Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

புதிய கண்டுபிடிப்புகள்: இம்மாம் பெரிய முட்டை எப்படி உருவாகிறது?

உலகிலேயே அம்மணி உழுவையின் (Whale Shark) முட்டைதான் மிகப்பெரியது. பறவைகளில் நெருப்புக் கோழியின் முட்டை பெரியது. ஒன்றரை கிலோ எடை கொண்ட நெருப்புக்கோழி முட்டையும் 50 கிராம் எடை கொண்ட கோழியின் முட்டையும் 5 கிராம் எடை கொண்ட ரீங்காரச் சிட்டு முட்டையும் ஒரே செல்லால் ஆனது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மனிதன் போன்ற பாலூட்டிகள் முட்டை இடுவதில்லை என்றாலும் பெண் இனத்தில் முட்டையிலிருந்துதான் கரு உருவாகிறது. மனித கருமுட்டையின் அளவு சுமார் 200 மைக்ரோமீட்டர். சராசரி செல்களின் அளவு 80-100 மைக்ரோமீட்டர்தான்.

ஒரு செல் முட்டை

முட்டைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அவை ஒரு செல்லால் மட்டுமே ஆனவை. உயிரினங்களின் மிகப் பெரிய செல் அவற்றின் முட்டைகள்தாம்! ஒரே ஒரு செல் மட்டும் பெரிதாக வளர்வதன் ரகசியம் இயற்பியல் தத்துவத்தில் அடங்கி உள்ளது. இது மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சி மாணவர்களான ஜாஸ்மின் இம்ரான் அல்சஸ், நிக்கோலா ரோமியோ ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஓசைட்டுகள் என்கிற சினைக்கருமுட்டை செல் மிகப் பெரியதாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. கருவுற்றதும் சினைக்கருமுட்டை செல் பிரிந்து ஒன்று இரண்டாகும்; இரண்டு நான்காகும்; நான்கு எட்டாகும்; எட்டு பதினாறாகும். இப்படியே செல்களின் எண்ணிக்கை கூடிப் பெரிதாகும். அதிலிருந்துதான் அந்த உயிரினத்தின் சந்ததி உருவாகும். செல்களின் எண்ணிக்கை வளரும்போது அதற்குத் தேவையான லிப்பிடுகள், புரதங்கள், பாலிசாக்கரைடுகள் போன்ற ஊட்டங்களை முட்டை சைட்டோபிளாசத்தில் சேமித்து வைத்துள்ளது. கருவுற்றதும் முட்டை வளர இந்த ஊட்டச்சத்து பயன்படும்.

பூச்சியின் முட்டை வளர்ச்சி

தாயின் கருப்பைக்கு வெளியே முட்டை பொரிந்து குஞ்சு வரும். முட்டைகளில் சுமார் 95 சதவீத ஊட்டச்சத்து மஞ்சள் கருவில்தான் உள்ளது. பாலூட்டிகளுக்குக் கருவில் நேரடியாகத் தாயின் ஊட்டச்சத்து செல்வதால் மஞ்சள் கரு அவ்வளவாக இருக்காது.

பழ ஈ முட்டை எப்படி உருவாகிறது என்பதை எம்ஐடி ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். பெண் பழ ஈயின் கருப்பையில் நான்கு முறை மையோசிஸ் செல் பிரிதல் செய்து, கருமுட்டையில் 16 செல்களாக மாறுகிறது. மையோசிஸில் ஒரு செல் பிரிந்து இரண்டாக மாறும்போது இரண்டும் தனித்தனி செல்களாக முதிர்ச்சி அடையும். ஆயினும் கருமுட்டை செல் பிரிதலில் செல் பிரிப்பு முழுமையடையாது. ஒவ்வொரு செல்லும் அடுத்துள்ள செல்களுடன் குறுகிய பாதை மூலம் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த நுண் குழாய்கள் மூலம் ஒரு செல்லில் இருக்கும் பொருள் மற்றொரு செல்லுக்குள் செல்லும்.

இந்த 16 செல்களில் ஒன்று முதிர் வடையும் சினைக்கரு முட்டையாகவும் மற்ற 15 செல்கள் இந்தக் கருமுட்டையைச் சீராட்டி ஊட்டமளிக்கும் தாதியைப் போலவும் செயல்படுகின்றன எனவும் கண்டனர். 15 செல்களின் ஊட்டம் சினைக்கரு முட்டையை அடையும்போது, காற்று ஊதிய பலூன் போல அதன் உருவம் பெருத்துவிடுகிறது. அந்த செல்லே முட்டையாக உருவாகிறது.

இரண்டு கட்ட வளர்ச்சி

முட்டை பெரிதாகும் போதும் இரண்டு கட்டங்கள் உள்ளன என இந்த ஆய்வு காட்டியது. முதல் கட்டத்தில் தாதி செல்களில் உள்ள சைட்டோபிளாசம் பொருள் பெருமளவு முட்டை செல்லுக்குள் சென்றுவிடுகிறது. தாதி செல்களின் உருவம் நான்கில் ஒரு பகுதியாகச் சுருங்குகிறது. இரண்டாம் கட்டத்தில்தான் தாதி செல்கள் மயோசின் புரதத்தின் செயல்பாட்டில் மேலும் சுருங்கி, பிழியப்பட்டு, மீதமுள்ள பொருள்களும் முட்டை செல்லுக்குள் செல்கின்றன என்பதைக் கண்டனர்.

பலூன் பரிசோதனை

எம்ஐடி பேராசியர் ஜார்ன் டங்கல்லும் இயற்பியல் ஆய்வாளர் நிக்கோலா ரோமியோவும் இந்தப் புதிருக்கு விடை தந்தனர். குறைவாகக் காற்று ஊதிய பலூனை, கூடுதல் காற்று நிரப்பிய பலூனுடன் இணைத்தால் என்னாகும்? இரண்டு பலூன்களின் காற்றும் சமநிலையாகி, இரண்டும் ஒரே அளவு ஆகும் என்றுதான் நினைப்போம். ஆனால், சிறிய பலூன் மேலும் சிறிதாகும்; பெரிய பலூன் மேலும் பெரிதாகும்! உருவில் சிறிய பலூன் தன்னுள் உள்ள காற்றைப் பெரிய பலூனுக்குள் செலுத்தி மேலும் சிறிதாகும். இதே போலதான் சினைக்கரு முட்டையில் இருக்கும் சிறிய தாதி செல்கள் தம்மிடமிருக்கும் பொருள்களைப் பெரிய செல்லுக்குள் அனுப்பி மேலும் மேலும் சிறிதாகின்றன.

பழ ஈக்கள், முதுகெலும்புள்ள உயிரினங்களின் ஆரம்பநிலை கரு வளர்ச்சி பாலூட்டி கரு வளர்ச்சி யுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. ஆனால், மனிதன் உள்பட இதர பாலூட்டிகளின் சினைக்கரு முட்டை வளர்ச்சியும் பழ ஈக்களின் சினைக்கரு முட்டை வளர்ச்சியும் அதே வழி முறையில்தான் நடைபெறுகிறதா என்பது இன்னமும் புதிர்தான்.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x