Last Updated : 23 Jun, 2021 03:11 AM

 

Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

மாய உலகம்! - கடவுள் சொல்லும் கதை

என் பெயர் ஏதெனா. நான் ஒரு கடவுள். எதற்கும் என்னிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள். எப்போது கோபம் வரும் என்று எனக்கே தெரியாது. எப்படி, எங்கிருந்து பொத்துக்கொண்டு வரும் என்றும் சொல்ல முடியாது. வந்துவிட்டால் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு என்னாகும் என்று மட்டும் தெரியும். வரி வரியாக விளக்கமாகச் சொல்லச் சொன்னாலும் சொல்வேன். ஆனால், உங்களில் சிலர் குழந்தைகளாகவோ மென்மையான இதயம் கொண்டவராகவோ இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் மேலே விவரிக்காமல் விட்டுவிடுகிறேன். நான் எழுதினால் ஒவ்வொரு சொல்லும் சிவப்பு நிறத்தில்தான் இருக்கும் என்பதை மட்டும் தாழ்மையோடு சுட்டிக்காட்டுகிறேன்.

ஏதெனா இங்கே ஒரு பிரச்சினை, வந்து தீர்த்து வைப்பாயா என்று யாராவது என்னிடம் கேட்டால் மொத்தமாகத் தீர்த்துவிடுவதுதான் என் வழி. நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறது அல்லவா? எனக்கு எல்லாமே வெட்டு ஒன்று, துண்டு இரண்டுதான்.

நான் பிறந்து வளர்ந்த கிரேக்கத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பொறுப்பை ஒதுக்கித் தருவார்கள். இசைக்கு ஒரு கடவுள். கடலுக்கு ஒரு கடவுள். மருந்துக்கு ஒரு கடவுள். விவசாயத்துக்கு ஒரு கடவுள். இப்படி ஒவ்வொருவருக்கும் தலா ஒன்று. எனக்கு என்ன கொடுக்கலாம் என்பதில் பெரிய கடவுள்களுக்குக் குழப்பமே இல்லை. ஏதெனா, இனி நீதான் போர்க் கடவுள் என்று பளபளக்கும் வாளைக் கையில் கொடுத்தார்கள். முகமெல்லாம் பல்லாக வாங்கிக்கொண்டேன்.

எனக்கு மனிதர்களைப் பிடிக்கும். அவர்கள்சேர்ந்து வாழ்ந்து ஒருநாள்கூட நான் பார்த்ததே இல்லை. எல்லாவற்றுக்கும் முட்டிக்கொள்வார்கள். எல்லாவற்றுக்கும் கட்டிப் புரண்டு சண்டை யிடுவார்கள். காச்மூச்சென்று கத்தியபடி கையையும் காலையும் உடைத்துக் கொள்வார்கள். அவர்களுக்குக் கடவுளாக இருப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு திராட்சை கொத்து எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட உட்கார்வேன். கடவுளே எங்கே போய்விட்டாய்? என்னை ஆபத்தில் தள்ளிவிட்டு நீ தேவலோகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று பூமியிலிருந்து ஒரு குரல் வரும். அப்படியே கையைக்கூட அலம்பாமல் ஓடுவேன். வந்து பார்த்தால் இரண்டு குழுக்கள் எதிரும் புதிருமாக நின்று போரிட்டுக்கொண்டிருக்கும். ஏதெனா, என் எதிரியை அழிக்க உதவி செய் என்று ஒரு குழு கத்தும். இல்லை ஏதெனா, எனக்குதான் உன் உதவி. அவர்களை இப்போதே அழி என்று இன்னொரு குழு கத்தும்.

ஏதெனாவாகிய நான் ரொம்பவும் நல்லவள் என்பதால் இருவருடைய வேண்டுதல்களையும் ஏற்று, இருவரையும் அழித்துவிட்டுத் தேவலோகம் பறந்து செல்வேன். உங்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும். இதுவரை எந்தப் போரிலும் எந்தத் தரப்பும் வென்றதில்லை. சண்டையிட்ட எல்லோரும் அழிந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் நானேதான்.

