Published : 02 Jun 2021 12:59 pm

Updated : 02 Jun 2021 12:59 pm

 

Published : 02 Jun 2021 12:59 PM
Last Updated : 02 Jun 2021 12:59 PM

பயணத்தை எளிதாக்கலாம்: 'வாட்த்ரீவேர்ட்ஸ்'- தடம் அறிதலின் புது மொழி

what3words-app

தெரியாதவை மனிதனுக்கு எப்போதும் ஒருவித அச்சத்தை அளிக்கும். தெரியாத இடங்களுக்கு வழி தேடிச் செல்லும்போது, நம்மை அறியாமல் ஏற்படும் பதற்றத்துக்கு அதுவே காரணம். 1990களின் இறுதி வரை, சிற்றூர்களிலிருந்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு வரும்போது, அதன் பெரும் பரப்பினால் மிரட்சிக்கு உள்ளானவர்கள் ஏராளம்.

மாநகரங்களில் வழி தெரியாமல் தொலைந்து திரிந்தவர்களின் கதைகளும், நடந்து செல்லும் தூரத்தில் உள்ள இடங்களுக்கு ஆட்டோ ஓட்டுநரால் பல மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட நிகழ்வுகளும் அப்போது ஏராளம் உண்டு. இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இன்றைய தலைமுறையினருக்கு வழி தெரியாமல் தொலைந்துபோவது என்றால் என்ன என்றே தெரியாது.


ஆம். வழி அறிவது என்று வரும்போது, நாம் அற்புதங்களின் யுகத்தில் வாழ்கிறோம். உங்கள் கைப்பேசியில் சில வார்த்தைகளைப் பேசுங்கள், அது உங்களை உங்கள் நண்பர் வீட்டுக்கு அழைத்துச் செல்லும். இன்று நம்மால் கூகுள் மேப் மூலம், சரியான பாதையில் ஒட்டுநர் வாகனத்தைச் செலுத்துகிறாரா என்பதைக் கண்காணிக்க முடிகிறது. வாட்ஸ் அப் லைவ் லொக்கேஷன் ஷேரிங் மூலம், உங்கள் பயணம் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உங்கள் நண்பர்களும் உறவினர்களும் அறிந்துகொள்ள முடிகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை அண்மையில் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் ‘வாட்த்ரீவேர்ட்ஸ்’ (what 3 words) செயலி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது.

வாட் த்ரீ வேர்ட்ஸ்

திருமண விழாவில் எங்கே சந்திக்க வேண்டும் என்பதை உங்கள் சகோதரியிடம் எப்படித் தெரிவிப்பீர்கள்? ஒரு இசை நிகழ்ச்சியில் நீங்கள் இருக்குமிடத்தை உங்கள் நண்பரிடம் எப்படித் தெரிவிப்பீர்கள்? இன்றைக்குப் பயன்பாட்டில் உள்ள கூகுள் மேப் உள்ளிட்ட வழிகூறும் செயலிகள், சாலைகளின் முகவரிகளையே நம்பியுள்ளன. ஆனால், அத்தகைய முகவரிகள் இல்லாத இடங்கள் ஏராளம் உள்ளனவே.

இன்றும், சில நாடுகள் தபால் பின்கோடுகளை முழுமையாக உருவாக்கவில்லை அல்லது மோசமாக உருவாக்கியுள்ளன. மெட்ரிக் அளவீட்டைக் கண்டுபிடித்த பிரான்ஸ் போன்ற நவீன நாடுகளும் இதில் அடக்கம். பிரான்ஸில் தெரு முகவரிகள் இன்றும் முறையாக உருவாக்கப்படவில்லை. இதனால் இன்று பயன்பாட்டில் உள்ள வழி அறிதல் தொழில்நுட்பத்தைப் பயனற்றதாக மாற்றும் இத்தகைய குறைகளை இந்த ‘வாட் த்ரீ வேர்ட்ஸ்’ களைந்துள்ளது.

எளிதானது, துல்லியமானது

70 நபர்களை மட்டும் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், ஒட்டுமொத்த பூமியையும், பத்து அடிக்குப் பத்து அடி என்கிற வீதத்தில், 57,00,000 கோடி சதுரக் கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டத்துக்கும் மூன்று சொற்களைக்கொண்ட தனித்துவப் பெயர்களை அளித்துள்ளது. உதாரணத்துக்கு, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் முகப்பு heartened.chopper.retail என்றும், அதனுள் அமைந்திருக்கும் ரத்த வங்கி toenail.costumes.beads என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த அமைப்பு (கட்டங்களும் பெயர்களும்) உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் எவ்விதத் தடுமாற்றமுமின்றி நீங்கள் இருக்கும் இடத்துக்கு வழிநடத்தும். தற்போது நடைமுறையில் உள்ள கூகுள் மேப்பின் எட்டு இலக்க அட்ச ரேகை, தீர்க்க ரேகை ஆகியவை இணையும் புள்ளிகளைத் தெரிவிக்கும் முறையுடன் (co-ordinates) ஒப்பிடும்போது, இது மிகவும் எளிதானது, துல்லியமானது.

