Published : 26 Feb 2016 11:31 AM
Last Updated : 26 Feb 2016 11:31 AM

ஆஸ்கர் அலர்ஜிகள் 10

மனமகிழ் மன்றங்களால் தரப்படும் தகர டப்பா விருதுகளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடிவிடலாம். ஆனால் ‘தொல்லைக்காட்சி ’ விருதுகளில் தொடங்கி ஆனானப்பட்ட ஆஸ்கர் வரை கவனத்தைக் கவரும் விருதுகள் என்றால் முடிந்தது கதை! விருது கொடுக்கும் நிறுவனம், விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள், பெற்றவர்கள் என்று ஆயிரத்தெட்டு விமர்சனங்களால் வறுத்தெடுப்பார்கள்.

விலையில்லாப் பொருளாக வில்லங்க சர்ச்சைகள் வரிசை கட்டும். இதற்கு நாளை மறுநாள் நடக்க இருக்கும் 88-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவும் விதிவிலக்கு அல்ல. இந்தச் சின்ன இடைவெளியில் ஆஸ்கருக்கு அலர்ஜியான(?) பத்து அம்சங்களை யார் மனசும் நோகாமல் பட்டியலிடலாம் வாருங்கள்.

# ஆஸ்கர் விருதுகளில் இந்த ஆண்டும் ‘நிற அரசியல்’ தலைவிரித்து ஆடுவதாகக் கொதித்திருக்கிறார்கள் கருப்பின நடிகர்கள். 2015-ல் வெளிவந்த ஹாலிவுட் படங்களில் சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் வெள்ளை நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களே அதிகமும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, 2016 ஆஸ்கரைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

‘ஆஸ்கர் இன்னும் வெள்ளையான விருதுதான்’(Oscar so white) என்ற சர்ச்சை தற்போது அங்கே தீயாகப் பற்றி எரிகிறது. “நான் ஆஸ்கர் விழாவில் இல்லை” என்று கூறி சர்ச்சைக்கு எண்ணெய் ஊற்றியிருக்கிறார் எம்.ஐ.பி புகழ் வில் ஸ்மித்.

# ஆஸ்கர் அகாடமிக்கு இந்த ‘அரசியல் சர்ச்சை’யால் ஒரு பக்கம் பேதியென்றால் இன்னொரு பக்கம் விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் பிரபலங்களுக்குத் தனியார் நிறுவனம் ஒன்று வழங்கும் பரிசுப் பைகள் ஆஸ்கரின் பெருமையைச் சிதைப்பதாகச் சீறியிருக்கிறது அகாடமி. சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வழக்கையும் தொடுத்திருக்கிறது.

அப்படியென்ன அந்தப் பரிசுப் பைகளால் வில்லங்கம்? இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள்(இந்தியப் பணத்தின் மதிப்பு 1கோடியே 75 லட்சம் ரூபாய்) மதிப்பில் வாசனைத் திரவியங்கள், செக்ஸ் பொம்மைகள், மார்பகங்களை உயர்த்திப் பிடிக்கும் கருவி என ஏடாகூடா அழகுசாதனங்கள், ஆடி கார் கால்டாக்ஸியில் ஓராண்டுக்கு இலவசப் பயணம், எகிப்துக்கு இன்பச் சுற்றுலா என்று எக்கச்சக்கம். இந்தப் பரிசுப் பைகள் ஆஸ்கார் விருதின் கவுரவத்துக்கு வேட்டு வைப்பதால் கதறுகிறது அகாடமி.

# குட்டி ஆஸ்கர் என்று அழைக்கப்படும் கோல்டன் குளோப் விருதுகளாலும் ஆஸ்கர் அகாடமிக்குத் தலைவலிதான். ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளை வெல்பவர்கள், கண்டிப்பாக ஆஸ்கர் வெல்வார்கள் என்ற கடந்த கால கணிப்புகள் பெரும்பாலும் பொய்த்தது இல்லை.

‘கன்கஷன்’ படத்தில் வில் ஸ்மித்

கோல்டன் குளோப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டாலே ஆஸ்கரை அள்ளிவிடலாம் என்று ஒவ்வோர் ஆண்டும் லாபி தூள் பறந்து வாக்களிப்பவர்களைக் குழப்புவதாக ஊடகங்கள் தொடர்ந்து இடித்துக்காட்டுவதால், சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் குமுறுகிறதாம் ஆஸ்கர் அகாடமி.

# அமெரிக்காவிலும் அமெரிக்காவுக்கு வெளியேயும் தயாரிக்கப்படும் ‘மிகச் சிறந்த’ படங்களுக்கு (உதாரணம்: ‘த செஷாங் ரிடெம்ஷன்’) ஆஸ்கர் விருது கைநழுவிப்போய்விடுவதில் கடும் விமர்சன எதிர்ப்பை எதிர்கொள்ளத் தவறுவதில்லை அகாடமி. மாறாக, சிறந்த கமர்ஷியல் படங்களுக்கு ஆஸ்கரை அள்ளித்தருவது தொடர்கிறது என்ற பல ஆங்கிலப் படைப்பாளிகளின் புலம்பலில் உண்மை இருக்கவே செய்கிறது என்கிறார்கள்.

