Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

நலம்தானா 10: கலப்பு மருத்துவம் கைகொடுக்குமா?

ரத்த அழுத்தத்துக்கு அலோபதி மருந்து, மூட்டுவலிக்குச் சித்த மருந்து, ஆஸ்துமாவுக்கு ஹோமியோபதி மருந்து எனப் பலரும் உடலில் உள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு மருத்துவ முறையை ஒரே நேரத்தில் கடைப்பிடிக்கிறார்கள். இது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

உலகத்திலுள்ள சிறந்த மருத்துவ முறைகளை, சிறந்த மருத்துவர்கள் கண்டறிந்ததை உள்வாங்கித் தொடர்ந்து வளரும் மருத்துவம்தான் நவீன மருத்துவம். அதேநேரம் அலோபதி மருந்துகளே ஒன்றுக்கொன்று சேராமல் போவது உண்டு. ஒன்றைச் சாப்பிடும்போது மற்றொன்றைத் தவிர்க்கச் சொல்வதும் உண்டு. இந்நிலையில், பல மருத்துவ முறை சார்ந்த மருந்துகளையும் கலந்து உட்கொள்வது எப்படிச் சரியாக இருக்கும்?

நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு மருந்தும் உட்கிரகிக்கப்பட்ட பிறகு, ரத்த ஓட்டத்தை அடையும். அதன் பின் கல்லீரலில் பல்வேறு பொருட்களாக மாற்றமடையும். ரத்தத்திலுள்ள பல்வேறு மருந்துகளும், மருந்துகளில் கலந்துள்ள பொருள்களும் ஒன்றுக்கொன்று எவ்வாறு வினையாற்றுகின்றன என்பது குறித்துத் தெரிந்துகொண்டு, உரிய புரிதலோடுதான் அலோபதி மருந்துகளையே கொடுக்க வேண்டும்.

கவனம் தேவை

அலோபதியிலேயே சில மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது சில மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணத்துக்குக் குடல் அழற்சி/புண்களைக் குணப்படுத்துவதற்குத் தரப்படும் பான் மருந்துகள் (Proton pump inhibitors) இரைப்பையில் அமிலத்தன்மையைக் குறைக்கும் தன்மைகொண்டவை. அதே நேரத்தில், அந்த நோயாளிக்குப் பூஞ்சைத் தொற்று இருந்து அதற்காக மருந்து கொடுப்பதாக இருந்தால், அதற்கு வாய்வழி மருந்தாகக் கொடுக்கக் கூடாது. ஏனென்றால், இந்த மருந்து உட்கிரகிக்கப்பட குடலில் அமிலத்தன்மை இருக்க வேண்டியது அவசியம்.

இதே போன்று, ஆஸ்துமா நோயாளியாக இருந்தால் சுவாசச் சிறுகுழல்களை விரிவடையச் செய்யும் மருந்துகளைக் கொடுப்போம். அதேவேளை அவர்களுக்கு ரத்த அழுத்தமும் இருந்தால் பீட்டா ஏற்பிகளில் தடையை ஏற்படுத்தி (Beta-blockers) ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படாது. இவை சுவாசச் சிறுகுழல்களைச் சுருங்கச் செய்து மூச்சுத்திணறலை, ஆஸ்துமாவை அதிகரித்துவிடக்கூடியவை.

இப்படி அலோபதி மருத்துவத்திலேயே நோயாளிக்கு உள்ள பல்வேறு பிரச்சினை களுக்காக வெவ்வேறு மருந்துகளைக் கொடுக்கும்போதே, அவற்றால் ஒன்றுக்கொன்று எதிர்வினை ஏற்பட்டுப் பாதிப்பு ஏற்படச் சாத்தியம் உண்டு. அதை மனத்தில் கொண்டு மிகவும் கவனமாக மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.

புரிந்துகொண்டு பின்பற்றுங்கள்

இந்தப் பின்னணியில் நவீன மருந்துகளை எடுக்கும்போது, மாற்று மருத்துவ முறை மருந்துகளால் என்னென்ன எதிர்வினைகள் நோயாளியின் உடலில் ஏற்படுமெனத் தெரியாது. மாற்று மருந்துகளின் மூலப்பொருட்கள் என்னென்ன, அவை உடலில் எப்படி மாறுகின்றன, மாற்றமடைந்து உருவாகும் புதிய பொருட்கள் எப்படி அலோபதி மருந்துகளோடு எதிர்வினையாற்றும் என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.

உங்களுக்கு எந்த மருத்துவ முறை மீது நம்பிக்கை இருக்கிறதோ, அந்த மருத்துவ முறையைப் பின்பற்றலாம். அதிலும் அந்தத் துறையில் படித்து, அரசு அல்லது அமைப்பு அங்கீகாரம் பெற்ற தேர்ந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். இதற்கு மாறாக, ஒரேநேரத்தில் பல மருத்துவ முறைகளின் மருந்துகளை உட்கொள்வது உடலில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தெரியாது.

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்

தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x