Last Updated : 01 Jun, 2021 03:12 AM

 

Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

அறிவுக்கு ஆயிரம் கண்கள் 07: சிப்ஸை அடுக்குவதும் மருந்து ஆராய்ச்சியும்

உருளைக்கிழங்கு சீவல் (Potato chips) பாக்கெட் வாங்குவோம். பெரிய சீவல் எல்லாம் மேலே இருக்கும், சாப்பிட்டுத் தீரத் தீர கீழே இருக்கும் சீவல் எல்லாம் சின்னதாக இருக்கும். அதனால், ஒரு சீவல் பாக்கெட் வாங்கியதும் கடகடவென பெரியதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு, சின்னதையெல்லாம் தங்கைக்கோ தம்பிக்கோ தள்ளிவிடுவோம்.

ஒரு பொருள் பெரிதாக இருந்தால், அது கீழே இருக்க வேண்டும், சிறிய பொருள்கள் மேலே இருக்க வேண்டும். அடர்த்தியையும் எடையையும் பொறுத்து, இயற்பியல் இப்படித்தானே சொல்கிறது? எடை அதிகமான பொருள் நிலத்தில் இருப்பதற்கும், எடை குறைவான தூசு காற்றில் அலைவதையும்தானே பார்க்கிறோம்? ஆனால், நம் கைக்கு வரும்போது ஏன் பெரிய சீவல் மேலேயும், சிறியவை கீழேயும் இருக்கின்றன?

இடத்தை மாற்றுவது யார்?

சீவல் தயாரிப்பு நிறுவனம் உருளைச் சீவல்களை பாக்கெட்டில் அடைக்கும்போது, பெரிய சீவல்கள் மேலே, சின்ன சீவல்கள் கீழே என்று பிரித்தெல்லாம் அடைப்பதில்லை. ஆனால், கொண்டுவரும் வழியில், அந்தப் பாக்கெட்டுகள் குலுங்குவதால் மட்டுமே இப்படி நடக்கிறது.

பெரும்பாலும் உருளைச் சீவல்கள் நீள்வட்ட வடிவில் இருக்கின்றன. இந்தச் சீவல் செங்குத்தாக நிற்க முடியாது. படுக்கைவசத்தில்தான் இருக்கும். பாக்கெட்டில் முதன்முதலில் அடைக்கப்படும்போது சிறிய, பெரிய அளவுகளில் இருக்கும் சீவல்கள் அனைத்தும் கலந்தே இருக்கும். பாக்கெட்டைக் குலுக்கும்போது, படுத்தவாக்கில் இருக்கும் இந்த சீவல்கள் கொஞ்சம் சாயும். கிடைக்கும் இடைவெளியில் சின்ன சீவல்கள் கீழே போகும். இப்படியே மீண்டும் மீண்டும் சீவல் பாக்கெட் குலுக்கப்படும்போது, பெரிய சீவல்கள் படுக்கைவசத்தில் இல்லாமல், சாய்வு நிலைக்குப் போகும். அப்படியே சின்ன சீவல் எல்லாம் கீழே போக, பெரிய சீவல்கள் மேலே வந்துவிடும்.

இந்த அறிவியலை ‘பிரேசில் நெற்று விளைவு’ (Brazil nut effect) என்கிறார்கள். பாதாம், பிஸ்தா, கடலைப்பருப்பு போன்ற பருப்பு, கொட்டைகளைக் கலந்து வரும் ஒரு பாக்கெட்டில் பெரிய விதைகள் மேலே இருக்கும். இப்படி, பருப்பு-கொட்டைகளை அடைத்து வந்த பாக்கெட்டுகளில் இந்த விளைவைப் பார்த்ததால், அதன் அடிப்படையில் ‘பிரேசில் நெற்று விளைவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மிக்ஸர் பாக்கெட்களிலும், பெரும்பாலும் கடலைப்பருப்பும், பொட்டுக்கடலையும் மேலே இருப்பது இந்த விளைவால்தான். பிரேசில் நெற்று விளைவைப் புரிந்துகொள்ள, வீட்டிலிருக்கும் பலவிதச் சமையல் பொருள்களை ஒரு டப்பாவில் போட்டுக் குலுக்கிப் பாருங்கள்.

கற்கள் ஏன் மேலே இருக்கின்றன?

கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் சிறுமணல் துகள்கள் கீழேயும் பெரிய கூழாங்கற்கள் மேலேயும் இருப்பதற்கும் இந்த விளைவுதான் காரணம். கூழாங்கற்களின் இடுக்கின் வழியே மணல் துகள்கள் நழுவி கீழே போய்விடுகின்றன. தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு, இடிபாடுகளுக்கு இடையில் உடைந்த பொருள்கள் கிடைக்கும்போது, பெரிய பொருள்கள் மேலேயும் சிறிய பொருள்கள் கீழேயும் பல வேளைகளில் கிடைக்கும். இதைப் பொறுத்து, அந்த இடிபாடு எப்போது ஏற்பட்டிருக்கலாம், அந்த இடத்தில் பூகம்பம் உள்ளிட்ட நிலத்தட்டு நகர்வு ஏற்பட்டிருக்குமா, அதனால்தான் மேலே கீழே என்று பொருள்களுடைய அளவின் அடிப்படையில் பிரிந்திருக்கின்றனவா என்பதைக் கணிக்க முடியும்.

ஒரு நீள்வட்ட சீவல், படுக்கைவசத்தில் இருக்கிறதா, இல்லை சாய்ந்து சிறிய சீவல்களுக்கு வழிவிடுகிறதா என்பதைப் பொறுத்து, பிரேசில் நெற்று விளைவைப் புரிந்துகொண்டோம். மேலோட்டமாகப் பார்த்தால், இதுதான் அடிப்படை என்றாலும், ஒரு பொருளின் வடிவம், கலவையில் இருக்கும் பொருள்களின் நிறை, அடர்த்தி உள்ளிட்டவற்றைக் கணக்கில்கொண்டு பல ஆய்வுகள் நடைபெறுகின்றன. இதற்குக் காரணம், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட பல இடங்களில் இந்த விளைவு நிகழ்கிறது.

ஒரு மருந்தைத் தயாரிக்க பலவகை மூலக்கூறுகளை இணைத்து, வினைபுரிய வைக்க வேண்டும். பெரிய மூலக்கூறுகள் - பெரிய துகள்கள் மேலே வந்து, சிறிய துகள்கள் கீழே போவதால், சரிவிகிதத்தில் ஒரு மருந்துக்கலவை கிடைக்காது. அதனால்தான், பிரேசில் நெற்று விளைவைப் புரிந்துகொள்ள ஆய்வாளர்கள் மெனெக்கெடுகிறார்கள்.

கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x