Last Updated : 28 Jun, 2021 10:19 AM

 

Published : 28 Jun 2021 10:19 AM
Last Updated : 28 Jun 2021 10:19 AM

கட்டுப்பாட்டு வளையத்துக்குள் இ-காமர்ஸ்: அரசின் திட்டம் என்ன?

saravanan.j@hindutamil.co.in

உலகப் பொருளாதாரத்தை இரண்டு ஆண்டுகளாக சரிவின் பாதையில் கொண்டுசெல்கிறது கரோனா. அனைத்து நாடுகளும் தங்களின் பொருளாதாரத்தை சீர் செய்ய வேண்டிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்தியா கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. இதனால் மீண்டு வந்துகொண்டிருந்த பொருளாதாரம் மீண்டும் இறக்கத்தின் போக்குக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தச் சமயத்தில் மத்திய அரசு சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. இது பரவலான விமர்சனங்களை உண்டாக்கியது. கருத்து சுதந்திரத்துக்கும் டிஜிட்டல் துறையின் வளர்ச்சிக்கும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

இதுகுறித்து விவாதம் ஓய்வதற்குள் தற்போது இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் வணிகச் சந்தைக்கும் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்திய அரசு இ-காமர்ஸ் துறை பின்பற்ற வேண்டிய புதிய கட்டுப்பாடுகள், விதிமுறைகளைக் கடந்த வாரத்தில் வெளியிட்டுள்ளது.

200 பில்லியன் டாலர் சந்தை

உலக அளவில் தவிர்க்க முடியாத துறையாக வளர்ந்துவரும் துறை இ-காமர்ஸ். சீனாவுக்கு அடுத்த பெரிய நுகர்வு சந்தை இந்தியா. இந்தியாவின் வணிக சந்தை மொபைல் பயன்பாடு அதிகரித்த பிறகு புதிய வேகத்தை எட்டியது. இணையவழி மூலமான வர்த்தகம் இளைய தலைமுறையினரின் வாழ்க்கை முறைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. கரோனாவுக்குப் பிறகு இது மேலும் அசுர வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக கரோனா தாக்கத்தினால் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டதாலும், ஆன்லைன் வழி கல்வி என்பதனால் ஸ்மார்ட்போன் இல்லாத வீடுகளிலும் அதன் தேவை கட்டாயமானதாலும், வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் டிஜிட்டல் திரைக்குள் கொண்டுவந்துள்ளது இந்த கரோனா. இவையனைத்தும் அடுத்தகட்ட டிஜிட்டல் துறை வளர்ச்சிக்கான அஸ்திவாரங்களாகவே பார்க்கப்படுகின்றன. இந்திய வணிக சந்தை அதன் முழுமையான டிஜிட்டல் தளத்துக்கு மாறும் போக்குக்கு அதிக வாய்ப்புள்ளது. இன்று சிறு கிராமங்களில் கூட வாட்ஸ்அப் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் போக்கு உருவாகியுள்ளது. கூகுள் பே, பேடிஎம் போன்ற வசதிகள் இணையவழி வர்த்தகத்தை மேலும் எளிமையாக்கியுள்ளன.

2018ல் இந்திய இணையவழி வர்த்தகமானது 50 பில்லியன் டாலராக இருந்தது, 2027ல் 200 பில்லியன் டாலராக மாற வாய்ப்புள்ளதாகக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய மிகப்பெரிய தொழில் வாய்ப்பும் வேலைவாய்ப்பும் நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது இ-காமர்ஸ் துறை. ஆனால், அதன் வளர்ச்சியின் சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொள்ளாமல் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவந்து வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்கும் வகையில் அரசு செயல்படுகிறது என்று அத்துறையைச் சார்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

புதிய கட்டுப்பாடுகள்

இந்தியா உலக வர்த்தகத்துக்கு தனது சந்தையைத் திறந்துவிட்டு 30 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தொடர்ந்து உள்நாட்டு வர்த்தகர்களைப் பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு விதிமுறைகளை அரசு நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. ஆனாலும், தற்போது இந்திய சந்தையில் ஆக்கிரமித்துள்ள பெரும்பாலான பிராண்டுகள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவையாகவே உள்ளன. அந்நிய நிறுவன உரிமை மீதான பழைய கட்டுப்பாடுகள் காரணமாக நம்முடைய முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனைதாரர்களாக இல்லாமல் விற்பனை தளங்களை நிர்வகிப்பவர்களாக இருந்துவந்தனர்.

அதேசமயம் சொந்த நிறுவன மற்றும் தொழில் கூட்டாளிகளின் பொருட்களையும் அதில் விற்பனை செய்துவந்தனர். இதையடுத்து 2018ல் விதிமுறைகள் கடுமையாக்கப் பட்டு விற்பனையாளர்களுடனான தொடர்புகளை இ-காமர்ஸ் தளங்கள் முறித்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பொருள்களின் தரம், திறன் போன்றவற்றில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது புதிதாக சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் நிறுவனங்களின் உத்தி சார்ந்த நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாக உள்ளன.

