Published : 20 Jun 2021 07:47 AM
Last Updated : 20 Jun 2021 07:47 AM

பெண்கள் 360: கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி- அவசியத்தை உறுதிப்படுத்தும் ஆய்வு

வன்முறையை அம்பலப்படுத்திய பெண்களுக்கு புலிட்சர் பரிசு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதழாளர் மேகா ராஜகோபாலன் சர்வதேச செய்திவழங்கலுக்கான புலிட்சர் பரிசை வென்றிருக்கிறார். அமெரிக்காவில் இயங்கும் பஸ்ஃபீட் நியூஸ் என்னும் இணைய ஊடகத்தில் தன்னுடன் பணியாற்றும் ஆலிசன் கிங், கிறிஸ்டோ புஷ்செக் ஆகியோருடன் இணைந்து இந்தப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரான மேகா, அமெரிக்காவின் மேரிலேண்டில் பிறந்து வளர்ந்தவர். மேரிலேன்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஃபிலிப் மெர்ரில் இதழியல் கல்லூரியில் பட்டம்பெற்றவர். பஸ்ஃபீட் இணைய ஊடகத்தில் பணிக்குச் சேர்ந்த பிறகு சீனாவில் சிறிது காலம் பணியாற்றினார். சீனாவின் ஜிங்ஜாங் மாகாணத்தில் சீன அரசின் பிரம்மாண்ட தடுப்பு முகாம் ரகசியமாக இயங்கிவந்தது. அங்கே ஆயிரக்கணக்கான உய்குர் இஸ்லாமியர்களும் வேறு சில சிறுபான்மை இனத்தவர்களும் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சிறைக் கட்டிடத்தையும் அங்கே நிகழ்ந்த மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தும் வகையில் தொடர்ந்து முக்கியமான பல கட்டுரைகளை மேகா எழுதினார். அந்தச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த முன்னாள் சிறைவாசிகளில் இருபதுக்கு மேற்பட்டோரை நேர்காணல் கண்டு வெளி யிட்டார். செயற்கைக்கோள் படங்கள், கட்டிடக் கலை குறித்த நிபுணத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த ரகசிய சிறைச்சாலை குறித்த உண்மைகளைக் கண்டறிந்தார். இதற்காகவே அவர் சர்வதேச இதழியலுக்கான புலிட்சர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கக் காவல்துறையால் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதை உலகுக்கு அம்பலப்படுத்திய டார்னெல்லா ஃப்ரேசியர் என்னும் 18 வயதுப் பெண்ணுக்கு புலிட்சர் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மினசோட்டா மாகாணத்தில் மினியோபோலிஸ் நகரைச் சேர்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் விசாரணையின்போது அந்தச் சாலையிலேயே காவல்துறை அதிகாரி ஒருவரால் கழுத்தில் மிதிக்கப்பட்டுக் கொல்லப் பட்டார். இதைத் தனது செல்போனில் காணொலியாகப் பதிவுசெய்து முதலில் வெளியிட்டார் டார்னெல்லா. ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்காக இந்தக் காணொலி தவிர்க்க முடியாத ஆதாரமாகப் பயன்பட்டது. உலகம் முழுவதும் காவல்துறை வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கும் வழிவகுத்தது.

கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி: அவசியத்தை உறுதிப்படுத்தும் ஆய்வு

