இப்படியும் பார்க்கலாம்: உங்களின் ஒட்டகம் நீரைச் சேமிக்கிறதா?

இப்படியும் பார்க்கலாம்: உங்களின் ஒட்டகம் நீரைச் சேமிக்கிறதா?
Updated on
2 min read

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் பயணிகள் கொண்டுவரும் லக்கேஜ்களைப் பரிசோதித்து அந்தப் பக்கம் தள்ளுகிறது ஸ்கேனர் கருவி. கன்வேயரில் என் பொதியையும் வைத்துவிட்டுச் சுமையற்று நிற்கிறேன் கொஞ்ச நேரம். லக்கேஜைச் சுமந்திருந்த கைகள் இந்தச் சின்ன ஓய்வில் புத்துணர்வு கொள்கின்றன. இதனால் இந்தச் சுமைகளை இன்னும் நன்றாகச் சுமக்க இயலும்.

உடலின் எல்லா உறுப்புகளும் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்வதன் மூலம் புத்துணர்வு ஊட்டிக்கொள்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 60 கோடிப் பழைய செல்கள் இறந்து, புதியன பிறந்து புத்துணர்வு கொள்கிறோம். கண் இமைகளை மூடித் திறக்கும் அந்தச் சிறு இடைவெளியில் மூளைகூட அவசர ஓய்வெடுத்துப் புத்துணர்வு பெறுகிறது.

எண் சாண் உடம்புக்கு மனதே பிரதானம். மனதும் தன்னைச் சுமையற்று உணருமானால், மனதிற்கும் புத்துணர்வு கிடைக்குமானால், அந்தக் கணங்கள் எவ்வளவு அற்புதமாக இருக்கக்கூடும்?

ஆனால், அநேகமாக எல்லா மனங்களுமே தூசுகளும் நூலாம்படைகளும் நிரம்பிய, அமானுஷ்ய பங்களாவைப் போன்ற தோற்றத்திலேயே இருக்கின்றன. அதிலிருந்து வெளியே கிளம்பும் எண்ணங்களைப் பார்த்தால், அவை பேய்கள் தருவதைவிட அதிகமாகவே பீதி தருகின்றன. கண்ணுக்குத் தெரியாமல் திரிவது எண்ணங்களின் இயல்பாக இருப்பதால், கல்லடி வாங்காமல் இருக்கிறோம்.

இந்தப் பழைய மனதால் நொடிக்கு நொடி மாறிவரும் புது உலகத்தை எப்படி எதிர்கொள்ள இயலும்? மனம் அழுக்கு ஆடைகளுடன் அலைந்தால் அது சந்திக்கிற உலகமும் அழுக்காகவே இருக்கும். ஒருவேளை மனம் செல்களால் செய்யப்பட்டிருப்பின், அது தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கக்கூடும். ஆனால், அதுவோ எண்ணச் சாக்கடைகளில் உழன்று கிடக்கிறது.

அதைக் கழுவி, குளிப்பாட்டும் பொருட்டுதான் கோயில்கள், கிரிக்கெட், இலக்கியம், சுற்றுலாக்கள், விடுமுறைகள், தியானங்கள், சினிமா, குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமைகள் போன்ற ஏற்பாடுகள் எல்லாம். ஆனால், இதன் பொருட்டு நீங்கள் சென்ற ஊட்டியில் என்ன நடக்கிறது?

அழகான ஏரி, பனி மரங்கள், குளிர் பொருத்திக்கொண்ட காற்று எனச் சூழல் உங்களை ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிளாய் மாற்றும். அப்போதுதான் உங்கள் ஃபோன் ஒலிக்கும். அல்லது நீங்கள் ஒலிப்பீர்கள். “என்னது, வேலை நடக்கலியா? அவர் நாளைக்குத்தான் வருவாரா? லாரி இன்னும் கிளம்பலையா? உங்களை எல்லாம் நம்பினதுக்கு...” என்று மனம் கொதிப்படையும்.

யாரும் அழைக்கவில்லை என்றால் இன்னும் ஏன் கூப்பிடவில்லை என்று தவிப்பீர்கள். “ஏதாவது தப்பு நடந்துவிடுமோ? பாவிகள் சொதப்பிவிடக் கூடாதே” என்று மனம் அலைபாயும்.

உங்கள் மனதிலேயே சுற்றிக்கொண்டிருந்தால், சுற்றுலாத் தலம் எந்த இன்பத்தையும் புத்துணர்வையும் காட்டவே போவதில்லை. அங்குள்ள மலர்கள் ஆத்மார்த்தமாக உங்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதில்லை.கொஞ்சம் கவனித்தால் பனி உங்களைக் கண்டு நடுங்கி ஸ்வெட்டர் போட்டிருப்பதைப் பார்க்க முடியும்! அப்புறம் நீங்கள் எங்கிருந்து பனி உணர்வைப் பெற்றுப் புத்துணர்வு அடைவீர்கள்?

