Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

பசுமை சிந்தனைகள் 08: சமூகநீதியின் நீட்சியே சூழலியல் பாதுகாப்பு!

நாராயணி சுப்ரமணியன்

‘இயற்கைக்கு முன்னால் அனைவரும் சமம்’ என்பதே பொதுவான நம்பிக்கை. ஆனால், இயற்கைப் பேரிடர்கள் தாக்கும்போது அனைவரும் ஒரே மாதிரியாகப் பாதிக்கப்படுவதில்லை என்பதே கள எதார்த்தம். இனம், சாதி, மதம், வர்க்கம் ஆகியவற்றால் பிளவுபட்டுள்ள சமூக அடுக்குகளில் பொதுவாகக் கீழ்மட்டத்தில் இருப்பவர்களே மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல், இதுபோன்ற விளிம்புநிலை மக்கள் வசிக்கும் இடங்கள் சூழலியல்ரீதியாகச் சீர்குலைந்தவையாகவும் இருக்கின்றன.

இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் சூழலியல் நீதி (Environmental justice) என்கிற கருத்தாக்கம். 1980-களின் தொடக்கத்தில், அமெரிக்காவில் இந்தக் கருத்தாக்கம் செழுமைப்படுத்தப்பட்டது. இனம், நிறம், வர்க்கம், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது போன்ற பிரிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, சூழலியல் பேரிட ரின் சுமைகளோ சூழலியல் பாதுகாப்பின் நன்மைகளோ, நியாயமான முறையில் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதே இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படை. சுருக்கமாக, சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சூழலியல் செயல்பாடுகளில் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வதற்கான முயற்சி இது. சூழலியல் சட்டங்கள், திட்ட வரையறைகள், விதிமுறைகள் உருவாக்கப்படும்போதும் அமல்படுத்தப்படும்போதும் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்பதே இந்தக் கருத்தாக்கத்தின் சாராம்சம்.

சூழலியல் அநீதி

சூழலியல் நீதி என்கிற கருத்தாக்கம், சூழலியல் அநீதிகளுக்கு எதிராக எழுந்த உரிமைக்குரல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. குப்பை மேடுகள், நச்சுக்கழிவுகள் கொட்டப்படும் இடங்கள் விளிம்புநிலை மக்களின் வாழிடங்களுக்கு அருகிலேயே அமைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகளால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையானோர் வறியவர்கள்.

அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி ஆற்றின் கரையோரத்தில், 136 கிலோமீட்டருக்கு நீளும் ஒரு பட்டையான நிலப்பகுதியில் 125 பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகள் உள்ளன. விளிம்பு நிலை மக்கள், கறுப்பின மக்கள், வறியவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த நிலப்பகுதியில் தொடர்ந்து நச்சுக் கழிவுகள் கொட்டப்படுவதால், இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் புற்றுநோயால் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த இடத்திற்கே ‘புற்றுநோய் சந்து’ (Cancer Alley) என்று பெயரிடப் பட்டுள்ளது.

விளிம்புநிலை மக்களின் வாழ்விடங்கள் எவ்வாறு நச்சுக் கழிவுகளுக்கான களங்களாக மாறு கின்றன, சூழலியல் அநீதி எவ்வளவு கொடுமையானது என்பதை உலகுக்கு உணர்த்தும் எடுத்துக்காட்டாக இந்த இடம் மாறிவிட்டது.

சூழலியலும் சாதியும்

காற்று மாசு அதிகரிக்கும்போது முகக் கவச வசதிகூட இல்லாமல் இருப்பவர்கள் விளிம்புநிலை மக்களே. நகரங்களில் அதிக நெரிசல் இருக்கும் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து நகர்ப்புற வெப்பத் தீவுகள் (Urban Heat Islands) உருவாகும். அப்போது வேறு இடங்களுக்கு இடம்பெயர்வது விளிம்புநிலை மக்களுக்குச் சாத்தியமில்லை. சூழலியல் பேரிடர்களால் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் விளிம்புநிலை மக்கள், கடலோரச் சாலை விரிவாக்கத்துக்காக அப்புறப்படுத்தப்படும் மீனவர்கள், காடுகளின் பாதுகாப்புக்கு என்று சொல்லப்பட்டு வெளியேற்றப்படும் தொல்குடிகள் என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

‘பொதுவாகக் கறுப்பின மக்கள் என்றாலே காட்டுமிராண்டிகள், அழுக்கானவர்கள், மாசுபட்டவர்கள் என்கிற கருத்தாக்கம் வெள்ளையர்களிடையே பரவலாக இருக்கிறது. ஆகவே, அவர்கள் வசிக்கும் இடங்கள் மாசுபடும்போது யாரும் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. அழுக்கான இந்த இனத்துக்கு அது தேவைதான் என்கிற எண்ணமே நிலவுகிறது’ என்று 2001 ஆய்வுக்கட்டுரை ஒன்றில் ரைட் மில்ஸ் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்து இந்தியாவில் நிலவும் சாதி அடுக்குமுறைக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் ஒரு பொருளைத் தொட்டாலே அந்தப் பொருள் ‘மாசு அடைந்துவிட்டது, அழுக்காகிவிட்டது’ என்கிற எண்ணம் இருக்கும் இடங்களில், ஒடுக்கப்பட்டவர்களின் வாழிடம் சூழலியல் மாசுபாட்டைச் சந்திக்கும்போது யாரும் கவலைப்படுவதில்லை.

சூழலுக்கும் சாதிக்கும் நுணுக்கமான பிணைப்புகள் உண்டு. நீர், நிலம் முதலிய வளங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மறுக்கப்படுகின்றன. நீருக்கும் ஒடுக்கப்பட்ட வர்களுக்கும் இடையே ஒரு சாதிப்பூட்டு தொங்குகிறது என்று ‘சாதியும் இயற்கையும்’ (Caste and Nature) என்கிற நூலில் முகுல் ஷர்மா குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் சூழலியல் பிரச்சினைகளைப் பேசும்போது சாதி ஒடுக்குமுறைகளையும் கணக்கில் கொண்டாக வேண்டும். உலகில் நடக்கும் சூழலியல் நீதிக்கான போராட்டங்களைத் தொகுத்துவரும் சூழலியல் நீதி வரைபடம் (Environmental Justice Atlas), இந்தியாவிலிருந்து 344 போராட்டங்களை ஆவணப்படுத்தியிருக்கிறது.

ஆரோக்கியமான சூழலில் வசிப்பது என்பது ஓர் அடிப்படை மனித உரிமை. தூய்மையான நீர், சுகாதாரம், உடல்நலம், உணவு ஆகியவற்றுக்கான அடிப்படை உரிமைக்கும் இதற்கும் நெருக்கமான பிணைப்பு உண்டு. அந்த உரிமை அனைவருக்கும் கிடைக்க வேண்டுமானால் சூழலியல் அநீதிகள் அனைத்தும் களையப்பட்டாக வேண்டும்.

கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x