Published : 30 Jun 2021 03:13 AM
Last Updated : 30 Jun 2021 03:13 AM

டிங்குவிடம் கேளுங்கள்: தூக்கத்தில் நடப்பது ஏன்?

சிலர் தூக்கத்தில் நடக்கிறார்களே ஏன், டிங்கு?

- எஸ்.கே. ஹர்ஷினி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, திருச்சி.

தூக்கத்தில் நடப்பதும் தூக்கத்தில் பேசுவதும் விழிப்புணர்வு குறைபாடு என்கிறார்கள் வல்லுநர்கள். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது சில காரணிகள் மூளையைத் தூண்டுகின்றன. இதனால் தூக்கத்தில் இருப்பவர் விழித்துக்கொண்டே தூங்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறார். தூக்கத்தில் நடப்பது பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில்தான் அதிகமாக நிகழ்கிறது. தூக்கத்தில் நடக்கும்போது அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது. குழந்தைகள் வளர வளர தூக்கத்தில் நடப்பதும் குறைந்து, ஒரு கட்டத்தில் நின்றுவிடுகிறது. மரபியல் கோளாறு, மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை போன்றவை காரணமாகப் பெரியவர்களும் தூக்கத்தில் நடப்பதுண்டு, ஹர்ஷினி.

வால் இல்லாமல் பட்டம் பறக்காதா, டிங்கு?

- மோ. யுவராஜ், 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

வால் இல்லாமலும் பட்டம் பறக்கும். ஆனால், வாலுடன் பட்டம் பறக்கும்போது அதிகமாகக் காற்றில் அலைக்கழிக்கப்படாது. பட்டத்துக்குச் சமநிலையைக் கொடுக்கும். வாலின் நீளமும் எடையும் அதிகரிக்க அதிகரிக்க பட்டம் நன்றாகப் பறக்கும். பட்டத்தின் நீளத்தைப் போல் மூன்று முதல் எட்டு மடங்கு வரை நீளமான வாலை வைத்துக்கொள்ளலாம், யுவராஜ்.

யாரை நம்பினால் நம்மை ஏமாற்ற மாட்டார்கள், டிங்கு?

- வி. ஹேம வர்ஷினி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சில நேரம் அடுத்தவர்களை ஏமாற்றிவிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஏமாற்றுபவர்கள் என்று ஒரு பட்டியலைக் கொடுக்க முடியாது. அதேபோல் மனிதர்கள் அனைவரும் ஏமாற்றக்கூடியவர்கள் என்றும் சொல்ல முடியாது. சக மனிதர்கள் மீது நம்பிக்கை வைக்காமல் எப்படி வாழ முடியும்? யார் மீதும் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைக்காமல் இருந்தால், ஏமாற்றத்தால் வரும் வருத்தத்தைத் தவிர்க்க முடியும், ஹேம வர்ஷினி.

பழைய சைக்கிள் பம்ப்பைவிட, சீன சைக்கிள்பம்ப் வெகு வேகமாகக் காற்றை நிரப்பி விடுகிறதே ஏன், டிங்கு?

- வி. ஆபிரகாம் ஜோசுவா, 3-ம் வகுப்பு, வேல்ஸ் ரவீந்திர பாரதி குளோபல் பள்ளி, மேடவாக்கம், சென்னை.

சைக்கிள் பம்ப்களில் பல வகைகள் இருக்கின்றன. நீங்கள் பழைய சைக்கிள் பம்ப் எது, புதிய சீன சைக்கிள் பம்ப் எது என்பதை எல்லாம் குறிப்பிடவில்லை. அதனால், குறிப்பாகப் பதில் சொல்ல முடியாது. நவீனத் தொழில்நுட்பத்தால் பழைய பம்ப்பைவிடப் புதிய பம்ப் வேகமாகக் காற்றை நிரப்பிவிட்டிருக்கலாம், ஆபிரகாம் ஜோசுவா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x