பொதுவாக, குக்கிராமங்களில் முகவரிகள் முறையாக வடிவமைக்கப்பட்டு இருக்காது. அத்தகைய இடங்களுக்குச் செல்ல நேரும்போது, தற்போது பயன்பாட்டில் உள்ள கூகுள் மேப் போன்ற செயலிகளால் நம்மை வழிநடத்த முடியாது. ‘வாட்த்ரீவேர்ட்ஸ்’ செயலியால் அந்தச் சூழ்நிலையிலும் நமக்கு உதவ முடியும்.

ஆபத்தில் உதவும் செயலி

சாலை விபத்து, தீ விபத்து, காட்டுத் தீ, பேரிடர் போன்ற ஆபத்தான சூழலில், அவசர உதவி தேவைப்படுபவர்களுக்குத் தங்கள் இருப்பிடத்தை விவரிக்கச் சிரமமாக இருக்கும். அந்த மாதிரியான இக்கட்டான சூழலில் தங்கள் இருப்பிடத்தைத் துல்லியமாகவும் எளிதாகவும் வழங்க ‘வாட் த்ரீ வேர்ட்ஸ்’ அவர்களுக்கு உதவும்.

உதவி தேவைப்படுபவர், தன்னுடைய கைப்பேசியில் ‘வாட்த்ரீவேர்ட்ஸ்’ செயலியைத் திறப்பதன் மூலம், தன்னுடைய தற்போதைய இருப்பிடத்துக்கான ‘வாட்த்ரீவேர்ட்ஸ்’ முகவரியை அறிந்துகொள்ள முடியும். அதை அவர் மீட்புக் குழுவுக்கோ தீயணைப்புத் துறையினருக்கோ கட்டுப்பாட்டு அறைக்கோ தெரிவிப்பதன் மூலம் உதவியை விரைந்து பெற முடியும்.

உலகெங்கும் பரவும் முகவரி

இந்தத் தொழில்நுட்பம் தற்போது பரவலாக உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மங்கோலியா, ஐவரி கோஸ்ட், நைஜீரியா போன்ற நாடுகள் இதைத் தங்கள் அதிகாரபூர்வ அஞ்சல் அமைப்பின் அங்கமாகச் சேர்த்துள்ளன. மெர்சிடஸ் கார்களின் ஜிபிஎஸ் முறைமையில் ‘வாட் த்ரீ வேர்ட்ஸ்’ இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், டாடா நெக்ஸான் கார்கள் ‘வாட் த்ரீ வேர்ட்ஸ்’ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. Navmii போன்ற சில செயலிகளினுள்ளும் இந்தத் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல ஜி.பி.எஸ். செயலிகள் ‘What 3 words’ தொழில்நுட்பத்தைத் தங்களின் அங்கமாக மாற்றிவருகின்றன.

எங்கே இதைப் பெறுவது?

What3words மொபைல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட இருப்பிடத்துக்கான What3words லேபிளைக் கண்டுபிடிக்கவும் அல்லது ஒரு லேபிள் எந்த இடத்தைச் சுட்டிக்காட்டுகிறது என்பதைக் கண்டுபிடிக்கவும், நீங்கள் இந்த இலவச மொபைல் செயலி அல்லது வலைத்தளத்தைப் பயன்படுத்தலாம். இந்தச் செயலி ஆஃப்லைனிலும் இயங்கும் என்பது கூடுதல் சிறப்பு. இதன் மூலம், Wi-Fi அல்லது மொபைல் தரவு இணைப்பு இல்லாமலேயே இந்த மூன்று சொல் முகவரியை நம்மால் கண்டறிய முடியும்.

மூன்று வார்த்தைகள் போதும்

‘வாட்த்ரீவேர்ட்ஸ்’ ஆங்கில மொழியோடு மட்டும் தனது சேவையைச் சுருக்கிக்கொள்ளவில்லை. உலகில் உள்ள அனைவரும் தங்கள் தாய்மொழியில் What3words செயலியைப் பயன்படுத்தும் நோக்கில் தனது சேவையை அது விரிவாக்கி வருகிறது. 26 மொழிகளில் இன்று அந்தச் செயலியை நாம் பயன்படுத்த முடியும். இந்த எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவருகிறது.

ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் புரட்சியை ‘வாட் த்ரீ வேர்ட்ஸ்’ ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புரட்சி காட்டுத்தீயைப் போன்று உலகெங்கும் பரவி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில், தடம் அறிதலின் புதுமொழியாக, உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக ‘வாட் த்ரீ வேர்ட்ஸ்’ முகவரி மாறும். அப்போது நம்முடைய முகவரி வெறும் மூன்று வார்த்தைகள் மட்டும் கொண்டதாக இருக்கும்.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.inதவறவிடாதீர்!

What3wordsWhat3words appபயணத்தை எளிதாக்கலாம்மூன்று சொற்கள்தடம் அறிதல்கூகுள் மேப்வாட்த்ரீவேர்ட்ஸ்பின்கோடுசாலை முகவரிகூகுள் பிளே ஸ்டோர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x