இந்தியாவில் மே 1 முதல் கர்ப்பிணிகளைத் தவிர 18 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் கோவிட்-19-க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்த சில வாரங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டது. செளம்யா சுவாமிநாதன் உள்ளிட்ட அறிவியல் வல்லுநர்களும் பல்வேறு மகப்பேறு மருத்துவ நிபுணர்களும் கர்ப்பிணிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். ஆனால், இந்தியாவில் செலுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகள் கர்ப்பிணிகளிடம் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதற்கான பரிசோதனை முடிவுகள் இல்லாத நிலையில் அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த அனுமதிக்கவில்லை. கர்ப்பிணிகளில் கரோனா வைரஸ் தொற்றைப் பெறுவதற்கான அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தலாம் என்னும் வழிகாட்டலை உலக சுகாதார மையம் கடந்த வாரம் வெளியிட்டது. தற்போது கர்ப்பிணிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தி ஆக வேண்டும் என்பதற்கான ஆதாரபூர்வ தரவுகளும் வெளியாகிவிட்டன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஎம்ஆர்) இந்தியாவில் கரோனா முதல் அலை, இரண்டாம் அலை காலகட்டங்களில் கர்ப்பிணிகள், முதன்முறை கருவுற்ற பெண்களுக்கு ஏற்பட்ட கோவிட் பாதிப்புகளைக் குறித்து நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் அலையின்போது கோவிட் தாக்குதலுக்குள்ளான இந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்களில் 14.2 சதவீதத்தினருக்கு அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில் இரண்டாம் அலையின்போது அது இரண்டு மடங்கு அதிகமாகி 28.7 சதவீத மாகியுள்ளது. முதல் அலையில் கரோனா தொற்று ஏற்பட்ட பெண்களில் 0.7 சதவீதத்தினர் மட்டுமே மரணமடைந்த நிலையில் இரண்டாம் அலையில் 5.7 சதவீதக் கர்ப்பிணிகளும் கருவுற்ற தாய்மாரும் மரணித்துள்ளனர். பொதுவாக அனைவரிடமுமே முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை கரோனா தொற்றின் தாக்கம் வெகு தீவிரமாக இருந்தது என்றாலும் கர்ப்பிணிகளும் சமமான அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, கர்ப்பிணிகளுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் பணி உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்பட உலக நாடுகள் பலவற்றில் கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் செலுத்தப்படும் ஃபைஸர், மாடர்னா தடுப்பூசிகளின் விளைவுகள் கர்ப்பிணிகளிடமும் பரிசோதிக்கப்பட்டுள்ளன. எனவே, அவை இந்தியர்களுக்குக் கிடைக்கச் செய்யும் பணி விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

பிஞ்சு மனத்தின் பிரபஞ்ச நேசம்

அரசுகளும் தனியார் நிறுவனங்களும் பெருந்தொகையைச் செலவழித்துச் செய்யும் விளம்பரங்களையும் பிரச்சாரங்களையும்விட எளிய மக்களின் சமூக அக்கறையால் விளையும் பிரச்சாரங்கள் பரவலான கவனத்தை ஈர்த்து அந்தப் பிரச்சாரத்தின் நோக்கத்திலும் வெற்றியடைந்துவிடுவதுண்டு. உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கோட் கிராமத்தில் 11 வயதுச் சிறுமியின் செயலும் அத்தகையதுதான். இளஞ்சிவப்பு நிறச் சேலையும் அதே நிறத்தில் ஸ்கேட்டிங் காலணியும் அணிந்து கிராமத்து வீதிகளில் ஸ்கேட்டிங் பயணம் மேற்கொண்டார் அந்தச் சிறுமி. இந்த ஸ்கேட்டிங் பயணத்தின்போது கோவிட்-19 தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறார். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றுடன் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கிறார்.

தடுப்பூசி குறித்த தயக்கத்திலிருந்து விடுபடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருகிறார். அந்தக் கிராமத்தின் கரடுமுரடான சாலைகள் ஸ்கேட்டிங்குக்குத் தோதானவை அல்ல. ஆனாலும், சேலை அணிந்தபடி ஸ்கேட்டிங் செய்யும் தன் விருப்பத்தை அவர் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அதனுடன் கோவிட்-19 விழிப்புணர்வு என்னும் சமூகத் தொண்டையும் இணைத்துக்கொண்டது பிஞ்சு மனத்தில் வெளிப்பட்ட பிரபஞ்ச நேசம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தச் சிறுமியின் ஸ்கேட்டிங் காணொலி ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி ஊடகங்களில் முதலில் வெளியானது. சீதாபூரைச் சேர்ந்த மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷமீனா ஷாஃபிக் இந்தச் சிறுமியின் காணொலியைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x