Published : 04 Jun 2021 03:13 am

Updated : 04 Jun 2021 09:57 am

 

Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 09:57 AM

இரண்டு ரஜினி ரசிகர்கள் இணைந்து ஒரு படம்! - கார்த்திக் சுப்பராஜ் பேட்டி

interview-with-karthik-subbaraj
கார்த்திக் சுப்பராஜ்

‘ஜிகிர்தண்டா’, ‘பேட்ட’ போன்ற மாறுபட்ட கேங்ஸ்டர் திரைப்படங்களைக் கொடுத்தவர் கார்த்திக் சுப்பராஜ். ‘புதுப்பேட்டை’, ‘மாரி’ ‘வடசென்னை’ படங்களின் மூலம் மாறுபட்ட கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் கலக்கியவர் தனுஷ். இவர்கள் இருவரும் ‘ஜகமே தந்திரம்’ எனும் கடல் கடந்த கேங்ஸ்டர் படத்துக்காக இணைந்திருக்கிறார்கள். விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அளித்த பேட்டியிருந்து ஒரு பகுதி...


சுருளி என்கிற படத்தின் தலைப்பு ‘ஜகமே தந்திரம்’ என மாறக் காரணம் என்ன?

சுருளி என்கிற பெயரை வைத்துக்கொண்டு படப்பிடிப்புக்குச் சென்றோம். ஆனால், கதைக் கருவுடன் தத்துவார்த்த ரீதியாக ஏதாவது தொடர்பு வேண்டும் என யோசித்தேன். அப்போது தலைவர் ரஜினியின் ‘ஜகமே தந்திரம்’ படலைக் கேட்டபோது கச்சிதமாக ஒத்துப்போனது. குழுவில் அனைவருக்கும் பிடித்துப்போய்விட்டது. அப்படித்தான் ‘ஜகமே தந்திர’மாக மாறியது.

இந்தக் கதையின் தொடக்கப் புள்ளி என்ன?

'ஜிகர்தண்டா' திரைப்படம் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவுக்குத் தேர்வாகி இருந்தது. அப்போது அங்கு போயிருந்தேன். அங்குள்ள தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தபோது, இந்த நகரத்தை வைத்து தமிழில் ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்க வேண்டும் என நினைத்தேன். இங்குள்ள கேங்ஸ்டரும், மதுரையிலிருந்து இங்கே பிழைக்க வந்த ஒரு கேங்க்ஸ்டரும் ஒரே கதையில் இருந்தால் எப்படியிருக்கும் என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அதுதான் தொடக்கப் புள்ளி.

ட்ரெய்லரில் படத்தின் மொத்தக் கதைச் சுருக்கத்தையும் சொல்லிவிட்டீர்களே?

படம் தொடங்கிய பத்து நிமிடத்தில் கதையின் சவால் சொல்லப்பட்டு விடும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது திரைக்கதை. ஒரு திரைப்படம் என்பதே திரைக்கதைதானே..

ஓடிடி வெளியீடு என்றதும் படத்தில் என்னவெல்லாம் மாறியது?

இது திரையரங்க வெளியீட்டுக்காக எழுதி எடுக்கப்பட்ட படம். இறுதிக் கட்டத்தில்தான் ஓடிடி என முடிவானது. அதனால் பெரிதாக மாற்றங்கள் செய்ய முடியவில்லை. ஓடிடி தரப்பும் இந்தத் திரையரங்க வடிவத்தைப் பார்த்துத்தான் வாங்க முன்வந்தார்கள். பாடல்களை நீக்கியது மட்டுமே நாங்கள் செய்த முக்கியமான மாற்றம்.

தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி தவிர, வேறு எந்த வகையில் இந்தப் படம் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கலாம்?

தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’, ‘கர்ணன்’ ஆகிய இரண்டுமே பெரிய வெற்றி படங்கள். சீரியஸான படங்களும்கூட. ஆனால் ‘ஜகமே தந்திரம்’ ஒரு கேங்ஸ்டர் படம். தனுஷ் நடிப்பிலேயே நிறைய வித்தியாசத்தை ரசிகர்கள் காண்பார்கள். இந்தப் படத்தில் அவரது நடிப்புத் திறனுக்கு நிறைய தீனி போட்டுள்ளோம். அவர் ஏற்றுள்ள கேரக்டருக்கு நிறைய காமெடி சேர்த்துள்ளோம். கதையோடு காமெடியைச் சேர்ப்பதுதான் எனக்குப் பிடிக்கும். மதுரையில் பரோட்டாக் கடை வைத்திருக்கும் கதாபாத்திரம்தான் சுருளி.

அவர் ஒரு பரோட்டா மாஸ்டர். அம்மாவுக்குக் கட்டுப்பட்டவர். நண்பர்களுடன் ஜாலியாக இருப்பவர். இப்படியொருவர் லண்டன் சென்றால் எப்படி இருக்கும்? விமானத்தில் போனது இல்லை, ஆங்கிலம் தெரியாது, ஊர் தெரியாது எனும்போது கதைக்குள்ளேயே ஒரு காமெடிக் களம் உருவாகிவிட்டது. அதை வைத்து ஒரு கேங்ஸ்டர் கதை எழுதுவது சவாலாகத்தான் இருந்தது. திரைக்கதையைப் படித்துவிட்டு ‘காமெடி, காதல், எமோஷன் என எல்லாம் கதைக்குள்ளே இருக்கிறது’ என்று தனுஷ் பாராட்டினார்.

