Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM

புதிய கண்டுபிடிப்புகள்: தேனீக்கள் வெப்பத்தை எப்படிக் குறைக்கின்றன?

நாங்களே முகக்கவசம் இல்லாமல் பூந்தேன் சேகரிக்கப் போவதில்லை!

கோடைக் காலத்தில் போதிய காற்றோட்டம் இல்லாத சிறிய அறையில், பலரும் நெருக்கியடித்து உட்கார்ந்திருந்தால் எப்படி இருக்கும்? வெக்கையாலும் வியர்வையாலும் களைத்துப்போய்விடுவோம். உடனே மின்விசிறி அல்லது குளிர்சாதனக் கருவியை இயக்கி, வெப்பத்தைத் தணித்துக்கொள்ள நினைப்போம்.

அதே மாதிரிதான் இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் தேனீக்கள் வரை வாழும் சிறிய கூட்டில் வெப்பம் கூடுதலாகவே இருக்கும். அண்மையில் ‘ஏபிஸ் மெல்லிஃபெரா’ என்கிற ஐரோப்பியத் தேனீக்களின் கூட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், தேனீ வெப்பத்தை எப்படித் தணிக்கிறது என்பது தெளிவாகியுள்ளது.

பேராசிரியர் எல். மகாதேவன் வழிகாட்டுதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், செயற்கைத் தேன்கூடுகளை உருவாக்கி, ஆய்வுசெய்து இதன் பின்னணியில் உள்ள அறிவியலைக் கண்டறிந்துள்ளனர்.

குறுகிய கூட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான தேனீக்கள் வாழும்போது, கூட்டுக்குள் இருக்கும் வெப்பத்துடன் தேனீக்களின் உடலிலிருந்து வெளிப்படும் வெப்பமும் சேர்ந்துவிடுகிறது. இப்படி உயரும் வெப்பநிலையைக் குறைப்பதற்குத் தேனீக்கள் பெரு முயற்சி எடுக்கின்றன. தேனீக்கள் வெளியிடும் மூச்சுக்காற்றில் கார்பன்-டை-ஆக்சைடு செறிவு கூடாமல் வெளிக்காற்றைக் கலந்து, காற்றைப் புதுப்பிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

20 முதல் 40 ஆயிரம் தேனீக்கள் கொண்ட செயற்கைத் தேன்கூடுகளை உருவாக்கி ஆய்வு செய்தனர். செவ்வக வடிவில் நுழைவாயிலை அமைத்து, 15 பகுதிகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் காற்றை வீசும் தேனீக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டனர். காலை முதல் இரவு வரை பல முறை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. பல நாட்கள் தரவுகளைச் சேகரித்தனர். நுழைவாயிலின் எந்தப் பகுதியில் காற்று செல்கிறது, எந்தப் பகுதியில் காற்று வெளியேறுகிறது என்று கவனித்தனர். கூட்டின் வெப்பநிலையை அறிய கருவிகளைப் பொருத்தி ஆய்வு செய்தனர்.

நாம் வெப்பம் அதிகமான நாட்களில் விசிறியை அசைத்துக் காற்றைப் பெறுவதுபோல, கூட்டின் வாயிலில் தேனீக்கள் தமது இறக்கைகளை அசைத்து, காற்றை உருவாக்குகின்றன. இந்தப் புதிய காற்று கூட்டுக்குள் சென்று, அங்கிருக்கும் கார்பன் டைஆக்சைடு காற்று வெளியேறுகிறது. இப்படிக் காற்று வெளியேறும்போது கூட்டின் வெப்பமும் வெளியேறிவிடுகிறது.

நண்பகலிலும் வெப்பம் அதிகமிருந்த நாட்களிலும் கூடுதல் தேனீக்கள் விசிறும் பணியில் ஈடுபட்டன. காலையில் கிழக்குப் பகுதியிலும் மாலையில் மேற்குப் பகுதியிலும் தேனீக்கள் குவிந்து விசிறின. காற்றை விசிறுவதும் ஓய்வெடுப்பதுமாக இருந்தன.

ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நீர் வேகமாக வெளிறும் குழாயின் அடியில் சிறிய வாய் உடைய குடுவையை வைத்தால் அதன் உள்ளே நீர் செல்வது எளிதல்ல. நீர் பாயும் வேகத்தைக் குறைத்தல் மட்டுமே குடுவையின் உள்ளே நீர் செல்லும். பேருந்தில் காற்று வேகமாக வீசும் திசையில் முகம் இருக்கும்போது மூச்சு முட்டும். முகத்தில் காற்று நேரடியாக வேகமாகப் பாயும்போது, மூக்கு துவாரத்துக்குள் செல்ல முடியாது. எனவே சுவாசிக்கக் கடினமாக இருக்கும். அதே மாதிரி கூட்டின் வாயிலில் கூடி நின்று தேனீக்கள் இறகை அசைத்தல் காற்று அடைத்துக்கொள்ளும். கூட்டின் உள்ளே உள்ள கார்பன் டை ஆக்ஸைடு செறிவான வெப்பக் காற்றை வெளியேற்றி, புதிய காற்றை உள்ளே செலுத்த முடியாது.

இந்தச் சவாலைச் சமாளிக்க இரண்டு உத்திகளைத் தேனீக்கள் கடைபிடிக்கின்றன. சிறிய வாயில் உடைய தேன்கூட்டில் விசிறி போலச் சிறிது நேரம் இடைவெளி விட்டு இறகை அசைக்கின்றன. இறகை அசைக்கும்போது வெளி நோக்கியும் இடைவெளி விடும்போது காற்று உள் நோக்கியும் செல்கிறது. பெரிய வாயிலைக் கொண்ட தேன்கூட்டில் வாயிலின் ஒரு பகுதியில் மட்டுமே தேனீக்கள் கூடி இறகை அசைக்கின்றன. எனவே, இறகு அசைக்கும் நுழைவாயில் பகுதி வழியே உள்காற்று வெளியேறுகிறது. நுழைவாயிலின் மறுபுறம் வெளிக்காற்று உள்ளே செல்கிறது.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x