Published : 08 Jul 2021 03:12 am

Updated : 08 Jul 2021 10:27 am

 

Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 10:27 AM

அகத்தைத் தேடி 59: தோட்டக்காரராக இருங்கள்

agathai-thedi

சீரடி சாய்பாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், பகவான் ரமணர் போன்ற மகான்களின் வரிசையில் வைத்து ஆனந்தமயி அம்மா போற்றப்படுகிறார். நாத்திகரான ஜவாஹர்லால் நேரு ஆனந்தமயி அம்மாவின் முன்வந்து பேச்சற்று அமர்ந்துவிட்டுத் திரும்புவார். மகாத்மா காந்தி, நேதாஜி ஆகியோரும் ஆனந்தமயி அம்மாவை சந்தித்துள்ளனர். அரவிந்தர், அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு “இது சச்சிதானந்த சொரூபம்” என்றார். தமது பெண் சீடர்கள் புடைசூழ அவர் வீற்றிருக்கும் காட்சி பிரம்மானந்த நிலையின் சன்னதம் கொண்டிருக்கக் காணலாம்.

சத்திய மனோபாவம்


ஆனந்தமயி அம்மா, கிழக்கு வங்காளத்தில் கேயோரா என்ற குக்கிராமத்தில் 1896-ம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நிர்மலா சுந்தரி தேவி. எளிய மூங்கில் வீடுகளில் நிறைவாக இருந்த வாழ்க்கை அது. ஆனந்தமயி அம்மாவின் வீட்டில் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து பஜனை பாடல்களைப் பாடுவது வழக்கம். பஜனையின்போது பெரும் புயற்காற்று வீசிவீட்டுக் கூரையைப் பிரித்தெறியும். ஆனாலும் பஜனை தொடர்ந்தது.

அதுபோலவே ஆனந்தமயியின் தாயார், அமைதியாக வீட்டு வேலைகளில் மூழ்கியிருந்தால் கடவுளைக் காணலாம் என்று மகளிடம் கூறியிருக்கிறார். நிர்மலா சுந்தரி தேவி என்ற பெயருக்கு ஏற்ப பேரழகுடன் காட்சி அளித்தார் ஆனந்தமயி. அது சாதாரண அழகன்று; தானே தனக்குள் மூழ்கி லயித்ததில் எழுந்த எழில்.

பதின்மூன்று வயதிலேயே ஆனந்தமயிக்குத் திருமணமாகி விட்டது. ஆயினும் அடிக்கடி தியானத்தில் அமர்ந்துவிடுவார். புத்தகங்கள் வாசிக்காமல், உபதேசம் ஏதும் பெறாமல் இறைநிலை நோக்கிய பயணத்தில் அச்சிறிய பறவை சிறகு விரித்து பறக்க ஆயத்தமாகிவிட்டது. அவரது கம்பீரமான தெய்விகத் தோற்றத்தில் கணவரும் அவர் வீட்டாரும் கட்டுண்டுக் கைகூப்பினர். ஊதுவத்தி மணத்தைப் போல ஆனந்தமயியின் அருள்மணத்தைத் தேடி வரும் மக்கள் பெருகினார்கள்.

1929-ம் ஆண்டு தாகாவில் அம்மாவின் பெயரில் முதல் ஆசிரமம் உருவானது. ஏழைகள், செல்வந்தர்கள், இளைஞர்கள், முதியோர், பிற மதத்தவர் என்ற பாகுபாடின்றி அம்மாவின் அருட்பார்வையில் கரையவும் தங்கள் கவலைகளைக் கரைக்கவும் திரண்டனர்.

சூபி ஞானியால் பரிந்துரைக்கப்பட்டார்

அவரது தாயன்பு மதங்களைக் கடந்து அனைவரையும் ஆட்கொண்டது. தலாத்துல் உசேன் என்ற டேராடூனில் பணிபுரிந்த உயர் அதிகாரி மெக்கா சென்றபோது அவர் சந்தித்த சூஃபி ஞானி ‘நீ இந்தியா திரும்பியதும் ஒரு இந்து அம்மையார் உனக்கு ஆன்மிகக் குருவாவார்’ என்று சொன்னார். அவ்வாறே நடந்தது. டேராடூனில் இருந்த ஆனந்தமயி அவரது ஞான குருவானார்.