ராபர்ட் டி நீரோ, அல் பசீனோ ஆகிய ஹாலிவுட் நடிகர்களை இந்தப் படத்தில் நடிக்கவைக்க முயற்சிசெய்தீர்களே?

அது நீண்ட ’ப்ராசஸ்’ ஆக இருந்தது. அங்கே ஒவ்வொரு நடிகரும் ஒரு ஏஜென்சியுடன் தொடர்பில் இருக்கிறார்கள். முழுக்கதை, சம்பளம், படப்பிடிப்பு நாட்கள் ஆகியவற்றை நாம் ஏஜென்சிக்கு அனுப்ப வேண்டும். முதலில் அந்த ஏஜென்சியில் இருப்பவர் கதையைப் படிப்பார். அவருக்குக் கதை பிடித்து, சம்பளம் ஏற்புடையதா என்பதையெல்லாம் பார்த்து அவரே முடிவுசெய்வார். அவருக்கு ஒத்துவரவில்லை என்றால் அங்கேயே முடிந்துவிடும். அந்த வகையில் இந்தக் கதை பலருக்கும் பிடித்திருந்தது. சம்பளம்தான் ஒத்துவரவில்லை.

படம் ஓடிடியில் வெளியாவதில் தனுஷுக்கு வருத்தம் இருப்பது அவரது ‘ட்வீட்’டில் தெரிகிறது. உங்களுக்கு எப்படி?

எல்லோருக்கும் வருத்தம்தான். படம் எடுக்கும்போது திரையரங்கில் மக்கள் எப்படி ரசிப்பார்கள் என்று யோசித்து யோசித்து எடுத்தோம். படத்துக்கான தணிக்கையும் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. அப்போது ‘மாஸ்டர்’ படத்துடன் வெளியிடலாமா, இல்லை அதன் பின்பு வரலாமா என்றெல்லாம் பேசினோம். ஆனால், கரோனா நெருக்கடியால் சூழல் மாறியது. ஓடிடி வெளியீடு என்று முடிவானதும் முதலில் என்னால் ஏற்க முடியவில்லை. இப்போது ஏற்றுக்கொண்டு பேசுகிறேன் என்றால் பல விஷயங்களைக் கடந்து வந்ததால்தான். இதுதான் யதார்த்தம், எதிர்காலம் இப்படித்தான் என்று உணர்ந்து அதற்கு எற்பத் தகவமைத்துக்கொள்ள கொஞ்சம் நேரமெடுக்கும் தானே..

தனுஷுடன் பணியாற்றியபோது அவருக்கும் ரஜினிக்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருப்பதாக அவதானித்தீர்கள்?

சிறு வயதுமுதல் ரஜினி சாரின் படங்களைப் பார்த்து நடிக்க வருபவர்களுக்குக் கண்டிப்பாக அவருடைய தாக்கம் இருக்கும். ரஜினியுடைய மருமகனாக ஆவதற்கு முன்பே தனுஷும் ரஜினி ரசிகர். எனக்குத் தலைவர் ரஜினிதான். நானும் தனுஷும் ரஜினி ரசிகர்களாக ரஜினி படங்கள் பற்றி, அவருடைய ஸ்டைல் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். வீட்டில் ரஜினி எப்படி இருப்பார் என்றெல்லாம் நான் அவரிடம் கேட்டுள்ளேன். அப்போது தனுஷ், ரஜினி போலப் பேசிக் காட்டுவார்.

சில காட்சிகளில் தனுஷ் நடிக்கும்போது ரஜினியுடைய சாயல் வரும். சிலவற்றை தனுஷே கவனித்து, ‘தலைவர் நடிப்பு போல் இருக்கிறது, நான் வேறு மாதிரி செய்கிறேன்’ என்று மாற்றுவார். சில சமயம், ‘இல்லை வேண்டாம், அது ஒன்றும் தவறில்லை, நாம் அவருடைய ரசிகர்கள் தானே, இருக்கட்டும்’ என்று நான் அப்படியே வைத்துவிடுவேன். இது, இரண்டு ரஜினி ரசிகர்கள் இணைந்து எடுத்த ஒரு ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படம்!

மீண்டும் ரஜினியை நீங்கள் இயக்கப்போவதாகச் செய்திகள் வெளியாகினவே?

அவர் இப்போதுதான் ‘அண்ணாத்த’ முடித்து வந்திருக்கிறார். நானும் அந்தச் செய்திகளைப் பார்க்கும்போது நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். பார்க்கலாம், என்ன நடக்கும் என்பது தெரியாது. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.


ரஜினி ரசிகர்கள்Interview with Karthik SubbarajKarthik Subbarajஜிகிர்தண்டாபேட்டதனுஷ்ஜகமே தந்திரம்ஓடிடி வெளியீடுஹாலிவுட் நடிகர்கள்ராபர்ட் டி நீரோஅல் பசீனோOttNetflixJagame Thandhiram

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x