வேலை வேண்டுமா? - எல்.ஐ.சி.யில் உதவி நிர்வாக அதிகாரி காலியிடங்கள்

வேலை வேண்டுமா? - எல்.ஐ.சி.யில் உதவி நிர்வாக அதிகாரி காலியிடங்கள்
Updated on
1 min read

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்.ஐ.சி.) 700 உதவி நிர்வாக அதிகாரி பணியிடங்கள் (Assistant Administrative Officer-AAO) நேரடித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

எழுத்துத் தேர்வு (ஆன்லைன்) மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் ரீசனிங், கணிதத் திறன், பொது அறிவு மற்றும் நடப்புக் கால நிகழ்வுகள், கணினி ஆகிய பகுதிகளில் தலா 30 கேள்விகள், பொது ஆங்கிலத்தில் 40 கேள்விகள் என மொத்தம் 160 வினாக்கள் இடம்பெறும். எழுத்துத் தேர்வுக்கு மதிப்பெண் 300. ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியே தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். பொது ஆங்கிலம் பகுதியில் எடுக்கின்ற மதிப்பெண் ரேங்க் பட்டியலுக்குக் கணக்கில் எடுக்கப்படாது. எனினும் அதில் குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பெண் பெற்றாக வேண்டும்.

ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட இருக்கிறது. இதற்கு வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதிக்குள் ஆன்லைனில் (>www.licindia.in) விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, போட்டித்தேர்வுக்காக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சி உள்ளிட்ட விவரங்களை இந்த இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

உதவி நிர்வாக அதிகாரி பணியில் சேருவோருக்குத் தற்போதைய நிலையில் ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in