Published : 18 Jun 2021 10:05 AM
Last Updated : 18 Jun 2021 10:05 AM

கோலிவுட் ஜங்ஷன்: உள்ளரங்க படப்பிடிப்பு! 

‘ஆடிய காலும்... பாடிய வாயும் சும்மா இருக்குமா?’ என்கிற வழக்குமொழி, திரையுலகத்துக்கு நன்றாகவே பொருந்தும். கரோனா இரண்டாம் அலைத்தொற்றின் பரவல் குறைந்துவருவதால் உள்ளரங்கப் படப்பிடிப்புகளை நடத்த கோலிவுட்டும் டோலிவுட்டும் முழுவீச்சில் திட்டமிட்டு வருகின்றன. நெல்சன் இயக்கத்தில் விஜய் - பூஜா ஹெக்டே பங்குபெரும் பாடல் காட்சியைப் படமாக்க, சென்னையில் அரங்கம் அமைத்து வருகிறது படக்குழு. அதேபோல, ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்துக்கான பாடல் காட்சியைப் படமாக்க ஹைதராபாத்தில் அரங்கம் அமைத்து வருகிறார்கள். ஆந்திராவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அரங்க வேலைகள் நடந்து வருகின்றன.

உறுதி செய்த கமல்!

லைகா நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையிலான வழக்கை மேலும் மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்துவிட்டது நீதிமன்றம். இதனால், ‘இந்தியன் 2’ விவகாரம் இப்போதைக்கு முடியாது என்கிற நிலை. இதனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ தான் கமல் அடுத்து நடிக்கவிருக்கும் படம் என்பதை ஓர் அறிவிப்பு மூலம் உறுதிசெய்திருக்கிறார்கள். ‘விக்ரம்’ படத்துக்கு சண்டை இயக்குநர்களாக அன்பறிவ் இரட்டைச் சகோதரர்களை ஒப்பந்தம் செய்திருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு அது. அதேபோல், ‘இந்தியன் 2’ பிரச்சினை முடிவுக்கு வராவிட்டால், ஸ்ரீப்ரியா தயாரிப்பில் ‘பாபநாசம் 2’ படத்தில் நடிப்பதாகக் கூறிவிட்டாராம் கமல்.

5 கோரிக்கை

பிரபல தயாரிப்பாளரான லிப்ரா புரோடெக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், தமிழ்நாடு அரசுக்கு 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தமிழில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு வரிவிலக்கு, சென்னையில் படப்பிடிப்புகளுக்கு குறைந்த கட்டணம் ஆகிய திட்டங்களை மீண்டும் தொடரவேண்டும். திரையரங்குகள் மூடிக்கிடப்பதால், அவற்றின் மின் கட்டணம், சொத்துவரியை தள்ளுபடி செய்தோ அல்லது அவற்றில் சலுகை அளித்தோ திரையரங்க உரிமையாளர்களின் சுமையைக் குறைக்க வேண்டும்.

தொற்று குறைந்துவரும் நிலையில், அடுத்தக்கட்ட தளர்வுகளின்போது திரையரங்குகளை திறந்திடவும் கட்டுப்பாடுகளுடன் கூடிய படப்பிடிப்புகளுக்கு அனுமதியும் அளித்து, லட்சத்துக்கும் அதிகமான சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். பெரிய படங்கள், ஓடிடி தளங்கள் என பல போட்டிகளுக்கு மத்தியில், திரையரங்கில் வெளியாகப் போராடும் சமூக அக்கறை மிகுந்த சிறு படங்களை வெளியிட, மாநிலமெங்கும் மினி திரையரங்குகளை அரசே அமைத்து படைப்பாளிகளையும் சிறுபடத் தயாரிப்பாளர்களையும் காப்பாற்ற வேண்டும் ஆகியவையே அந்தக் கோரிக்கைகள்.

ஐந்தாம் முறையாக..

சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தென்மேற்குப் பருவக்காற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய்சேதுபதி. அதன்பின்னர், அவருடைய இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்', ‘தர்மதுரை', ‘மாமனிதன்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ஐந்தாம் முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. தாணு தயாரிப்பில் உருவாகிறது இந்தப் படம்.

மீண்டும் டிம்பிள்!

பிரபுதேவா - தமன்னா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2016-ல் வெளியானது ‘தேவி 2’. அப்படத்தின் பிளாஷ் - பேக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் டிம்பிள் ஹயாத்தி. தற்போது ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ உட்படப் பல தெலுங்குப் படங்களிலும் கார்த்திக் ஆர்யன் இயக்கும் இந்தி படத்திலும் நடித்துவரும் இவர், மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். விஷால், ஆர்யா நடித்து வந்த ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், விஷால் தன்னுடைய 31-வது படத்தை ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியிருக்கிறார். து.பா.சரவணன் இயக்கும் தலைப்பு சூட்டப்படாத அந்தப் படத்தில்தான் விஷாலுக்கு ஜோடியாகியிருக்கிறார் டிம்பிள். டிம்பிள் ஹயாத்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x