Published : 25 Jun 2021 13:24 pm

Updated : 25 Jun 2021 13:29 pm

 

Published : 25 Jun 2021 01:24 PM
Last Updated : 25 Jun 2021 01:29 PM

கரோனாவும் சித்த மருத்துவமும்: தொற்றிலிருந்து மீண்டவரின் அனுபவம்

corona-treatment

எம்.ஜே.ரெகோ

மே மாதம் 10ஆம் தேதி எனக்கு வித்தியாசமான ஒரு பொழுதாக விடிந்தது. எனது உடல்நிலை இயல்பு நிலையில் இல்லை என்று தோன்றியது.

கரோனா?


வாய்ப்பில்லையே... வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. அப்படியே அரிதாக செல்ல நேர்ந்தாலும் முகக்கவசம் இல்லாமல் சென்றதில்லை. வீட்டுக்கு வந்ததும் கைகளைக் கழுவாமல் இருந்ததில்லை. பிறகு எப்படி?

அதுமட்டும் அல்ல. கரோனாவுக்கு உண்டான அறிகுறிகள் எதுவும் இல்லை. காய்ச்சல் இல்லை. தலைவலி இல்லை. உடல் வலி இல்லை. சளித் தொல்லை இல்லை. இருமல் இல்லை.

நாவில் சுவை உணர்வும் இல்லை! வாய் கசந்தது. உணவும் கசந்தது. அடுத்த இரண்டு மூன்று நாட்கள் சரியான சாப்பாடு இல்லாததால் உடல் பலவீனமானது.

எனவே, அரைகுறை மனதோடு, எதற்கும் ஒரு முறை பரிசோதனை செய்துவிடலாமே என்று ஒரு தனியார் நிறுவனத்துக்கு போன் செய்தேன். மறுநாள் ஊழியர் ஒருவர் வந்தார். ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தார்.

மறுநாள் வந்த பரிசோதனை முடிவு, என்னை கரோனா நோயாளி என்றது!

நம்ப முடியாத முடிவு. ஆனாலும் நம்பியே ஆகவேண்டிய முடிவு.

அடுத்த நாள் அடையாற்றில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றேன். சிடி ஸ்கேன் வேண்டும் என்றார்கள். நுரையீரலில் கொஞ்சம் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மருந்து மாத்திரைகள் தந்தார்கள். அவற்றில் ஸ்டீராய்டு மருந்தும் அடங்கும். இங்கு ஸ்டீராய்டு பற்றிச் சொல்லியாக வேண்டும்.

நோயின் தீவிரத்தைத் தற்காலிகமாக மட்டுப்படுத்துவதற்கான மருந்தே ஸ்டீராய்டு. இன்னும் சொல்வதானால், ஸ்டீராய்டு நோயை குணமாக்கும் மருந்து அல்ல. நோயை மறைக்கும் மருந்து. நோய்க்குத் தற்காலிக நிவாரணம் தந்து நிரந்தரமாகப் பல நோய்களை உடம்பில் விதைக்கிற மருந்து!

இனி விஷயத்துக்கு வருவோம்.

கூடவே ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்கள். உடம்பிலிருந்து ரத்தம் உறிஞ்சப்பட்டது. பரிசோதனை முடிவில் ரத்தத்தில் கொஞ்சம் கோளாறு இருப்பதாகச் சொன்னார்கள். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும் என்றார்கள். மீண்டும் உடம்பிலிருந்து ரத்தம் உறிஞ்சப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு டாக்டர் என்னை அழைத்துப் பேசினார்.

"சார், உங்களுக்கு இப்போது வயது 66க்கு மேல் ஆகிறது. கூடவே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களும் இருக்கின்றன. கரோனாவின் தாக்கம் உங்கள் உடலில் குறைந்ததாகத் தெரியவில்லை. நாளை என்ன நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். நாளை ஒருவேளை இந்த நோய் குணமாகலாம். இல்லையென்றால் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். எனவே எதற்கும் நீங்கள் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவது நல்லது" என்று அவர் பேசப்பேச, என் காதுகள் அடைத்தன. கண்கள் இருண்டன. அதிர்ந்து போய் நின்றேன். அப்படி ஒரு மனநிலை இதுவரை என் வாழ்க்கையில் ஏற்பட்டதில்லை. கரோனா என்ற நோய் என் உயிர்மூச்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாய் உணர்ந்தேன். மனதில் ஏதேதோ எண்ணங்கள்! முகநூலில் நண்பர்களின் அஞ்சலி... உறவுகளின் அழுகை... என்று நினைக்கக் கூடாத நினைவுகள் எல்லாம் மனதை ஆக்கிரமித்தன!

சென்னை நகரை இறுதியாக ஒரு முறை பார்க்கிறோமோ என்ற மனநிலையில் வீட்டுக்கு வந்தேன்.

எதிர்மறை எண்ணங்களை விதைக்கிற இடத்தில் மீண்டும் சிகிச்சையைத் தொடர என் மனது இடம் தரவில்லை.

ஊடகத்தில் பணிபுரியும் அன்புத் தம்பி ஒருவரிடம் நிலைமையைச் சொன்னேன்.

"சார், எதற்கும் கலங்காதீர்கள். பயத்தை அறவே ஒதுக்கி வையுங்கள். கிண்டியில் ஒரு சித்தா கோவிட் சிகிச்சை மையம் இருக்கிறது. நாளை காலையே நீங்கள் அங்கு செல்லுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நம்பிக்கை தந்தார்.