இ-காமர்ஸ் நிறுவனங்கள் குறைகளைத் தீர்க்கவும், விதிமுறைகளைப் பின்பற்றும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கவும் உள்நாட்டு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். நிறுவனத்தை தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையிடம் பதிவு செய்ய வேண்டும். அரசு தரப்பில் கேட்கப்படும் சந்தேகங்களுக்கு 72 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும். மேலும் விற்பனையாளர்களின் விவரங்கள், இணையதளம், எந்த நாடு போன்றவை விற்பனை தளத்தில் குறிப்பிட வேண்டும். அனைத்து பொருட்களுக்கும் மாற்று உள்நாட்டு தயாரிப்புகள் இடம்பெற வேண்டும். பயனாளர்களின் தேடுதல் முடிவுகளில் எந்த பாரபட்சமும் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட நிறுவனம் அல்லது பிராண்டுகளுக்கு ஆதரவாக தேடுதல் முடிவுகள் இருக்கக் கூடாது. மேலும் நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் அனைத்து விற்பனையாளர்களுக்கும் ஒரே மாதிரியான சேவையை வழங்க வேண்டும்.

முக்கியமாக பிக்பில்லியன் டே, ஃப்ளாஷ் சேல், போன்ற அதிரடி சிறப்பு சலுகை விற்பனை உத்திகளை நிகழ்த்தக் கூடாது. இந்தப் புதியக் கட்டுப்பாடுகள் அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் பொதுவானது எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த விதிகளை மீ|றினால் இந்திய நுகர்வோர் சட்டத்தின் கீழ் அபராதமும், சிறை தண்டனையும் கூட கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இகாமர்ஸ் நிறுவனங்கள் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, அவற்றின் பரவலான ஏமாற்று வேலை. இவை முறைகேடான வழிமுறைகளில் விற்பனை செய்வதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் எந்த மாதிரியான முறைகேடுகள் நடக்கின்றன, எந்த நிறுவனம் முறைகேடாக நடந்துகொள்கிறது போன்ற விவரங்களை வெளியிடவில்லை. ஆனால் பரவலாக அமேசான் அதன் டாப் விற்பனை நிறுவனங்களில் மறைமுகமாகப் பங்கு வைத்திருக்கிறது என்றும், அமேசான், பிளிப்கார்ட் அவற்றின் மொத்த விற்பனை கூடங்களின் தயாரிப்புகளையே முதன்மையாகக் காட்சிப்படுத்துகின்றன என்றும், இதன்மூலம் அந்நிய முதலீட்டு விதிகளை மீறி விற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

உள்ளூர் சில்லறை வர்த்தகர்களைப் பாதுகாக்க இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது அரசு. அந்நிய நாட்டின் இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழையும் போதிருந்தே உள்ளூர் வர்த்தகர்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டுமென கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால், இத்தனை ஆண்டுகளாக அமைதி காத்த அரசு தற்போது இந்தக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பெரும்பாலான வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் இந்தத் தளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களுக்கான சமமான போட்டியையும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும் வகையில் இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் இ காமர்ஸ் நிறுவனங்களின் தொழில் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தி உள்ளதாகக் கூறப்படுவதோடு, இந்தப் புதிய விதிமுறைகளின்படி முன்னணி நிறுவனங்களான அமேசான், வால்மார்ட்டின் பிளிப்கார்ட் உட்பட அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் தங்களின் தொழில் கட்டமைப்பை மறுஆய்வுக்குட்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளன. இதற்கு டாடா நிறுவனத்தின் பிக்பேஸ்கட், ரிலையன்ஸின் ஜியோமார்ட், சாஃப்ட்பேங்குக்குச் சொந்தமான ஸ்நாப்டீல் உள்ளிட்டவையும் விதிவிலக்கல்ல.

இந்த விதிமுறைகளினால் நிறுவனங்களின் செலவினம் அதிகரிக்கும் என்பதோடு ஆன்லைன் வணிகத்தின் எல்லா பிரிவுகளிலும் பாதிப்புகள் உண்டாகும் என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விதிமுறைகள் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிப்பதாக இருந்தாலும், இ-காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இவை எந்த வகையிலும் பலனளிக்காது என்கிறார்கள். இது துறையின் வளர்ச்சியையே பாதிக்கும் என்றும், அதனால் விற்பனையாளர்களும் பாதிக்கப்படுவார்கள். மேலும் இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக அடிக்கடி நிறுவனங்கள் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும், புகார்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாகவும் நிறுவனங்களின் தொழில் பாதிக்கப்படும் நிலை உண்டாகும். குறிப்பாக நுகர்வோர் தரப்பிலிருந்து பார்க்கும்போது பெரும்பாலும் சலுகைகள், ஆஃபர்கள்தான் அவர்களைக் கவர்ந்துள்ளன.

