Last Updated : 22 Jun, 2021 03:11 AM

 

Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

ஆய்வுப் பல்கலைக்கழகங்களில் ஐ.ஐ.எஸ்சி. பெங்களூரு முதலிடம்

கியூ.எஸ். உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் ஆய்வுப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி. 22 இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் முதல் ஆயிரம் இடங்களில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு தரவரிசையில் 21 இந்திய கல்வி நிலையங்களே இடம்பெற்றிருந்தன.

சர்வதேச உயர்கல்வி ஆய்வாளர்களின் Quacquarelli Symonds என்னும் அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் கியூ.எஸ். தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. 2022ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் 2021 ஜூன் 8 அன்று வெளியிடப்பட்டது. உலகின் 197 இடங்களில் உள்ள 13,000 பல்கலைக்கழகங்கள்/உயர்கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்தியாவின் 35 நிறுவனங்கள் கணக்கிலெடுக்கப்பட்டன. இவற்றில் 20 நிறுவனங்கள் அண்மையில் வெளியிடப்பட்ட தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளன.

ஆய்வு உலகில்...

இந்திய அளவில் ஐ.ஐ.டி. பாம்பே தொடர்ந்து நான்காம் ஆண்டாக முதலிடம் வகிக்கிறது. ஆனால், உலகளாவிய தரவரிசையில் வீழ்ச்சியடைந்து 177ஆம் இடத்தை இன்னொரு உயர்கல்வி நிறுவனத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது. ஐ.ஐ.டி. டெல்லி 185ஆம் இடத்தை மற்றொரு நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்கிறது. ஐ.ஐ.டி. மெட்ராஸ் 20 இடங்கள் முன்னேறி 255ஆம் இடத்தைப் பகிர்ந்துகொள்கிறது. ஐ.ஐ.டி. கான்பூர் (277), கரக்பூர் (280), குவாஹாட்டி (395) ஆகியவையும் தரவரிசையில் முன்னேற்றமடைந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக 186ஆம் இடத்தில் இருக்கும் இந்திய அறிவியல் கல்வி மையம் (ஐ.ஐ.எஸ்சி.) பெங்களூரு, ஆய்வுப் பல்கலைக்கழகங்களில் உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. சி.பி.எஃப் (Citation Per Faculty) என்னும் தர அளவுகோலின் அடிப்படையில் ஆய்வுப் பல்கலைக்கழகங்களின் தரம் மதிப்பிடப்படுகிறது. அதாவது, ஒரு கல்வி நிலையத்தில் ஆசிரியர்கள் அளித்த ஒட்டுமொத்த ஆய்வறிக்கைகள் ஆய்வுலகில் எத்தனை முறை மேற்கோளாகவோ அடிக்குறிப்புகளாகவோ எடுத்தாளப்பட்டுள்ளன என்பதைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் இந்தத் தரவரிசை தயாரிக்கப்படுகிறது. இந்த அளவுகோலில் ஐ.ஐ.எஸ்சி. 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளது. இதே வகையில் ஐ.ஐ.டி. குவாஹாட்டி 41ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

கியூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல்முறையாக இந்தியாவின் புகழ்பெற்ற ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது. 561-570 தரவரிசைப் பிரிவில் ஜே.என்.யூ. இடம்பெற்றுள்ளது. இளநிலை, முதுநிலை இரண்டு பட்டப்படிப்புகளையும் வழங்கும் கல்வி நிலையங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் மதிப்பீட்டுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஜே.என்.யூவில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு உள்படச் சில புதிய படிப்புகள் சேர்க்கப் பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x