மறுநாள் அரைகுறை மனதோடு கிண்டி ஜெயின் கல்லூரி வளாகத்தில் உள்ள சித்தா சிகிச்சை மையத்துக்குச் சென்று தலைமை மருத்துவர் சதீஷ்குமாரைச் சந்தித்தேன். எனது பரிசோதனை முடிவுகளை வாங்கிப் பார்த்தவர் உடனடியாக சில மருந்துகளைக் கொடுக்கச் சொன்னார். சிகிச்சை முகாமில் நான் அனுமதிக்கப்பட்டேன்.

ஆம்புலன்ஸ் அலறல்கள் இல்லை! உறவினர்களின் அழுகுரல்கள் இல்லை! மருத்துவமனைகளுக்கே உரிய நெடி இல்லை! அது கரோனா சிகிச்சை முகாம் என்று அடித்துச் சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அமைதியான, சுத்தமான இடம்!

அதற்குக் காரணம் இருக்கிறது. ஜெயின் கல்லூரியின் அறக்கட்டளையினர், குழந்தைகளுக்கான சில வகுப்பறைகளைத் தற்காலிக கரோனா வார்டுகளாக மாற்றுவதற்கு அனுமதி தந்திருக்கிறார்கள். மாநில அரசு அவற்றை மருத்துவமனையாகப் பயன்படுத்திக் கொள்கிறது. அதனால்தான் அப்படி ஒரு சுத்தம். மருத்துவமனையாக மாற்றப்பட்ட பிறகும் அந்த சுத்தம் தொடர்ந்தது பேணப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

முதல் நாள் காலை ஆறரை மணிக்கெல்லாம் வளாகத்தில் உள்ள பூங்காவில் நோயாளிகள் அனைவரும் கூடவேண்டும் என்று அழைப்பு. இதமான தென்றல், இளவெயில் என்னும் இயற்கைச் சூழலில் யோகா பயிற்சிகள் தொடங்குகின்றன. பயிற்சியாளர் ஒருவர் பலதரப்பட்ட மூச்சுப் பயிற்சிகளையும் யோகாசனங்களையும் கற்றுத் தருகிறார். அதுவரை அப்படி வளைந்தும் நெளிந்தும் அனுபவப்படாத உடல் கொஞ்சம் சிரமப் படுகிறது. நாட்கள் செல்லச் செல்ல உடம்பு அதற்கேற்றவாறு பழகி விடுகிறது.

பயிற்சி முடிந்த கையோடு ஒரு கசாயம். தொடர்ந்து காலை உணவு, மருந்து, மாத்திரை, மதிய உணவு, மருந்து, இரவு உணவு, மருந்து என்று ஒவ்வொரு நாளும் முடிகிறது.

மாலை வேளைகளில் காலார நடைப்பயிற்சி செய்யலாம். பூங்காவில் அமர்ந்து காற்று வாங்கலாம். போதாக் குறைக்கு மனதை வருடும் இசை வேறு!

ஒவ்வொருவருமே ஒரு புது மனிதனாக மாறியதைப்போல் உணர்கிறார்கள். ஆக்சிஜன் முகக்கவசம் அணிந்து சுவாசிப்பவர்கள்கூட இரண்டொரு நாட்களிலேயே இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகிறார்கள்!

மூச்சுக்குழாயைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டது போன்ற உணர்வு! உடலில் புது ரத்தம் சுரந்தது போன்ற ஓர் அனுபவம்!

நாட்கள் செல்லச் செல்ல உடம்பில் இருந்த நோயும் மனதில் இருந்த அச்ச உணர்வும் முற்றாக அற்றுப் போகிறது! ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கும் உற்சாகம் மனதில் ஒட்டிக் கொள்கிறது! பத்தே நாட்களில் எல்லா நோயாளிகளும் புது மனிதர்களாக வீடு திரும்புகிறார்கள்!

நானும்தான்!

இந்த மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது?

எல்லோரது மனதிலும் எழும் இந்த வினாவுக்குத் தலைமை மருத்துவர் சதீஷ்குமார் விடை சொன்னார்.

"சித்த மருத்துவம் என்பது வெறும் வைத்திய முறை அல்ல. பண்டைத் தமிழர்களின் வாழ்வியல் முறை. வழிவழியாக வந்த இந்தப் பாரம்பரிய மருந்துகள் எந்தப் பக்க விளைவும் ஏற்படுத்தாதவை. நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்யும் வல்லமை கொண்டவை. இங்கே நோயாளிகளுக்கு வழங்கப்படும் நெல்லிக்காய் லேகியம், அமுக்கரா சூரணம், தாளிசாதி வடகம், மரமஞ்சள், லவங்காதி சூரணம், நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர், ஆடாதொடை மணபாகு, உரை மாத்திரை போன்ற மருந்துகள் கரோனா நோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. உடலில் நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்ட வல்லவை. கரோனாவின் மூன்றாவது அலை வரும் என்றும் அது குழந்தைகளைக் குறிவைத்து தாக்கும் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

மருத்துவர் சதீஷ்குமார்.

எத்தனை அலைகள் வந்தாலும் அவற்றிலிருந்து குழந்தைகளைக் காக்கும் அற்புதமான உரை மாத்திரை, பூண்டு தேன், கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, அதிமதுர சூரணம் போன்ற மருந்துகள் சித்த மருத்துவத்தில் உண்டு" என்று நம்பிக்கை பொங்கப் பேசுகிறார் மருத்துவர் சதீஷ்குமார்.

என்னைக் காத்த சித்த மருத்துவம் இந்த உலகையும் காக்க வல்லது!

கனி இருப்பக் காய் கவர்தல் இனியும் வேண்டுமா?

- எம்.ஜே.ரெகோ
மூத்த ஊடகவியலாளர்.


தவறவிடாதீர்!

கரோனாகரோனா வைரஸ்சிகிச்சைமருத்துவ பரிசோதனைகள்CoronaCorona virusOne minute newsMedicalSidha

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x