Last Updated : 03 Jul, 2021 03:12 AM

 

Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM

வைட்டமின் பற்றாக்குறை எனும் கரோனா கால ஆபத்து

முதலில், இரண்டு கள அனுபவங்களைப் பார்ப்போம். ஒன்பதாம் வகுப்பு மாணவி உமா, விளையாட்டு வீராங்கனை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விளையாட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறாள். அண்மையில் குளியலறையில் லேசாக வழுக்கிவிழுந்தாள். கணுக்காலில் வீக்கத்துடன் என்னிடம் வந்தாள். எக்ஸ்-ரே படத்தில் எதிர்பாராத அளவுக்கு எலும்பு முறிவு இருந்ததைக் கண்டு அதிர்ந்துபோனேன். சந்தேகத்தில் வைட்டமின்-டி அளவைப் பரிசோதிக்கச் சொன்னேன். அவளுக்கு வைட்டமின்-டி மிகவும் குறைவாக இருந்தது. பொதுவாக, வைட்டமின்-டி குறைவாக இருப்பவர்கள் சிறு விபத்தில் சிக்கினாலும் பெரிய அளவில் எலும்புகள் பாதிக்கப்படுவது உண்டு.

செந்தில், சுமைதூக்கும் தொழி லாளி. அண்மையில் அவருக்கு கரோனா தொற்றியது. வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டார். குணமாகி ஒரு மாதம் ஆன பிறகும், அவருக்கு உடல் சோர்வு குறைந்தபாடில்லை. பல மருந்துகள் சாப்பிட்டும் பலனில்லை. செந்திலுக்கும் வைட்டமின்-டி அளவைப் பரிசோதிக்கச் சொன்னேன். அவருக்கும் வைட்டமின்-டி குறைவாக இருந்தது. வைட்டமின்-டி குறைவாக இருப்பவர்களுக்கு உடல் சோர்வு முக்கியமான அறிகுறி. வைட்டமின்-டி மாத்திரைகளை நான் பரிந்துரைத்துச் சாப்பிடச்சொன்னதும், செந்திலின் உடல் சோர்வு குறையத் தொடங்கியது.

இந்த இரண்டு அனுபவங்கள் ஒரு சோறு பதம்தான். இந்தியாவில் பத்தில் ஏழுபேருக்கு வைட்டமின்-டி பற்றாக்குறை இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. விளையாட்டு வீராங்கனையான உமாவுக்கும் வெயிலில் சுமைதூக்கும் செந்திலுக்கும் இந்த வைட்டமின் தேவைக்கு ஏற்ற அளவு இருந்திருக்க வேண்டும். இவர் களுக்கே வைட்டமின்-டி குறைகிறது என்றால் பொதுமுடக்கக் காலத்தில் மற்றவர்களுக்கும் இந்த நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

வெயிலில் கிடைக்கும் வைட்டமின்!

வைட்டமின்களில் இலவசமாகக் கிடைப்பது வைட்டமின்–டி3. அதன் வேதிப்பெயர் ‘கொலிகால்சிஃபெரால்’ (Colicalciferal). சூரிய ஒளியில் உள்ள பி வகை புறஊதாக் கதிர்கள் நம் சருமத்துக்கு அடியில் கொழுப்பு செல்களில் உள்ள ‘எர்கோஸ்டீரால்’ (Ergosterol) எனும் கொழுப்புடன் வினை புரியும்போது, ‘கொலிகால்சிஃபெரால்’ உற்பத்தியாகிறது.

அவசியம் என்ன?

எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலுவுக்கும் கால்சியமும் பாஸ்பரஸும் தேவை. நமது உணவிலிருந்து இவற்றை வைட்டமின்–டிதான் உறிஞ்சியெடுத்துக் கொடுக்க வேண்டும். இதன் தேவை எலும்புகளோடு நிற்கவில்லை. இதயம், சிறுகுடல், சிறுநீரகம், கணையம், மூளை - நரம்புகள் என முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் இது தேவைப்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்திக்கு இது மிக அவசியம். ரத்தத்தில் வைட்டமின்–டி3யின் அளவு 30ng/mLக்குக் குறையக் கூடாது. குறைந்தால், வைட்டமின்–டி பற்றாக்குறை என்று பொருள்.

வைட்டமின்-டி குறைந்தால்?

வைட்டமின்–டி பற்றாக்குறை ஏற்பட்ட ஒருவருக்குக் கை, கால் குடைச்சலும் உடல் சோர்வும் படுத்தியெடுக்கும். எலும்பு வலி, மூட்டுவலி, தசைவலி, உடல் வலுவிழப்பு போன்றவை தொல்லை தரும். ரிக்கெட்ஸ், எலும்பு வலுவிழப்பு நோய், எலும்பு முறிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு, புற்றுநோய், அச்சம், பதற்றம், மனச்சோர்வு, நரம்புக் கோளாறுகள் என எந்த நோயும் ஏற்படலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கரோனா காலத்தில் குறைந்தது ஏன்?

