Published : 11 Dec 2015 11:16 AM
Last Updated : 11 Dec 2015 11:16 AM

கோலிவுட் கிச்சடி: பிரேமம் சேதுபதி

கண்ணீர் டிசம்பர்!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கும் சென்னை சர்வதேசப் படவிழா கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஜனவரி முதல் வாரத்துக்கு (ஜனவரி 6-ம் தேதி முதல் 13 வரை) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எத்தனை சிறந்த உலகப் படங்கள் வந்தாலும் வெள்ளத்தின் சுவடுகள் மெல்ல அகன்றால்தான் அவற்றைக் கொண்டாட முடியும் என்ற ரசிகர்களின் மனநிலையை அறிந்து செய்யப்பட்டிருக்கும் விழாக்குழுவின் முடிவைத் திரை ஆர்வலர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.

நட்டியின் நாயகி

இந்திப் பட உலகின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வருபவர் நட்டி என்கிற நட்ராஜ். நாயகனாகவும் இவரை நிலைநிறுத்திய படம் ‘சதுரங்க வேட்டை’. தற்போது அறிமுக இயக்குநர் தாஜ் இயக்கத்தில் ‘போங்கு’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருப்பவர் ஓர் உலக அழகி. கடந்த 2014-ம் ஆண்டு உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ருஹி சிங்தான் அவர். மதூர் பண்டார்கர் இயக்கிய ‘காலண்டர் கேர்ள்ஸ்’ படம் உட்பட இரண்டு இந்திப் படங்களில் நடித்துவிட்டுத் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

பிரேமம் சேதுபதி

நிவின்பாலி, சாய் பல்லவி நடிப்பில் ‘நேரம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடைந்திருக்கும் மலையாளப் படம் ‘ பிரேமம்’. இந்தப் படத்தை எந்த மொழியில் மறுஆக்கம் செய்தாலும் அதில் ‘பிரேமம்’ படத்தின் உணர்வுகளையும் அழகுகளையும் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகமே என்று திரையுலகைச் சேர்ந்த இயக்குநர்கள், இணையவாசிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்தார்கள்.

ஆனால் தமிழில் இந்தப் படத்தை தனுஷ் தயாரிக்க அவரது மனைவி ஐஸ்வர்யா மறுஆக்கம் செய்து இயக்குவது உறுதியாகியிருக்கிறது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் ‘இறைவி’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கும் விஜய் சேதுபதிதான் இந்தப் படத்தில் நிவின் பாலி ஏற்ற வேடத்தில் நடிக்க இருக்கிறார். நிவின்பாலிக்கு இணையாகப் படத்தைத் தோள்களில் சுமந்த அந்த மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஹன்சிகா முடிவாகியிருக்கிறார். மற்ற இரண்டு பேரைப் புதுமுகங்களாகத் தேட ஆரம்பித்திருக்கிறார்களாம்.

கோடிகளைக் காணவில்லை

தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் மழை பெய்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னை, கடலூர், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள்தான். இந்த மூன்று மாவட்டங்களிலும் கடந்த இரண்டு வாரங்களாக வெளியான திரைப்படங்களின் வசூல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இஞ்சி இடுப்பழகி, 144, உப்புக்கருவாடு, உறுமீன் ஆகிய படங்கள் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றபோதும் இவற்றைக் காணப் போதிய ரசிகர்கள் வரவில்லை.

மேலும் பெரும்பாலான திரையரங்குகளுக்கு மின்சாரம் பெரும் பிரச்சினையாக இருந்தது என்கிறார்கள் விநியோகஸ்தர்கள் தரப்பில். இதனால் கடந்த இரண்டு வாரங்களில் குறைந்தபட்சம் 20 கோடி வசூல் இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

எளிமை சந்தியா!

காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சந்தியா. சமீபத்தில் வெளியான ‘கத்துக்குட்டி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய இவர் இன்னொரு பக்கம் ‘திமிரு - 2’ படத்தில் கதாநாயகியாகவும் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார். இதற்கிடையில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சேர்ந்த மென்பொருள் நிறுவன தொழில்முனைவோரான வெங்கட் சந்திரசேகரன் என்பவரின் கரம் பற்றியிருக்கிறார். மாப்பிள்ளையின் வீடு இருக்கும் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பைச் சந்தித்தவை என்பதால் கோலாகலமாக திட்டமிடப்பட்ட நிலையில் திருமண விழாவை மிக எளிமையாக நடத்தி முடித்திருக்கிறார்கள் சந்தியாவின் பெற்றோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x