நாளொரு வாளும் பொழுதொரு போருமாக நிம்மதியாக இருந்த என் வாழ்வில் திடீரென்று ஒரு புயல்! ஏதெனா, ஒரேயொரு பொறுப்பு மிச்சமாகிவிட்டது. உனக்குத்தான் நேரம் நிறைய இருக்கிறதே, நீயே இதையும் கவனித்துக்கொள் என்று சொல்லி என் தலையில் இன்னொரு சுமையை ஏற்றினார்கள் பெரிய கடவுள்கள். என்ன என்று பார்த்தால், அறிவு! ஐயோ, எனக்கு இதைப் பற்றி முன்பின்கூடத் தெரியாதே என்று நான் அலறுவதற்குள் கடவுள்கள் மாயமாக மறைந்துவிட்டார்கள்.

சரி, நாமே தெரிந்துகொள்வோம் என்று தேடத் தொடங்கினேன். தேவலோகத்தில் நான் காலடி எடுத்து வைக்காத ஓரிடம் உண்டு என்றால் அது நூலகம் மட்டும்தான். மிகச் சரியாக அறிவு அங்கேதான் ஒளிந்துகொண்டிருப்பதாக எனக்குத் தெரிந்த ஒரு தேவதை சொன்னார். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே போனேன். கத்தியையும் கபடாவையும்தான் வரிசை,வரிசையாக அடுக்கி வைத்துப் பார்த்திருக் கிறேன். இங்கோ புத்தகங்கள் ஒன்றின் மீது ஒன்று சாய்ந்து கிடந்தன. ஏதோ ஒன்றை உருவி எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான் தெரியும் எனக்கு. எவ்வளவோ அம்புகளைப் பாய்ச்சிய என்னை முதல் முறையாக ஓர் அம்பு துளைத்து வீழ்த்தியது. நான் எங்கே அமர்ந்திருக்கிறேன்? என்ன செய்துகொண்டிருக்கிறேன்? எவ்வளவு நேரமாக இங்கே இருக்கிறேன்? என் பெயர் என்ன? என் பொறுப்பு என்ன? எல்லாம் மறந்துபோனது. எங்கே வலிக்குமோ என்பதுபோல் பக்கங்களைத் திருப்பும் என் விரல்களைப் பார்க்க எனக்கே வியப்பாக இருந்தது.

மாயம் என்பது இதுதானா? அது கடவுளையும் விட்டு வைக்காதா? நூலகத்துக்கு வெளியில் எனக்காகக் காத்துக்கொண்டிருந்த என் வாளை எடுத்தேன். ஏனோ அதன் எடை கூடிவிட்டதுபோல் இருந்தது. அல்லது நான் திடீரென்று மென்மையாகிவிட்டேனா?

ஏதெனா, எங்கே போய்விட்டாய் என்று பரபரப்போடு வந்தார் பெரிய கடவுள். பூமியில் ஒரு புதிய போர் ஆரம்பித்திருக்கிறதாம். எல்லோரும் உன்னைத் தேடுகிறார்கள்! நான் புன்னகை செய்தேன். அழிவின் கடவுளுக்கும் அறிவின் கடவுளுக்கும் இடையில் இப்போதுதான் ஒரு பெரிய போர் நடந்து முடிந்திருக்கிறது. நான் தோற்றுவிட்டேன். இனி நான் அழிவின் கடவுள் இல்லை, அறிவுதான் என் கடவுள். இனி ஏதெனா என்று யார் அழைத்தாலும் நூலைச் சுமந்துகொண்டுதான் போவேன். இந்தாருங்கள் உங்கள் வாள். இதைவிடவும் கூர்மையான ஓர் ஆயுதம் என்னிடம் இருக்கிறது. அதை எல்லா மனிதர்களுக்கும் வழங்கும்வரை நான் தேவலோகம் திரும்பி வரமாட்டேன்!

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x