Last Updated : 09 Jun, 2021 03:15 AM

 

Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

மாய உலகம்! - மலையிலிருந்து ஒரு தாத்தா

ஓவியம்: லலிதா

மலையில் ஒரு முறை நீங்கள் வாழத் தொடங்கிவிட்டால் போதும். மலை உங்களைப் பிடித்து வைத்துக்கொள்ளும். நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் அதன் பிடியிலிருந்து விடுபட முடியாது. நான் ஒரு மலைவாசியாக மாறியது இப்படித்தான் என்கிறார் ரஸ்கின் பாண்ட்.

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய சின்னஞ்சிறிய இடமான முசோரியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகிறார். அங்கிருந்துகொண்டே இவர் எழுதும் கதைகளும் கட்டுரைகளும் பிடித்துவிட்டதால் இமயமலை அவரைப் பிடித்து வைத்துக்கொண்டுவிட்டதோ என்னவோ?

மலை என்பது தனி உலகம். ஒரு மலைவாசிக்குக் கடிகாரமே தேவை இல்லை என்கிறார் பாண்ட். இன்னும் கொஞ்சம் தூங்கவிடேன் என்று கெஞ்சினாலும் கோழி எழுப்பிவிட்டுவிடும். ஆரவாரத்தோடு குழந்தைகள் பேருந்தில் கடந்து சென்றால் காலை உணவு நேரம் வந்துவிட்டது என்று பொருள். நான் எழுதிக்கொண்டிருக்கும்போது வெயில் உள்ளே வந்து என் காலைத் தொட்டால் மதியச் சாப்பாடு.

மரக்கிளைகளிலிருந்து பறவைகள் பாடத் தொடங்கினால் அப்படியே குட்டித் தூக்கம். குட்டித் தூக்கம் பெரிய தூக்கமாக மாறுவதற்குள் படபடவென்று கூரைமீது மழை கொட்டத் தொடங்கிவிடும். குளிருக்கு இதமாகக் கொஞ்சம் தீனி. அப்படியே ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்தால் இரவு நேரப் பூச்சிகள் கொய்ங் கொய்ங் என்று சத்தமிட்டால்தான் புத்தகத்தை மூடுவேன்.

பாண்ட் வீட்டில் ஒரு ஜன்னல் இருக்கிறது. கதவை அடைத்துக்கொண்டு உள்ளே அமர்ந்திருந்தாலும் அந்த ஜன்னல் வழியாக முழு உலகமும் உள்ளே வந்துவிடும். என் பேனாவின் மீது வந்து நின்றுகொண்டு நான் எழுத, எழுத ஒரு மஞ்சள் பட்டாம்பூச்சி படித்துக் கொண்டே இருக்கும். சீக்கிரம் முடித்து விட்டு வெளியே வா என்று மைனா கத்தி கத்தி அழைக்கும். நீ வருகிறாயா அல்லது நான் வரட்டுமா என்று உரிமையோடு ஜன்னல் கம்பியில் வந்து காகம் மூக்கை உரசும்.

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பிப்பேன். இங்கே போக வேண்டும், அங்கே போக வேண்டும் என்று எந்தத் திட்டமும் இல்லை என்பதால் நான் பாட்டுக்கு நடப்பேன். பக்கத்தைத் திருப்பத் திருப்ப கதை விரிவதுபோல், அடி எடுத்து வைக்க, வைக்க புதிய உலகம் விரியும். ஒரு வெட்டுக்கிளியோ அணிலோ முயலோ குறுக்கிட்டால் நடப்பதை நிறுத்திவிட்டு நிதானமாக வேடிக்கை பார்ப்பேன். ஒரு பறவையின் ஒலி கேட்டால் சட்டென்று நிமிர்ந்து பார்த்துவிடாமல் அது எந்தப் பறவையாக இருக்கும் என்று யோசிப்பேன். என் கண்ணில் படும் பூக்களைப் புத்தகத்தைப் பார்க்காமல் அடையாளம் காணமுடிகிறதா என்று பரிசோதிப்பேன்.