#அடுத்ததாக, அமெரிக்காவைப் போற்றிப் புகழும் கதைகளைக் கொண்ட படங்கள் உப்புக்குச் சப்பாணியாக இருந்தாலும் அவற்றுக்கு ஆஸ்கரை அள்ளிக் கொடுப்பதற்குத் தயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைவீரர்களின் சாகசங்களைப் பேசும் படம் ‘தி ஹர்ட் லாக்கெர்’(The Hurt Locker). இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி கேத்தரின் இயக்கிய இந்தப் படத்துக்குச் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் கிடைத்தது இந்தப் பாசத்தின் அடிப்படையில்தான் என்று இடித்துக் காட்டுகிறார்கள் ஆஸ்கர் விமர்சகர்கள்.

# அதேபோல அகாடமியை ‘பயோபிக்’ பைத்தியம் ஆட்டிப்படைக்கிறது என்ற ஆதங்கக் குரல்களும் தொடர்ந்து கேட்கின்றன. சுயசரிதைப் படங்களுக்கு முன்னால் வேறு எவ்வளவு சிறப்பான படங்கள் போட்டியிட்டாலும் அவற்றுக்கு விருது கிடைப்பது அபூர்வமாகிவிடுவதுதான் ஆஸ்கர் வரலாறாம். இதற்கு ‘காந்தி’ படத்தில் தொடங்கி, ‘லிங்கன்’வரை உதாரணம் காட்டுகிறார்கள்.

# ஆஸ்கரில் சிறந்த படத்துக்கான விருது எத்தனை முக்கியத்துவம் பெறுகிறதோ அதே அளவுக்குச் சிறந்த நடிகருக்கான விருதுக்காக நடிகர்களைக் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாகக் காய விடுவதும் அகாடமிக்கு தண்ணி பட்ட பாடாம். தற்போது இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர் லியானார்டோ டிகாப்ரியோ என்கிறார்கள். அவருக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் இம்முறையும் கிடைக்காவிடில் ‘தி டேனிஷ் கேர்ள்’ நாயகன் எட்டிக்கு அந்த வாய்ப்பு உறுதி என்கின்றன அகாடமி வட்டார ஜோதிடங்கள்

# ஆஸ்கர் விருதுகள் என்பது ஆங்கிலப் படங்களுக்கு மட்டும்தான் என்ற நிலையில், அதற்கு ஒரு ‘உலகமயமாக்கல்’ தோற்றத்தைத் தருவதற்காகவே ‘சிறந்த வெளிநாட்டு மொழிப்படம்’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கடுப்படிக்கிறார்கள் இந்தப் பிரிவின் கீழ் ஆஸ்கரை வெல்ல முடியாத வெளிநாட்டவர்கள்.

இதற்கு வலுச்சேர்ப்பதுபோல இந்தியாவை ஏழ்மையின் தொட்டில் என்று சித்தரிக்கும் வகையில் படமெடுத்து இந்தியாவுக்கு வெளியேயிருந்து ஆஸ்கருக்கு அனுப்பினால் கிடைக்கும் விருது, இந்தியாவிலிருந்து நேரடியாகச் செல்லும் மிகச் சிறந்த யதார்த்தப் படங்கள் இறுதிச் சுற்றில் கூட நுழைய முடியாமல் நிராகரிக்கப்படுவதில் இந்தப் பிரிவும் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ‘கோர்ட்’ மராட்டியப் படம் உலகப்பட விழாக்களில் 17 விருதுகளைப் பெற்றிருந்தாலும் ஆஸ்கரில் ஐந்தாவது ரவுண்டிலேயே அவுட்டாகிவிட்டது.

# இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஆஸ்கர் விருதின் ‘சர்வதேச அளவுகோல்’ குறித்து அமெரிக்காவுக்கு வெளியே கவனிக்கப்படும் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து கருத்து கூறிவருவது அகாடமிக்குக் கொஞ்சம் தர்மசங்கடம்தான். அந்த வகையில் இந்தியாவிலிருந்து ஏழுமுறை ஆஸ்கருக்குத் தனது படங்கள் அனுப்பட்ட நிலையில் “எனக்கு ஆஸ்கர் விருது தேவையில்லை” என்ற பிரகடனத்துடன் கமல் ஹாசன் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்பது அகாடமி காதில் விழுந்ததா இல்லையா என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்.

சமீபத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பேசிய கமல், ஆஸ்கர் பற்றிய தன் கருத்தைக் கொஞ்சம் உயர்த்திக்கொண்டு “ஆஸ்கர் விருது என்பது ஒரு நல்ல அளவுகோல்தான். ஆனால், அதுவே சினிமாவுக்கான உலக அளவிலான மதிப்பீடாகிவிட முடியாது” என்று கூறியிருக்கிறார்.

‘த ரெவனன்ட்’ லியனார்டோ டிகாப்ரியோ படத்தில்

# ஆஸ்கர் விருது பற்றிய இத்தனை அலப்பறைகளுக்கு மத்தியில் அதை வென்றுவரும் இந்தியர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துவருவதும் ஆச்சர்யமளிக்கிறது. வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது தந்து கவுரவிக்கப்பட்ட சத்யஜித் ராய்க்குப் பிறகு காந்தி படத்தின் சிறந்த ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கரைப் பகிர்ந்துகொண்ட பானு அத்தையா, இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியரும்-தமிழருமான ஏ.ஆர். ரஹ்மான், சிறந்த ஒலிவடிவமைப்புக்காக விருதுபெற்ற கேரளத்தின் ரசூல் பூக்குட்டி, இவர்களோடு சிறந்த தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருதை இரண்டு இந்தியர்கள் பெற்றிருக்கிறார்கள். ஒருவர் கோவைத் தமிழரான கோட்டலங்கோ லியோன். இவருடன் இணைந்து விருதுபெற்ற வட இந்தியர் ராகுல் தாக்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x