Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

என் பாதையில்: ஆபத்தை விலைகொடுத்து வாங்கினேன்

புதிய கரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு என் எட்டு வயது மகனையும் ஆறு வயது மகளையும் வீட்டிலேயே வைத்துச் சமாளிப்பது சிக்கலாக இருக்கிறது. அவர்களை எங்கேயும் வெளியே அனுப்ப மனம் வருவதில்லை. அவர்களால் நண்பர்களைப் பார்க்க முடியாது. பள்ளிக்கும் போக வாய்ப்பில்லை. இந்த நிலையில் அவர்களும் எவ்வளவு நேரம்தான் குறிப்பிட்ட சில விளையாட்டுகளை மட்டுமே விளையாடிக்கொண்டிருக்க முடியும்?

காணொலிகளைப் பார்க்கக் கைபேசியும் கணினியும் தேவை எனச் சண்டைபோடத் தொடங்கிவிடுகிறார்கள். இதற்கு மாற்றாக ஏதாவது யோசிக்க வேண்டுமென நினைத்தபோதுதான், இணையம்வழியாகக் குழந்தைகளே கதைசொல்வது, இணையதளங்களில் அவர்களுடைய கதை -ஓவியத்தை வெளியிடுவது, குழந்தைகளின் படைப்புகளைப் புத்தகங்களாகப் பதிப்பிப்பது போன்றவற்றை நடத்தும் சில குழுக்களைப் பற்றி அறிந்தேன். இப்படி ஒரு குழுவின் நிகழ்ச்சிகளில் அவர்களைச் சேர்த்துவிட்டேன். இதுபோன்று செய்வதற்கு அந்தக் குழுவினர் பணமும் வசூலிக்கிறார்கள்.

அது ஒருபுறம் என்றால், குழந்தைகளுக்காக நான் மேற்கொண்ட செயல்பாடு இன்றைக்குப் பிரச்சினைக்குக் காரணமாகிவிட்டது. குழந்தைகளின் படைப்புகளை வெளி யிடுவது, புத்தகமாக்குவது போன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வாட்ஸ்-அப் வழியாகவும், பெற்றோருடனான உரையாடலுக்குப் பிறகுமே செய்கிறார்கள். குழந்தைகளுக்காகத்தானே செய்கிறோம் என்று நானும் இது தொடர்பாகக் குழு ஒருங்கிணைப்பாளருடன் தொடர்புகொண்டுவந்தேன். அவர் என்னுடைய தோழிகளின் குழந்தைகள், உறவினர்களின் குழந்தைகளையும் தனக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

எல்லாம் நல்லதுக்குத்தானே என நானும் தொடர்ச்சியாகப் பகிர்ந்துவந்தேன். குழந்தைகள் நிகழ்வுக்காக, குழந்தை களின் படைப்பு வெளியீட்டுக்காக என்கிற பெயரில் என்னுடன் அடிக்கடி அந்த நபர் தொடர்புகொள்ளத் தொடங்கினார். தொடக்கத்தில் குழந்தைகளின் படைப்பு குறித்துப் பேசிவந்த அவர், சமீபகாலமாக என்னுடைய பிரச்சினைகள், நான் அறிமுகப்படுத்திய தோழிகளின் பிரச்சினைகள் குறித்தெல்லாம் கேட்கத் தொடங்கினார். தான் ஒரு மனநல ஆலோசகர் எனவும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமென்றும் கூறினார். அதற்காகச் சில விஷயங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டதுடன் ஆலோசனைக்குக் கட்டணமும் செலுத்தினேன்.

நாளுக்கு நாள் அவருடைய பேச்சும் செயல்பாடுகளும் எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவரிடம் போனில் பேசுவதையும் வாட்ஸ் அப் வழியே தொடர்புகொள்வதையும் தவிர்க்கத் தொடங்கினேன். இப்பொழுது என்ன நடக்கிறது என்றால், நானும் தோழிகளும் ஏற்கெனவே பேசியதைக் கைபேசியில் அவர் பதிவுசெய்து வைத்திருப்பதாகவும், நாங்கள் யாராவது அவருக்கு எதிராக ஏதாவது பேசினாலோ குழுவிலிருந்து விலகினாலோ தன்னிடமுள்ள ஆதாரங் களை வெளியிட்டுப் பகிரங்கப்படுத்திவிடுவேன் எனவும் மிரட்டி வருகிறார். இதை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை.

நாவல் கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நெருக்கடியான காலத்தில் குழந்தைகளின் நலனுக்காக என்கிற ஆர்வத்தில் வாட்ஸ் அப் குழுக்கள், ஸூம் கூட்டங்கள் என்று கிடைக்கும் வழிகளில் நம்மையும் குழந்தைகளையும் ஈடுபடுத்திக்கொள்ள முயல்கிறோம். ஆனால், அந்தச் செயல்பாடுகள் இதுபோல் சில நெறிதவறிய நபர்களுக்குத் துணைபோவதாக அமைந்துவிடுகின்றன. இதுபோன்ற சிக்கல் வேறு பல இல்லத்தரசிகளுக்கும் நேரலாம். இதுபோன்று நேரடி அறிமுகம் இல்லாத புதிய குழுக்களின் பின்னணி, செயல்பாடுகள் குறித்து எதுவும் அறியாமல் நாமாகப் போய் சிக்கிக்கொள்வது நல்லதல்ல என்கிற நோக்கத்துடனேயே இதை இங்கே பதிவுசெய்கிறேன்.

- இவாஞ்சலின், மாதவரம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x