எங்கே இந்த நிலாவை இன்னமும் காணோம்? இதென்ன எனக்குத் தெரியாத புதிய நட்சத்திரம்? இந்த மேகம் கரடி போல் இருக்கிறதா அல்லது சின்ன வயதில் நான் அணிந்த சட்டை போலவா? இந்த மான் ஏன் கண்களைச் சோகமாக வைத்திருக்கிறது? இந்த நாய்க்குட்டி ஏன் வள் வள்ளென்று குரைத்தபடி மழையைத் துரத்துகிறது? ஒரு துப்பறிவாளனாக மாறுவது இங்கே எளிது.

ரஸ்கின் பாண்டுக்கும் காய்ச்சல் அடிக்கும். சளி பிடிக்கும். சுருண்டு படுத்துக்கொள்வார். ஆனால், நீண்டநேரம் படுக்க முடியாது. என்ன ஆனது என்று வீட்டுக்குள் நுழைந்து குருவி போர்வையைப் பிடித்து இழுக்கும். கண்களைத் திற என்று மூக்கின் மீதே வந்து பட்டாம்பூச்சி உட்காரும். சிவப்பும் கறுப்பும் கலந்த மரவட்டை கட்டை விரல் மீது மலையேற ஆரம்பிக்கும். இப்போது விழிக்கிறாயா, இல்லையா என்று லொட்டு லொட்டென்று கொத்தியபடி மரங்கொத்தி மிரட்டும். அதன்பின் உடல் வலியாவது, மனச்சோர்வாவது?

எழுந்து உட்கார்ந்து எழுத ஆரம்பித்து விடுவார். பேருந்தில் உட்கார்ந்து கொண்டுகனவு காணும் சிறுமியின் கதை. தூக்கக் கலக்கத்தோடு பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் சிறுவனின் கதை. பிளம் மரக் கிளையில் ஏறி உட்கார்ந்துகொண்டு, இங்கே எதற்காக ஏறினேன் என்று யோசிக்கும் கரடியின் கதை.

பாண்டின் கதையில் வரும் பேய்கூட நம்மை அச்சுறுத்துவதில்லை. நீ அந்தப் பக்கம்தானே போகிறாய், நான் உன் வண்டியில் ஏறிக்கொள்ளட்டுமா என்று முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கேட்கிறது. பாவம், குட்டிப் பேயாக இருக்கிறது. குளிர் வேறு அதிகம் அடிக்கிறது என்று நீங்களும் மிதிவண்டியை நிறுத்தி ஏற்றிக்கொள்வீர்கள். இறக்கிவிட்டுவிட்டு அப்படியே போய்விடாமல், இங்கே தனியாக இருக்கப் பயம் எதுவும் இல்லையே என்றும் விசாரிப்பீர்கள்.

தேவை என்று பெரிதாக எதுவும் இல்லை. எளிய வாழ்க்கை. எளிய கனவுகள். என் கதைகளும் அப்படியே அமைந்துவிட்டன என்கிறார் பாண்ட். சில நேரம் எனக்குத் தோன்றும், மலையின் கதைகளை ஒன்றுவிடாமல் எழுதிவிட்டோமே. இனி என்ன பாக்கி இருக்கிறது? இன்று எந்தக் கதையை எழுதுவது? சுடச்சுட தேநீர் கலந்து எடுத்து வந்து ஜன்னலைத் திறப்பேன். ஒரு நத்தை என்னைவிட நிதானமாக, என்னைவிட அதிக அனுபவத்தோடு, என்னைவிட அதிக சிந்தனையோடு என் மேஜையை நோக்கி நடந்து வர ஆரம்பிக்கும். இந்த நத்தையிடம் ஒரு கதை இருக்கும் அல்லவா?

உற்சாகத்தோடு எழுத ஆரம்பிப்பேன்.

(ரஸ்கின் பாண்ட் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர். 70 ஆண்டுகளாக எழுதிவருகிறார். தான் எழுதிய சிறார் படைப்புகளுக்காக அதிகம் கொண்டாடப்படுகிறார்.)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x