கோயிலிலும் இதேதான். உங்களைவிட இறை சக்தி பெரியது என்ற நினைப்பில்தான் கோயில் செல்கிறீர்கள். கடவுள் முன் உங்களை இறக்கிவைக்காமல் அப்போதும் உங்களைச் சுமக்கிறீர்கள். கடவுளுக்குத் திட்டம் போட்டுக்கொடுத்த அடுத்த நொடியில் கடவுளையும் பழசாக்கி, செருப்புடன் பழைய மனசையும் அணிந்து செல்கிறோம். நீங்கள் மட்டும் ஒரு சதவீத பக்தனாகக்கூட இல்லாதபோது, அவர் மட்டும் ஏன் 100 சதவீதக் கடவுளாக இருக்க வேண்டும்?

பழைய மனம் பழைய எண்ணங்களுடன் உங்களை வைத்திருக்கையில் நீங்கள் காஷ்மீரில் இருந்தால் என்ன, காசியில் இருந்தால் என்ன? கோயிலுக்கோ, சுற்றுலாத்தலங்களுக்கோ சென்று திரும்புகிறவர்களில் நிறைய பேர் “பாத்த மாதிரியே இல்லை... திரும்பவும் ஒருதடவை வந்து ரிலாக்ஸா பாக்கணும்” என்பதன் உட்பொருள் இதுதான்.

விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கோ வேலைக்கோ திரும்பும்போது உலகிலுள்ள எல்லாச் சோம்பல்களும், துன்பங்களும் ஆட்கொண்டு யதார்த்தத்திற்குத் திரும்பும் ‘திங்கட்கிழமைத் திணறல்’ ஏற்படுகிறது. காரணம், விடுமுறை தினத்தின் மிச்ச ஆயாசங்கள் உடலில் ஒட்டியிருப்பதால் அல்ல. விடுமுறையை நன்றாகக் கழிக்காத ஏமாற்ற உணர்வுதான் திங்கட்கிழமையைத் திட்டச் சொல்கிறது.

அந்த வேலையை முடிக்கணும், இதை முடிச்சுக்கிட்டே வந்திருக்கலாம்; நாளையாவது செக் வருமா? நாளைக்கு ஃபோன் பண்ணி என்ன விவரம்னு கேக்கணும்... என்று நிறையப் பேரின் விடுமுறைகள் ‘அலுவலம் இல்லா வேலைநாள்’ தான்..! விடுமுறையின் புத்துணர்வை இழந்துவிட்டீர்கள். அதன் களைப்பை வேலை நாளில்தான் உணர வேண்டும்!

வேலைக்குச் சென்று திரும்புகிறவர்களில் எத்தனை பேர் வீடு நோக்கிப் பயணம் செய்கிறீர்கள்? பணியாள், தொலைபேசிகள், மின்னஞ்சல்கள் எனக் குட்டி அலுவலகம் உங்களுடன் தொற்றிக்கொள்கிறபோது நீங்கள் மேற்கொள்வது பயணம் அல்ல. மாறாக அலுவலகத்திலிருந்து வீடு நோக்கிச் செலுத்தப்படுகிறீர்கள். மரங்கள், சக பயணிகள், சாலைகள் என எதையும் உள் வாங்காமல் மனம் “ஏதோ.. நினைவுகள் மனதிலே மலருதே...” என்று பாடுவதால்தான் பயணம் அலைச்சலாக மாறுகிறது!

ஒரு காபி குடிக்கும்போது ஒரு மடக்காவது காபியை உணர்கிறவர்கள் எத்தனை பேர்? ஏதோ குடித்தீர்கள் என்றால் அது வெறும் திரவம்தான். பின் காபி எங்கிருந்து புத்துணர்வு தரும்?

எந்த இடத்தில் இருக்கிறோமோ, அந்த இடத்தை உங்கள் மனதால் பாருங்கள். அங்கேயே மனதை நழுவவிடுங்கள். எவ்வளவு நேரம் பார்க்கிறீர்களோ அவ்வளவு புத்துணர்வை நீர் சேமிக்கும் ஒட்டகமாய் மனம் சேமித்துக்கொள்ளும். கொஞ்ச நேரம் மனமின்றி வாழ்வதால் எந்தக் குடியும் முழுகிப் போகாது.

ஸ்கேனர் ஆராய்ந்த பொதிகள் திரும்புவதைப் போல் உங்கள் மனதைச் சற்று நேரத்தில் பொறுக்கிக்கொள்ளலாம் - புதியதாக!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in