குறைவான விலையில் தரமான பொருட்கள் கிடைப்பதை அனுபவித்து வந்த நுகர்வோருக்கு இந்தக் கட்டுப்பாடுகளால் பெரிய அளவில் பயன் ஏதும் இல்லை. எனவே ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வது குறைய வாய்ப்புள்ளது. விலை குறைவு என்பதால்தான் பொருட்களை நேரில் பார்க்காமல் ஆர்டர் செய்யும் ரிஸ்க்கை எடுக்கிறார்கள். இந்தக் கட்டுப்பாடுகளினால் சலுகைகள், விழாக்கால விற்பனைகள் ஆகியவற்றை தவிர்த்தால், நுகர்வோரின் வாங்கும் ஆர்வம் குறையும். அதேசமயம் நுகர்வையும் குறைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டிய சமயத்தில் தொடர்ந்து வளர்ந்துவரும் டிஜிட்டல் துறையின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது மேலும் சரிவுக்குதான் வழிவகுக்கும். வளரும் சந்தையில் கண்காணிப்புகளை அதிகரிக்கலாமே தவிர கட்டுப்பாடுகளை அதிகரிக்கக் கூடாது. கட்டுப்பாடுகள் அதிகரித்தால் அது சந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவைச் சார்ந்த தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையே சமீப காலங்களில் நடந்துவரும் மோதலே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்க காரணம் என்றும் ஒருபக்கம் கருத்துகள் கூறப்படுகின்றன.

அதிக முதலீடும் வேலைவாய்ப்பும்

இந்திய வணிக சந்தையை மாற்றியது மட்டுமல்லாமல் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்தும் மிகப்பெரிய மாற்றங்களை இ-காமர்ஸ் துறை உண்டாக்கியுள்ளது. கரோனா காலத்தில் பரவலாக அனைத்து துறைகளிலும் வேலை இழப்பும், வருமான குறைப்பும் காணப்பட்டது. ஆனால் இந்த சமயத்தில் ஆன்லைன் வர்த்தக துறை வளர்ச்சியை நோக்கி பயணித்தது. சமீப ஆண்டுகளில் அதிகமான முதலீடுகளை மேற்கொண்ட துறையும் இதுதான் என்றால் மிகையில்லை. பேஸ்புக், அமேசான், வால்மார்ட் ஆகியவை ஆன்லைன் வர்த்தகம் சார்ந்து பெரும் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.

உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்திய டிஜிட்டல் சந்தையின் வளர்ச்சி. வளமான வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டதாக உள்ள இத்துறையின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அதில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று துறை சார்ந்த நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காரணம் இந்தக் கட்டுப்பாடுகளை அலசிய நிபுணர்கள் பல கட்டுப்பாடுகள் தெளிவற்றதாகவும் நடைமுறைக்கு கடினமானதாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளனர். மேலும் இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பல விற்பனையாளர்கள் இ-காமர்ஸ் தளங்களை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சந்தையில் போட்டி என்பது இயல்பானது, அதேபோல் வளர்ச்சிக்கான உத்திசார்ந்த நடவடிக்கைகளும் ஏற்கக்கூடியதே. இந்த நடவடிக்கைகளால் நுகர்வோருக்கு பாதிப்பு இல்லாதவரை அவற்றில் எந்தப் பிரச்சினையுமில்லை என்று கூறுகிறார்கள்.

தற்போது அரசு வெளியிட்டுள்ள இ-காமர்ஸ் துறைக்கான கட்டுப்பாடுகளை இத்துறை சார்ந்த நிறுவனங்கள் ஆய்வு செய்து தங்களின் கருத்துகளை அரசுக்குத் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஜூலை 6 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி வாய்ப்புகளை அந்நிய நிறுவனங்கள் அபகரித்துவிடக் கூடாது, அனைவருக்கும் சமமான தொழில் வாய்ப்புகளை உண்டாக்க வேண்டும் என்ற அக்கறை அரசின் நடவடிக்கையில் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக துறையின் வளர்ச்சியையே கேள்விக்குட்படுத்தும் வகையில் அவை இருப்பதாக நிபுணர்கள் முன்வைக்கும் கருத்தையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

அரசின் நடவடிக்கைகள் துறையை முறைப்படுத்துவதாக இருக்கலாமே தவிர, வளர்ச்சியின் வாய்ப்புகளை மட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டியதில்லை என்பதை கவனத்தில் கொண்டு அரசு முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இ-காமர்ஸ் துறையைச் சார்ந்தவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசு இதற்கு செவிசாய்க்குமா அல்லது வழக்கம்போல எடுத்த முடிவுகளிலிருந்து பின்வாங்காமல் இருக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x