Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM

வங்கித் துறையில் 11,000 வேலைகள்

கோப்புப்படம்

நந்தன்

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் - மத்திய ஆட்சிப் பகுதிகளில் உள்ள மண்டல கிராமப்புற வங்கிகளில் (Regional Rural Banks- RRB) அதிகாரிகள் (ஸ்கேல் 1,2,3), அலுவலக உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்புக்கான நடைமுறையை வங்கி ஊழியர் தேர்வு மையம் (Institute of Banking Personal) தொடங்கியுள்ளது. இதற்கான விளம்பர அறிவிக்கை அந்த மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://www.ibps.in/) வெளியிட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 11,753 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

பொதுப் பிரிவுக்கு உட்பட்டவர்கள் அலுவலக உதவியாளர் பதவிக்கு 18-28 வயதுவரை விண்ணப்பிக்கலாம். அதிகாரி ஸ்கேல் 1 (உதவி மேலாளர்) பதவிக்கு 21-30 வயது, ஸ்கேல் 2 (மேலாளர்), ஸ்கேல் 3 (மூத்த மேலாளர்) பதவிகளுக்கு முறையே 21-32 வயது, 21-40 வயது என்று வயதுத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், கணவனை இழந்த அல்லது விவாகரத்தான பெண்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

அலுவலக உதவியாளர் - உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர் எந்தப் பகுதியில் உள்ள வங்கியில் பணிக்கு விண்ணப்பிக்கிறாரோ, அந்தப் பகுதியின் உள்ளூர் மொழி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.

அனைத்துப் பதவிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான கல்வி நிலையத்திலிருந்து இளநிலைப் பட்டம் பெற்றிருப்பது அடிப்படைத் தகுதி. மேலாளர், மூத்த மேலாளர் பதவிகளுக்குக் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பணிக்குத் தேவையான கூடுதல் கல்வித் தகுதிகளும் சில பணிகளுக்கு முன்அனுபவமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பொதுவாகக் கணினியை இயக்கத் தெரிந்தவர்களுக்கும், குறிப்பிட்ட பணிகளுக்குச் சில பாடங்களில் பட்டம் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்ப முறையும் தேர்வுகளும் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் (https://www.ibps.in/crp-rrb-x/). விண்ணப்பக் கட்டணங்களையும் அதுபோலவே செலுத்த முடியும். விண்ணப்பிப்பதற்கும் விண்ணப்பங்களில் மாற்றங்கள் செய்வதற்குமான கடைசி தேதி ஜூன் 28. ஒரே நபர் அலுவலக உதவியாளர் பதவிக்கும் ஏதேனும் ஒரு அதிகாரி பதவிக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்கலாம்.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஆவணங்களையும் சான்றிதழ்களையும் பணி நேர்காணலின்போது கொடுக்க வேண்டும். இவற்றுக்கான படிவங்களும் ஆள்சேர்ப்பு அறிவிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

உதவியாளர், துணை மேலாளர் பதவிகளுக்கான தொடக்கநிலைத் தேர்வு ஆகஸ்ட் 1, 7, 8, 14, 21 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். முதன்மைத் தேர்வு உதவியாளர் பணிக்கு செப்டம்பர் 29, துணை மேலாளர் பதவிக்கு அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். மற்ற இரு உயர் பதவிகளுக்கு செப்டம்பர் 25 அன்று ஒற்றைத் தேர்வும் அதற்குப் பிறகு அக்டோபர்/நவம்பரில் நேர்காணலும் உண்டு. அனைத்துத் தேர்வுகளும் இணையவழியில் நடத்தப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைப்பும் உண்டு. 2022 ஜனவரியில் முடிவுகள் வெளியிடப்பட்டுப் பணி நியமனங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு ஐ.பி.பி.எஸ். இணையதளத்தில் உள்ள ஆள்சேர்ப்பு விளம்பர அறிவிக்கையைப் பாருங்கள்: https://bit.ly/3ggcdPj

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x