Last Updated : 07 Jul, 2021 12:10 PM

 

Published : 07 Jul 2021 12:10 PM
Last Updated : 07 Jul 2021 12:10 PM

மீண்டும் உயிர் பெறுமா ‘உழவன் உணவகம்’?

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் வார இதழின் தொடர் ஒன்றில் அண்மையில் எழுதிய ‘வரகும் தினையும்’ என்கிற கட்டுரையில் அருந்தானியங்கள் குறித்துப் பல தகவல்களை ஆவணப்படுத்தி இருந்தார். இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க 2023ஆம் ஆண்டை அருந்தானிய ஆண்டாக ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக் கொண்டுள்ள செய்தியையும் மகிழ்வுடன் பகிர்ந்திருந்தார். அதில் ஒடிசாவின் பங்களிப்பு குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.

ஒடிசாவில் அவர் பணியாற்றியபோது, அருந்தானியங்களின் மறுமலர்ச்சிக்கு ஆற்றிய அளப்பரிய செய்திகளையும் ‘ஒடிசா மில்லட் மிஷன்’ பற்றிய அரசுத் திட்டத்தின் செயல்பாடுகளையும் தெரிவித்திருந்தார். ‘நிதி ஆயோக்’ இந்த மில்லட் மிஷன் இயக்கச் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளது.

உழவன் உணவகம்

தமிழ்நாட்டிலும் இதுபோன்ற முன்னெடுப்புகள் நடந்துள்ளன. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சீரிய சிந்தனையில் உருவாகிய ‘உழவர் சந்தை’ பற்றி நாம் அறிவோம். ஆனால், ‘உழவன் உணவகம்’ பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

விவசாயிகள் உற்பத்தி செய்த அருந்தானியங்களை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி நேரடியாக அவர்களே அருந்தானிய உணவு வகைகளாக நுகர்வோருக்கு நேரடியாக அளிக்கும் திட்டம்தான் ‘உழவன் உணவகம்’. உழவர் சந்தையின் தாக்கத்தால் 2009இல் நாமக்கல்லில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் சகாயத்தின் சிந்தனையால் முதல் ‘உழவன் உணவகம்’ தொடங்கப்பட்டது.

விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருளாக மாற்றி நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவது ஒருபுறம், பொதுமக்களிடையே அருந்தானியப் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம் அவர்களின் உடல் நலத்தினை மேம்படுத்துவது இன்னொரு புறம். இதுதான் உழவன் உணவகத்தின் சிறப்பு.

சகாயம் மதுரைக்கு மாறுதலானதுமே மதுரை நாராயணபுரத்தில் ‘உழவன் உணவகம்’ தொடங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தில் தொடங்கப்பட்ட உழவன் உணவகத்தைப் போவோர் வருவோர் முதலில் ஏதோ அரசு அலுவலகம் என்றுதான் நினைத்தார்கள். பெரிய ஹோட்டலைப் போன்ற தோற்றமில்லாததால் உள்ளே வரத் தயங்கினார்கள். ஆனால், பத்திரிக்கைகள் தொடர்ந்து உழவன் உணவகத்தைப் பாராட்டிச் செய்தி வெளியிட்ட காரணத்தால் பார்த்த, கேள்விப்பட்ட மக்கள் மதுரையின் பல பகுதியிலிருந்தும் குடும்பம் குடும்பமாக வரத் தொடங்கினார்கள்.

அருந்தானியத்தில் பிரியாணியா?

அரிசியிலேயே இட்லியையும் பொங்கலையும் சாப்பிட்டவர்களுக்கு வரகரிசி இட்லியும், சாமைப் பொங்கலும் வித்தியாசமாய்த் தெரிந்தன. பொன்னாங்கண்ணி, முள் முருங்கை, முடக்கத்தான் தோசை வகைகள், வரகரிசிப் பணியாரம் என அருந்தானிய உணவுப் பொருட்களை மக்கள் ஒரு கை பார்த்தார்கள். குதிரைவாலியில் பிரியாணியா என்று வியப்புடன் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள். தினைப் பாயசத்தின் சுவை சாப்பிட்டவர்களுக்குத்தான் தெரியும். அரிசி, கோதுமை தவிர வேறு ஏதும் பார்த்திராத பலரும் வரகு, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட இதர அருந்தானியங்களையும் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காக விவசாயிகளிடம் கொண்டுவரச் சொல்லிக் கண்ணாரப் பார்த்தார்கள். சோள தோசை, சோள லட்டு, அருந்தானிய கொழுக்கட்டை, புட்டு, ராகிக் கஞ்சி, தினை லட்டு என வித்தியாசமான சுவை மிகுந்த உணவுப் பொருட்களை ருசித்தனர்.

தினை, சாமை, வரகு ஆகியவற்றில் பிஸ்கட், வரகில் அதிரசம், தினையில் சேவு, சீவல், வரகில் முறுக்கு என்று விதம் விதமான நொறுக்குத்தீனி வகைகளை மக்கள் ஆவலுடன் வாங்கிச் சென்றார்கள். உழவன் உணவகத்தில் கிராமிய பாரம்பரிய சூழலில் அமைந்த கலைநயமிக்க குடில்கள், கயிற்றுக் கட்டில், மாட்டு வண்டி போன்றவற்றைக் குழந்தைகளும் பெரியவர்களும் பார்த்து வியந்தார்கள். ஒரு சமயத்தில் இன்று உணவு தீர்ந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருந்தது. இன்று பலரும் அருந்தானியங்கள் பற்றிப் பேசி வருகிறார்கள். பலரும் பல இடங்களில் அருந்தானிய உணவகம் நடத்தி வருகிறார்கள். அதற்கெல்லாம் தூண்டுகோலாய் இருந்தது இந்த உழவன் உணவகமே.

மதிய உணவுத் திட்டத்தில் அருந்தானியம்

ஒடிசாவில் மதிய உணவுத் திட்டத்தில் கேழ்வரகு சேர்க்கப்பட்டுள்ளதாக பாலகிருஷ்ணன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் மதிய உணவுத் திட்டத்தில் அருந்தானியங்களைச் சேர்ப்பது குறித்தும், மாவட்ட அளவில் சிறிய அளவில் செயல்பட்ட உழவன் உணவகம், Millet cafe போன்ற உணவகங்களை மாநிலம் முழுவதும் அரசே தொடங்கி பொதுமக்களிடையே அருந்தானியப் பயன்பாட்டினை அதிகரித்து அவர்களின் உடல்நலத்தை உயர்த்துவது குறித்தும் தமிழக முதல்வர் பரிசீலிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலம் சார்ந்த இத்திட்டத்தைச் சிறப்பாக வடிவமைத்துச் செயல்படுத்துவதன் மூலம் பிற மாநிலங்களுக்கும் நம்மால் வழிகாட்ட முடியும்.

கட்டுரையாளர்: மு. வீராசாமி,

மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்.
தொடர்புக்கு: veera.opt@gmail.com.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x