதுச்சொத்தின் மீது மரபுசார் இனக்குழுக்களுக்கு உள்ள அக்கறையை இந்நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.

நிர்வகிக்க விதிமுறைகள்

பொதுச்சொத்தை மக்கள் பெரும்பாலும் வெற்றிகர மாகவே மேலாண்மை செய்கிறார்கள் என்கிறார் பொருளாதார நோபல் பரிசு பெற்ற எலினார் ஆஸ்ட்ரம். பொதுச்சொத்தை மேலாண்மை செய்வது எப்படி என்று களப்பணி மூலம் ஆய்வுசெய்து பல கருதுகோள்களை முன்வைத்ததற்காகவே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. வெற்றிகரமான பொதுச்சொத்து மேலாண்மை (Triumph of the commons) எட்டப்பட எட்டு அடிப்படை விதிகளை அவர் வலியுறுத்துகிறார்:

# பொதுச்சொத்தின் எல்லைகள் புவியியல்ரீதியாக வரையறுக்கப்பட வேண்டும்.

# பொதுச்சொத்து மேலாண்மை விதிகள் அந்தந்த ஊர்களின் தேவைக்கும் சூழலியலுக்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும்.

# மேலாண்மை விதிகளை உரு வாக்குவதில் பயனாளிகள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.

# வெளியில் இருப்பவர்களும் அதிகாரிகளும் இந்த விதிகளை உரு வாக்குவதற்கான மக்களின் உரிமை களை மதித்து, புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

# விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணிக்கவும் திட்டங்கள் வகுக்க வேண்டும்.

# விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் போன்ற சிறு தண்டனைகள் விதிக்கலாம்.

# சிறு பூசல்கள் ஏற்படும்பட்சத்தில் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறை கள் குறைந்த செலவில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

# இதை ஒரு பொதுக் கடமையாக முன்னிறுத்தி, அந்த மனநிலையை அனைவர் மனத்திலும் பதியவைக்க வேண்டும்.

அதிகார மையத்தின் விதிகளும் கண்காணிப்புகளும் இன்றியே பொது வளத்தை மனிதர்களால் மேலாண்மை செய்ய முடியும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. “சாதாரண மனிதர்களுக்கு எதையும் சுயமாக நிர்வகிக்கத் தெரியாது”என்பது போன்ற கருத்தாக்கங்கள் சுரண்டலுக்கு வழிவகுக்கக் கூடியவை. காலநிலை மாற்றம், கடலடித் தனிமங்களை எடுப்பதற்கான திட்டங்கள், அழிந்துவரும் மீன்வளம், காட்டுப் பாதுகாப்பு, தொல்குடிகளின் வாழ்வாதார அழிப்பு போன்ற பல சூழலியல் பிரச்சினைகள் பேசுபொருளாகிவரும் இந்தக் காலகட்டத்தில், கேரெட் ஹார்டின் போன்றோர் முன்வைக்கும் கருத்தாக்கங்களின் ஆபத்து இன்னும் தெளிவாகியுள்ளது.

கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: nans.mythila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x