அவரது தென்னிந்தியப் பயணம் பற்றி விசேஷமாகக் குறிப்பிட வேண்டும். 1952-ல் அம்மா தென்னிந்தியா வந்தபோது, திருவண்ணாமலையில் உள்ள பகவான் ரமணரின் மகாசமாதி மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

ரோஜா மொழி

ஆனந்த மயி அம்மா, புதுவை அன்னையைச் சந்தித்த நிகழ்வு முக்கியமானது. அரவிந்த ஆசிரம அறையில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

புதுவை அன்னை அம்மாவைப் பார்த்தபடியே நீண்ட நேரம் நின்றார். பின் ரோஜா, அல்லி ஆகிய இரு மலர்களுடன் இரண்டு சாக்லெட்டுகளை அம்மாவிடம் நீட்டினார். அம்மா பதிலுக்கு ஒரு ரோஜாவையும் ஒரு சாக்லெட்டையும் அன்னையிடம் நீட்டினார்.

புதுவை அன்னை சாக்லெட்டைத் தன்னிடம் வைத்துக்கொண்டு ரோஜாவை மீண்டும் கொடுத்தார். மலர்கள் மற்றும் சாக்லெட்களின் பரிமாற்றம் மூன்று முறை நடந்தது. பிறகு புதுவை அன்னை ரோஜாவின் ஒரு பகுதியை பிய்த்து மீதமிருந்த ரோஜாவை அம்மாவிடம் திரும்பக் கொடுத்தார்.

அவ்வளவுதான்; முடிந்தது உரையாடல். நுட்பமான இருவர் மட்டுமே அறிந்த அந்த ஆன்மிக பாஷைப் பரிமாற்றம் இவ்விதம் நிறைவுற்றது.

திருவனந்தபுரத்தில் ஸ்வாமி ராம்தாசை சந்திக்க சென்றபோது ராம்தாஸ் “ராம ஜய, ராமஜய, ஜய ஜய ராம” என்று பாடியபடியே சீடர்களுடன் வந்துகொண்டிருந்தார். இருவரும் முன்பின் சந்தித்தது இல்லை. சுவாமி ராம்தாஸ் அன்னையின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, நீ நன்றாக இருக்கிறாயா? உனக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன். என்னை மனத்தில் வைத்துக் கொள். மறந்து விடாதே என்றார் சிரித்தபடி.

வாழ்க்கை எனும் தோட்டத்தில் நாம் மகிழ்ச்சியற்றவராக உணர்கிறோம். ஏனென்றால் நாம் தோட்டத்தின் உரிமையாளராக இருக்கிறோம். அதற்குப் பதிலாக தோட்டக்காரராக இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்; மகிழ்ச்சியாக இருக்கலாம். கடவுள் மட்டுமே உரிமையாளர். நாம் அனைவரும் தோட்டக்காரர்களே என்றார் ஆனந்தமயி அம்மா.

1982-ல் ஆனந்தமயி தன் உடலைத் துறந்தார். ஆனந்தமயி அம்மாவின் மறைவுச் செய்தியைக் கேள்வியுற்று பிரதமர் இந்திரா காந்தி தனது மொரீஷியஸ் சுற்றுப்பயணத்தை பாதியில் கைவிட்டு அம்மாவின் திருவுடலை ஹரித்வார் வந்து தரிசித்தார்.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com
அகத்தைத் தேடிதோட்டக்காரர்சீரடி சாய்பாபாராமகிருஷ்ண பரமஹம்சர்பகவான் ரமணர்மகான்கள்ஆனந்தமயி அம்மாஜவாஹர்லால் நேருமகாத்மா காந்திநேதாஜிசூபி ஞானிரோஜா மொழி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x