முன்பெல்லாம் முதியோருக்கும் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கும்தான் வைட்டமின்-டி குறைவாக இருக்கும். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பெண் குழந்தைகள், நடுத்தர வயதினர், முதியோர், உடற்பருமன் உள்ளவர்கள், விடுதிகளிலும் காப்பகங்களிலும் இருப்ப வர்கள் என அநேகருக்கும் வைட்டமின்-டி பற்றாக்குறை அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

வெயிலே நுழையாத மாடி வீடுகளிலும் குளிரூட்டப்பட்ட அறைகளிலும் முடங்கிக் கிடக்கும் இன்றைய வாழ்க்கைமுறை இதற்கு முக்கியக் காரணம். கரோனா தொற்றாளர்கள் பலரும் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் அடுத்த காரணம். பொதுமுடக்கம் அறிவிக்கப் பட்டதும் பலருக்கும் வீட்டிலேயே வேலை என்றாகிவிட்டது. நடைப்பயிற்சிக்குக்கூட வெளியில் செல்ல முடியவில்லை. இதனால், உடலில் வெயில் படும் வாய்ப்பு குறைந்துவிட்டது. நகர்ப்புறங்களில் வெளிவேலைகள் குறைந்துபோனதால், நடுத்தரச் சமூகத்தினருக்கும் நடுத்தர வயதினருக்கும் உடலில் வெயில் படும் நேரம் குறைந்துவிட்டது.

இன்றைய இளைய தலைமுறையினர் கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவையும் சக்கை உணவையும் அதிகமாக உண்பதால், உடற்பருமன் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். இவர்கள் ஒரு மணி நேரம் வெயிலில் நின்றால்கூடத் தேவையான வைட்டமின்–டியைப் பெறுவதற்கு உடற்பருமன் இடையூறாக இருக்கிறது. அதேவேளையில், விளிம்புநிலை குழந்தைகளுக்கும் அரசுப் பள்ளிகள்,விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் சத்துள்ள உணவு கிடைக்காத காரணமும் உண்டு.

இன்றைய குழந்தைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளிப்புறச் செயல்பாடுகள் குறைந்து, விளை யாட்டும் உடற்பயிற்சியும் இல்லாத வாழ்க்கைச்சூழலில் வளர்கின்றனர். அலைபேசிப் பயன்பாடு அதிகரித் துள்ளதால், இரவில் தாமதமாக உறங்கச் செல்கின்றனர். காலையில் தாமதமாகக் கண் விழிக்கின்றனர். பகலில் ‘இணையவழி’ வகுப்புகளைக் கவனிக்கின்றனர். இந்தக் காரணங்களால், பகலில் விளையாட்டுத் திடல்களில் அவர்கள் விளையாடுவது குறைந்துபோனது. அவர்கள் உடலில் வெயில் படுவதும் குறைந்துவிட்டது.

பெற்றோர் கவனத்துக்கு…

தற்போது தமிழ்நாட்டில் பொது முடக்கத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து விரைவிலேயே பள்ளிகளும் திறக்கப்படலாம். அப்போது குழந்தைகள் பள்ளிகளிலும் திறந்தவெளிகளிலும் ஆர்வத்துடன் விளையாட ஆரம்பிப்பார்கள். அந்த நேரத்தில் வைட்டமின்-டி பற்றாக்குறை உள்ள குழந்தைகளுக்குச் சிறிய விபத்துகள்கூட எலும்பு முறிவை ஏற்படுத்திவிடலாம். எனவே, பெற்றோர் இப்போதிலிருந்தே போதுமான அளவுக்கு வைட்டமின்-டி குழந்தைகளுக்குக் கிடைக்க ஏற்பாடுசெய்வது நல்லது.

மேலும், கரோனாவின் அடுத்த அலை குழந்தைகளையே அதிகமாகத் தாக்கும் என்கிற கணிப்பும் உள்ளது. வைட்டமின்-டி சரியான அளவில் இருக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும் சரியாக இருக்கும். அப்போது அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுவதும் தடுக்கப்படும்.

என்ன செய்யலாம்?

வைட்டமின்–டி நம் தேவைக்குக் கிடைக்க தினமும் அரை மணி நேரம் வெயிலில் நின்றால் போதும். குழந்தைகளைக் காலையில் நேரத்தோடு எழுப்பி, வீட்டுமாடிகளுக்குப் பெற்றோர் அழைத்துச் செல்லலாம். பெற்றோர் நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது, குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்லலாம். அப்போது எதிரில் வருவோருடன் பேசுவதாக இருந்தால், முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். வெளியே செல்ல இயலாதவர்கள் பகலில் 11 மணி முதல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் வீட்டு பால்கனியில் ஒரு மணி நேரம் இருந்தால்கூடப் போதும்.

வெயிலில் நின்று வைட்டமின்-டி பெற வழி இல்லையென்றால், காளான், பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, மீன், மீன் எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, ஈரல், ஆரஞ்சுச்சாறு ஆகியவற்றை உட்கொள்ளலாம். உடல்வலி தொடர்ந்துவந்தால் சுயமாக வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடா தீர்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின்-டி மாத்திரையைச் சாப்பிடுங்கள், பலன் கிடைக்கும்.

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x